தமிழ் சமூதாயம் மற்றவர்களிடம் கையேந்துபவர்களாக இருக்கின்றோம்.

(படுவான் பாலகன்) எமது சமூதாயத்தில் தமக்கு அரசாங்கம், அரசசார்பற்ற நிறுவனங்கள் உதவி வழங்க வேண்டும் என்ற மனப்பாங்குடனே மக்கள் இருந்து கொண்டிருக்கின்றனர். அதனால் நாங்கள் மற்றவர்களிடம் கையேந்துபவர்களாக இருக்கின்றோம். அதைவிடுத்து கேட்கிற நிலையில் இருந்து வழங்குகின்ற நிலைக்கு கைகள் மாற வேண்டும். நாங்கள் நாங்களாக வாழ்ந்தால் மற்றவர்களுக்கு நாங்கள் உதவி செய்பவர்களாக மாற முடியும். 9வருட காலங்களாக மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் வேள்ட்விஸன் நிறுவனம் வேலைசெய்து கொண்டிருக்கின்றது. பலவிதமான உதவிகளை பொருளாதார மேம்பாட்டிற்கு வழங்கியிருக்கின்றது. இதற்கு இதுவரை மக்கள் பொருளாதாரத்தில் என்ன பெறுபேற்றை வெளிக்காட்டியிருக்கின்றனர். நிறுவனங்களின் உதவியைப் பெற்று பொருளாதாரத்தை உயர்த்தி இருக்கின்றோம் அதற்காக எங்களது சமூர்த்தி முத்திரை வேண்டாம் என்று எத்தனைபேர் கூறியிருக்கின்றனர் என்றால் அது இல்லை. மட்டக்களப்பு மாவட்டம் வறுமையில் மிகமோசமாக உள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் எனது பார்வையில். மோசமான நிலையில் இல்லை.  திட்டம் இட்டு செயல்களை செய்ய முடியாத நிலையில் இருக்கின்றோம். அதனால்தான் அவ்வாறு கூறிக்கொண்டிருக்கின்றோம்.  இதற்கு காரணம் மற்றவர்களை, மற்றவர்களது நாகரீகத்தை பின்பற்றுவது எமது கலாசாரமாக இருக்கின்றது. என மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் இன்று(19) செவ்வாய்க்கிழமை வேள்ட்விஸன் நிறுவனத்தின் அனுசரணையில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு உக்டா சமூகவளநிலையில் நடைபெற்றபோது கலந்து கொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார். 


பிரதேச செயலாளர் தொடர்ந்தும் அங்கு உரை நிகழ்த்துகையில் உழைக்கும் பணத்தில் ஆடம்பரத்திற்கு செலவு செய்யும் தொகை, தொலைபேசிக்கு செலவு செய்யும் பணம் அதிகமாக இருக்கின்றது இவை தேவையா? ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது மூன்று தொலைபேசிகள் உள்ளது. அதேபோல உழைக்கும் பணத்தில் அழுகு நிலையங்களுக்கு எவ்வளவு செலவிப்படுகின்றது, மதுபானசாலைக்கு எவ்வளவு செலவு செய்யப்படுகின்றது. இவற்றிக்காக செலவழிக்கப்படும் பணத்திற்கு போசாக்கான உணவை உட்கொண்டால் போசாக்கு இல்லை என்ற நிலை ஏற்படாது.  அனைவரும் பண்பாட்டின் அடிப்படையில் வாழ வேண்டும். அதற்கேற்ற வகையில் பாரம்பரியமான பொருட்களையே பயன்படுத்த வேண்டும். அதைவிடுத்து இப்போதைய அழகு பொருட்களை பயன்படுத்தும் போது பலநோய்களும் ஏற்படுகின்றது. இவற்றையெல்லாம் விடுத்து சரியான பாதையை நோக்கி சென்றால் எங்களது வருமானத்தை வைத்துக் கொள்ளமுடியும். 30வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மூதாதைகள் யாரிடமும் தங்கி வாழ்ந்ததில்லை மிக ஆரோக்கியமாகவும் வாழ்ந்தனர். சில விடயங்களில் நாம் மாற வேண்டும். நன்றி கூறுகின்றவர்களாக மாறவேண்டும். சிக்கனமாக செலவு செய்ய வேண்டும். அக்காலத்தில் சமைக்க செல்லும் போதும் ஒரு சிறு தொகை அரிசி எடுத்து வைத்து பின்பு  அரிசி இல்லாத நேரத்தில் அதனை  பயன்படுத்துவர். அக்காலத்தில் மழை காலம் வருவதற்கு முன்பே வீட்டிற்கான பொருட்களை சேமித்து வைத்தனர். இதனால் பிறரிடம் கையேந்தாதவர்களாக இருந்தனர் என்றார்.