ஆலையடிவேம்பு
பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இவ்வாண்டுக்கான பாரம்பரிய கலாசார விளையாட்டு
நிகழ்வுகளுடனான சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவானது கண்ணகிகிராமம், கனகர் விளையாட்டு
மைதானத்தில் இன்று (29) மாலை பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் மிகப்
பிரமாண்டமான முறையில் இடம்பெற்று முடிந்தது.
தமிழ்
தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன்
கோடீஸ்வரன் பிரதம அதிதியாகவும், அம்பாறை மாவட்ட
மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் மற்றும் அம்பாறை மாவட்ட செயலக பிரதம உள்ளகக்
கணக்காய்வாளர் எஸ்.கனகரெத்தினம் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும், அம்பாறை மாவட்ட விளையாட்டு
உத்தியோகத்தர் வி.ஈஸ்வரன் மற்றும் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி
ஏ.எம்.இஸ்மாயில் ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் தேசியக்கொடி,
மாகாணக்கொடி மற்றும் பிரதேச செயலகக் கொடிகளையேற்றி, தேசியகீதமிசைத்து
ஆரம்பித்துவைக்கப்பட்ட மைதானப் போட்டி நிகழ்வுகள் பாரம்பரிய முறைப்படி மங்கல
விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கத்தோடு தமிழர் பெருமக்களின் பாரம்பரியத்தினைப்
பறைசாற்றும் தலையணைச் சமர், கயிறிழுத்தல், கண்கட்டி முட்டியுடைத்தல், சிரிப்புப் போட்டி, சாக்கோட்டம்,
கிடுகிழைத்தல், தேங்காய் துருவுதல், முட்டை மாற்றுதல், தொப்பி எறிதல் ஆகிய போட்டி
நிகழ்வுகள் வளர்ந்தோருக்கும், வினோத உடைப்போட்டி, யானைக்குக் கண் வைத்தல், சமநிலை
ஓட்டம், வினோத உடை, பலூன் ஊதியுடைத்தல், காசு பொறுக்குதல், மிட்டாய் பொறுக்குதல் போன்ற போட்டி நிகழ்வுகள்
சிறுவர்களுக்கும் நடாத்தப்பட்டதுடன் ஒவ்வொரு போட்டி நிகழ்ச்சிகளையும் அதிதிகள்
பார்வையிட்டு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தனர்.
இவ்விளையாட்டு
விழாவின்போது கடந்த வருடம் இடம்பெற்ற மாகாணமட்ட கராத்தே சுற்றுப்போட்டிகளில் ஆலையடிவேம்பு
பிரதேச செயலகத்தின் பிரதம முகாமைத்துவ உதவியாளரும் கராத்தே பயிற்றுவிப்பாளருமான
கே.கேந்திரமூர்த்தியின் வழிநடத்தலின் கீழ் பங்குபற்றி, கட்டா போட்டிகளில் வெவ்வேறுபட்ட
எடைப் பிரிவுகளில் முதலாம், இரண்டாம் இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்ததுடன்,
ஆலையடிவேம்பு மண்ணுக்குப் புகழ் சேர்த்த வீரர்கள் நால்வர் வெற்றிச்சின்னங்களும்
சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
அதனைத்
தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் மற்றும் அம்பாறை மாவட்ட
செயலக பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் எஸ்.கனகரெத்தினம் ஆகியோர் ஆலையடிவேம்பு பிரதேச
வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் ஆற்றிவரும் அளப்பரிய சேவைகளைப் பாராட்டி பிரதேச
செயலாளர் வி.ஜெகதீசனால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர். அதேபோன்று பிரதேச
செயலாளரின் சேவைகளைப் பாராட்டிக் கண்ணகிகிராமம், கனகர் விளையாட்டுக் கழக
அங்கத்தவர்களும் அவரைப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர்.
இறுதியாக இவ்விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய
வீர, வீராங்கனைகளுக்கான பரிசில்கள் அதிதிகளால் தொடர்ச்சியாக வழங்கிவைக்கப்பட்டன.
இதேவேளை குறித்த விளையாட்டு விழாவின் ஆரம்பப் போட்டிகளான மரதன்
ஓட்டம், சைக்கிளோட்டம் என்பன இன்று (29) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்றலில்
ஆரம்பமாகி இடம்பெற்றிருந்ததுடன், இவற்றோடு இணைந்தவகையில் பனங்காடு தில்லையாற்றில் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த படகோட்டப் போட்டியானது துரதிஸ்டவசமாக நிகழ்ந்த மீனவர் சங்கப்
பிரதிநிதி ஒருவரின் திடீர் மரணத்தினால் கடைசி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டிருந்தமையும்
இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.



























