
உலகில் வாழும் தமிழ் சிங்கள மக்கள் அனைவருக்கும் இனிய துர்முகி புதுவருட வாழ்த்துக்கள். முரண்பாடுகளை நீக்குவதன் மூலம் தான் நல்லிணக்கத்தை அடைய முடியும் மாறாக எதிரும் புதிருமான கருத்துக்களை வீசுவதால் இணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியாது என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கே. துரைராசசிங்கம் தெரிவித்தார்.
துர்முகி தமிழ் சிங்கள புத்தாண்டு பிறப்iயொட்டி கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராசசிங்கம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இன்னும் ஒரு புத்தாண்டிற்குள் புகுகின்றோம் சூரியச் சுற்றின் அடுத்த சுற்று தொடர்கின்றது வாழ்த்துக்கள் தெரிவிப்பது ஒரு சம்பிரதாயம்தான் என்றாலும் புதிய நம்பிக்கை புதிய மன உணர்வோடு அவை பகிரப்பட வேண்டும்.
வீட்டிலுள்ள பழையனவற்றினை எல்லாம் வீசி விட்டு துப்பரவு செய்கின்றோம்., வீட்டை நிறம் பூசி பொலிவூட்டுகின்றோம் இந்த புற நடைமுறை மட்டும் போதாது. நடந்து முடிந்த சம்பவங்களை எல்லாம் சமாதி கட்டிவிட்டு அவற்றிலிருந்து கற்ற பாடங்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள், எடுத்துச் செல்லுங்கள் என்பதுதான் புத்தாண்டு கற்பிக்கின்ற பாடம்.
சம்பவங்களை சுமப்போமாயின் புதிய பாடங்களைக் கற்க நாம் தயார் படுத்த மாட்டோம். என்றும் எப்போதும் எல்லோரும் தேடுவது நல்லிணக்கம் முரன்பாடுகளை நீக்குவதன் மூலம்தான் நல்லிணக்கத்தை தழுவமுடியும் முரண்பட்டவர்களை அணுகாது அது எப்படி சாத்தியமாகும் ஆகவே முரண்பட்டவர்களை அணுகுதல் அளவளாவுதல் என்பவற்றின் மூலம்தான் இணக்கப்பாட்டை சாத்தியமாக்கமுடியும்.
நல்லிணக்கத்தின் பங்குதாரர்களாக அவர்களும் ஆகும்போதுதான் அது நல்லிணக்கம். தூர தூர நின்றுகொண்டு இருவர் கைகுலுக்க முடியாது இருவரும் நடக்க வேண்டும், பலவற்றைக் கடக்க வேண்டும். தனித்தனி மான அவமானங்களை புறந்தள்ளி பொதுக் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் இந்த சிந்தனையுடன் புத்தாண்டிற்குள் புகுவோம் எல்லோரும் இன்புற்றிருக்க உழைத்திடுவோம் வாழ்க மானிட நேயம் வாழ்க நிலைத்த சமாதானம்.












