மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேரில்லாவெளிக் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 28 வீடுகள் பயனாளிகளிடம் இன்று திங்கட்கிழமை(16) கையளிக்கப்பட்டுள்ளன.
முன்னர் சுவீடன் கூட்டுறவு நிறுவனமாக இருந்த 'வீ எபெக்ற்' நிலையத்தின் உதவியுடன் ஒவ்வொரு வீடும் ஏழு இலட்சத்து 42 ஆயிரம் ரூபாய் செலவில் வரவேற்பு அறை, சமையல் அறை, ஏனைய இரண்டு அறைகள் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது. இவ் வீடுகள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு, ஏறாவூர்ப்பற்று, கிரான் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள மிகவும் கஸ்டப்பிரதேசத்திலுள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஏழு கிராமங்களில் இவ் வீடமைப்புத் திட்டத்தினூடாக 192 வீடுகளை கட்டி பயனாளிகளிடம் கையளித்துள்ளதாக சுவீடன் கூட்டுறவு நிலையம் என்று அறியப்பட்ட 'வீ எபெக்ற்' நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி சுபாஷி திஸாநாயக்க தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வசிப்பதற்கு வீட்டைக் கட்டிக்கொடுப்பதில் சுவீடன் மக்கள் தாராளத் தன்மையுடன் உதவியுள்ளார்கள் எனவும் அவர் கூறினார். 'வீ எபெக்ற்' நிறுவனத்தின் ஐந்தாவது வீடமைப்புத் திட்டத்தில் இந்தக் கிராமம் தெரிவு செய்யப்பட்டது.
இவ் வீடமைப்புத் திட்டத்தின் கடைசி வருடம் இதுவாகும். தொடர்ந்து இவ்வாறான மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக இந் நிறுவனம் அற்பணிப்புடன் செயலாற்றும் எனவும் அவர் மேலும் கூறினார்.
இந் நிகழ்வில் 'வீ எபெக்ற்' நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி சுபாஷி திஸாநாயக்க, 'வீ எபெக்ற்' நிறுவனத்தின் கிழக்கு திட்ட இணைப்பாளர் ரி.மயூரன், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், கிரான் பிரதேச பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் யு.உதயசிறிதர், காவியா நிறுவனப் பணிப்பாளர் திருமதி.வை.அஜித்குமார், திமிலைதீவு கா.வ.கூட்டுறவுச் சங்க பொது முகாமையாளர் எம்.நவரஞ்சன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
(செய்தி - ஏ.எச்.ஏ. ஹுஸைன் , சண் சபா)











































