மட்டக்களப்பு மேற்கு வலயத்திலிருந்து 69ஆசிரியர்கள் இடமாற்றம் : 13ஆசிரியர்கள் புதிதாக கடமையேற்பு

(படுவான் பாலகன்) கிழக்கு மாகாணசபையின் கீழ் இயங்கும் அரச பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கான இடமாற்றம் அண்மையில் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தினால் வழங்கப்பட்டிருந்தது. 

திணைக்களத்தின் இடமாற்றத்திற்கேற்ப மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் இருந்து 69ஆசிரியர்கள் வேறு இடங்களுக்கு இடமாற்றப்பட்டிருந்ததுடன் 52ஆசிரியர்கள் வேறு வலயத்தில் இருந்து மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்கு இடமாற்றப்பட்டனர். 


இடமாற்ற கடிதங்கள் வழங்கப்பட்டவர்களில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் இருந்து இடமாற்றப்பட்டவர்கள் ஏனைய வலய பாடசாலைகளில் தங்களது கடமையை பொறுப்பேற்றுள்ள நிலையில் இவ்வலயத்திற்காக நியமிக்கப்பட்டவர்களில் 13ஆசிரியர்களே இதுவரை கடமையை பொறுப்பேற்றுள்ளதாக தெரிய வருகின்றது.

இடமாற்றப்பட்ட ஆசிரியர்கள் பாடசாலையில் கடமையை பொறுப்பேற்காததினால் இரண்டாம் தவணைக்கான பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு 11நாட்கள் கடந்துள்ள நிலையிலும் மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இன்மையால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வலய மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.