ஆலையடிவேம்பு பிரதேசத்துக்கான முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி, பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் இணைப்புக் குழுவின் ஒன்றுகூடல்

ஆலையடிவேம்பு பிரதேச பாலர் பாடசாலை மாணவர்களது பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் அபிவிருத்தி என்பன தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள இணைப்புக்குழுவின் இவ்வருடத்துக்கான முதலாவது உத்தியோகபூர்வக் கலந்துரையாடல் நேற்று (19) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தனால் ஏற்பாடு செய்யப்பட்டு, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் உதவிப் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா, ஆலையடிவேம்பு பிரதேச சபையின் செயலாளர் திருமதி. விஜயராணி கமலநாதன், திருக்கோவில் வலயக் கல்விப் பணிமனையின் உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.தர்மபாலன், பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எஸ்.நிசாந்தினி, கிழக்கு மாகாண முன்பள்ளிக் கல்விப் பணியகத்தின் முகாமைத்துவ உதவியாளர் எம்.மோகனதாஸ், பிரதேச வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவின் உத்தியோகத்தர்கள் மற்றும் விபுலானந்தா, களம், மகாசக்தி, கிரேற் பாலர் பாடசாலைகளின் முகாமைத்துவ சபைகளின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அதிகமாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுவரும் விடயங்களான பாலர் பாடசாலைகளின் சுகாதாரமற்ற சூழல், தரமற்ற கழிப்பிட வசதிகள், சிறார்களுக்கு வழங்கப்பட்டுவரும் போஷாக்கற்ற உணவுகள், குடிநீர் போன்றவற்றை பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களின் உதவியுடன் பரிசோதனைக்கு உட்படுத்தல், ஆங்கிலக் கல்வியை முதன்மைப்படுத்தி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பாடசாலைகளைக் கண்டறிந்து அவற்றுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்தல், முன்பள்ளிகளில் எழுத்துக்களைப் போதிக்கும் கல்வி முறையைத் தடுத்து அறிவுத்திறனை வளர்க்கும் விளையாட்டுக்களை முதன்மைப்படுத்தும் போதனை முறையை வழக்கத்துக்குக் கொண்டுவரல், தற்போது மழைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் பாலர் பாடசாலைகளுக்கு அண்மித்ததாகக் காணப்படும் குழிகள், குன்றுகளைப் எழுத்து மூலம் அறிவித்து பிரதேச சபையின் உதவியுடன் கனரக வாகனங்களைப் பயன்படுத்தி சீராக்கல், முன்னனுமதி பெறப்படாத சிறுவர்களுக்கான பகல்நேரப் பராமரிப்பு மையங்களைப் பதிவுசெய்தல், சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவின் உத்தியோகத்தர்களின் உதவியுடன் குற்றவாளிகளைச் சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தல் போன்ற பல விடயங்கள் அறிக்கையிடப்பட்டதுடன், பிரதேச வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உதவியுடன் 5 வயதுக்குக் குறைந்த சிறுவர்களின் தாய்மார் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களைப் பெற்றுச் செல்வதைத் தடுத்துநிறுத்தும் வேலைத்திட்டங்களைக் கிரமமாக முன்னெடுத்தல் போன்றன தொடர்பான தீர்மானங்கள் இக்கலந்துரையாடலில் எடுக்கப்பட்டன.

அத்துடன் மாதாந்த அறிக்கைகள் மூலம் ஒவ்வொரு பாலர் பாடசாலைகளதும் வரவு - செலவுகள் இணைப்புக்குழுவின் பார்வைக்காகச் சமர்ப்பிக்கப்படவேண்டும், முன்பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்படும் விசேட நிகழ்வுகளுக்காக மாணவர்களிடமிருந்து பணம் அறவிடுவதாயின் ஆலையடிவேம்பு பிரதேசத்துக்கான முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி, பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் இணைப்புக் குழுவின் முன் அனுமதி பெறப்படவேண்டும், அரச காணிகளில் அமையப்பெற்ற முன்பள்ளிகளில் திருத்தங்கள் எவையும் மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பங்களில் பிரதேச செயலாளரின் முன்னனுமதி பெறப்பட வேண்டும் என்பவற்றுடன் முன்பள்ளிகளின் பாடவிதானங்கள் அனைத்துப் பாடசாலைகளுக்கும் பொதுவான ஒன்றாகப் பின்பற்றுவற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் ஒவ்வொரு பாலர் பாடசாலைகளிலும் சரியான கால அட்டவணை கடைப்பிடிக்கப்படவேண்டும், அறவிடப்படும் அனுமதிக் கட்டணம், மாதாந்தக் கட்டணம் ஆகியன தொடர்பில் பொதுவான ஒரு அறவீட்டு முறையைப் பின்பற்றுவதற்கான தீர்மானம் அங்கு முன்மொழியப்பட்டது. பாலர் பாடசாலைகளை வார நாட்களில் மூடுவது சம்மந்தமாக இக்குழுவின் முன்னனுமதி பெறப்படவேண்டும், ஆலையடிவேம்பு பிரதேச முன்பிள்ளைப்பராய அபிவிருத்தி, பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக் குழு அங்கத்தவர்களில் முன்பள்ளிகளுக்கான களப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் உத்தியோகத்தர்களின் கடமைகள் தொடர்பான பட்டியலை முன்பள்ளி ஆசிரியைகளுக்கும் முகாமையாளர்களுக்கும் கையளிப்பது தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டதுடன், பரிசோதனைகளை மேற்கொள்ளும் உத்தியோகத்தர்களுக்கு பாடசாலை நிருவாகத்தால் முழுமையான ஒத்துழைப்புக்கள் வழங்கப்படவேண்டும் எனவும் இனிவரும் காலங்களில் குறைந்தபட்ச கல்வித் தகைமைகளைப் பூர்த்தி செய்தவர்களையே முன்பள்ளி ஆசிரியைகளாக உள்வாங்குதல் தொடர்பான தீர்மானங்களும் அங்கு மேற்கொள்ளப்பட்டன.