மெய்யான மே தினம் எப்போது?


(ரவிப்ரியா)
இன்று மேய்ப்போன் இல்லாத ஆடுகளாக தொழிலாளர்! –
இன்னல் தவிர, மேட்டுநில மழை அறியா பயிர்கள்!;
இரட்சகர்களாக அவர்களால் விலாசம் பெற்றவர்கள்,
இராஜ யோகத்திற்காக மேதின பேரணி! இதுவரை மேகங்களாக வியர்வை மழை பொழிந்தவர்கள்,

இன்னும் மேடைவரை வேகா வெயிலில் பதாதையுடன் -
இனிய வெற்று வாக்குறுதிகளை நம்பி,நம்பி, நலிந்;து,
இதுவே தொடர்கதை என்பது இன்னும்தான் புரியலையா?


இலவசமாக ஊர் ஊராக  பஸ் விட்டு, ஆள் சேர்த்து,
இந்தாங்க சாப்பாடும் சாராயமும் என ஊற்றி கொடுத்து,
இலட்சோப இலட்ச ஆதரவாளர்கள் எமது கட்சியில்தான்,
இடித்துரைத்து கணக்குக் காட்ட சம்பல்தான் தொழிலாளர்!

இன்னல்களைச் சுமந்தவன் பதாதைகள் சுமக்கின்றான்!
இராஜதந்திரத்திற்கு இரையாகும் இளக்கமான இனமாக
இலங்கையில் பாவப்பட்ட ஜென்மங்களாக இருப்பவர்கள்,
இழிச்ச வாயர்களாக இருப்பதுதான் இவர்கள் விதியா?
இரு தலைவர்கள் அடிபடுகையில் - அடிமையாகவே,
இவர்கள் கூட்டங்களில் உழைக்கும் வர்க்கமா?
இன்னிசை ரசிக்க அலைமோதும் கூட்டங்களில்.
இழுபட்டுச் செல்வதால் இன்னல்கள்தான் நீங்கிடுமோ?

இனவாதம் இல்லா கட்சிகளே இங்கு இல்லை.
இழுத்தடிக்காத தீர்வுகளும் இவர்களிடம் இல்லை.
இரங்குவதுபோல் நடித்து கழுத்தை இறுக்கும் துரோகம்-
இறக்கும்வரை  உனக்கு நடந்தே ஆகும் தோழா!

இத்தனை காலம் ஓடாக உழைத்த உன்னை உயர்த்த,
இங்கு உருவான தொழிற் சங்கங்கள் அரசியல் செய்து,
இஸ்டம்போல் செழிப்புடன் வாழ கற்றார்களே தவிர,
இன்றுவரை உங்கள் கஸ்டங்களில் எதுவும் குறைந்ததா?

இந்த ஊர்வலம் கூட்டங்களுக்கு செலவாகும் பணத்தை,
இரண்டு, மூன்று கட்சிகள்  செய்யும் செலவை சேர்த்தால்,
இரண்டு, 3 நாள் சம்பளத்தை தோட்டத் தொழிலாருக்கு,
இலவசமாக வழங்கி வயிற்றுப் பசி போக்கலாமே?

இவ்வாறு; நடந்தால்தான் மேதினம் மெய்யானதாகும்!;
;இல்லையேல் பகட்டும், பம்மாத்தும், போலியுமேயாகும்!