அடிப்படை வசதிகளின்றி அல்லலுறும் குளுவினமடு மக்கள்

(படுவான் பாலகன்) நாட்டில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் நடைபெற்றுவருகின்ற நிலையில் பல கிராமப்புறங்கள் இன்னும் பல்வேறு அபிவிருத்திகள் இடம்பெறாமல் பின்தங்கிய நிலையில் இருப்பதும் துர்பாக்கிய நிலையே மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பகுதி யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த இடமாகவிருக்கின்றது. இப்பிரதேசத்தின் அபிவிருத்தியில் பல்வேறு கிராமங்கள் குறைகளுடனும் இருந்து கொண்டிருக்கின்றது. நாளுக்கு நாள் கூலி வேலை செய்து வாழ்வை வழிக்கொண்டு செல்லும் இம்மக்களின் வாழ்வில் ஒளி பளிச்சன்று பிரகாசிப்பதும் முடியாத காரியமே. பிரகாசித்தினை எட்டிப்பிடிப்பதற்கு பல பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டிய நிலையிருக்கின்ற சூழ்நிலையில் இவர்களுக்கான அடிப்படை வசதிகள் பல மேற்கொள்ளப்படாமல் இருப்பதும் இவர்களது வெளிச்சத்திற்கு தடைகல்லே என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

போக்குவரத்து, குடிநீர், மின்சாரம், கல்வி, வீதி, யானைத்தொல்லை போன்ற பல்வேறு பிரச்சினைகளுடன் தங்களது வாழ்க்கையில் உலா வந்துகொண்டிருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட குளுவினமடு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் மக்களின் உள்ளக்கிடக்கைகளுடனும் மன ஆதங்களையும் கட்டுரை வடிவில் கொண்டு வருகின்றது. 

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட குளுவினமடு கிராமம் வனப்புக்களையும், வயல்வெளிகளையும், புற்தரைகளையும், தாழ்ந்த உயர்ந்த மண்மேடுகளையும் ஆங்காங்கே வீடுகளையும், சிறுசிறு குளங்களையும், ஆலயங்களையும் கொண்டமைந்த கிராமமே குளுவினமடு கிராமசேவை பிரிவு. 229குடும்பங்களைச் சேர்ந்த  772நபர்கள் வசிக்கின்ற பிரிவில் க.பொ.த(சா.த)ப் பாடசாலை ஒன்றும் தரம் - 5வரையான பாடசாலையொன்றும் இரு பாலர் பாடசாலைகளும் அமையப்பெற்றுள்ளது. இப்பிரதேசத்து மக்களது வாழ்வாதர தொழிலாக விவசாயமும், விலங்கு வளர்ப்பும், கூலித்தொழிலும் ஒருசிலரே அரச உத்தியோகத்திலும் பதவி வகிக்கின்றனர்.


பிரதேசத்தின் நகரான கொக்கட்டிச்சோலையில் இருந்து எட்டு கிலோ மீற்றர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள இக்கிராமத்தின் மக்கள் சகலவிதமான அலுவல்களை மேற்கொள்வதற்கும் கொக்கட்டிச்சோலைக்கு செல்லுகின்றனர்.

இப்பிரதேசத்து மாணவர்களின் கல்வியில் ஏற்பட்டிருக்கும் சிரமங்கள் தொடர்பில் மாணவர்களும், பெற்றோர்களும் கூறிய குறைகள் ………

ஒரு இனத்தினது இருப்பிலும் குடும்பத்தின், கிராமத்தின், பிரதேசத்தின், நாட்டின் அபிவிருத்தியிலும் கல்வியே மைக்கல்லாக இருக்கின்றது. கல்வியை இழந்தவன் கண்களை இழந்தவனாகின்றான் அவ்வாறான கல்வியை பெற்றுக் கொள்வதில் இப்பிரதேசத்து மாணவர்கள் அதிக அக்கரையுடனும், ஆர்வத்துடனும் செயற்பாட்டாலும் நகர்புற மாணவர்களுக்கு கிடைக்கின்ற வசதிகளும், வாய்ப்புக்களும் இம்மாணவர்களுக்கு கிடைக்காமை குறித்து ஆதங்கப்படுகின்றனர். 



பாடசாலையையே நம்பி கல்வி கற்கின்ற இம்மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புக்களுக்கான வசதிகளும் இல்லை எனக்கூறுகின்றனர். மறுபுறத்தில் பாடசாலையிலும் மிக முக்கியமான பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாமல் இருப்பதும் இவர்களது கல்வியின் வளர்ச்சிக்கு தடையாகவிருப்பதாக குறிப்பிடுகின்றனர். அரச தொழிலுக்காக அரசாங்க திணைக்களத்தினால் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களை முதன்மையப்படுத்தி திறமைச்சித்தி இருக்க வேண்டும் என விண்ணப்பங்களில் கோரப்படுகின்றது. ஆனாலும் கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்களுக்கு இன்றும் ஆசிரியர்கள் தங்களது பாடசாலைக்கு நியமிக்கப்படவில்லை எனக்கூறும் மாணவர்கள் இதனால் எதிர்கால தொழில்துறைக்கு தங்களை ஈடுகொடுக்க முடியாமல் தங்களது தாய் தந்தையர்கள் மேற்கொள்ளும் தொழில்களையே மேற்கொள்ளவேண்டியிருப்பதாகவும் இதனால் மிகுந்த மனவேதனையுறுவதாக கூறுகின்றனர். 

தங்களுக்கும் நகர்புறப் பாடசாலைகளுக்கு வழங்கப்படுகின்றது போன்று அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் நாங்களும் அவர்களைப் போன்று சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்வோம். ஆனால் உரிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாமையால் நாங்கள் எவ்வாறு சிறந்தபெறுபேற்றை பெற்றுக் கொள்வது என வினாவெழுப்புகின்றனர். மற்றும் தங்களது பாடசாலையில் கட்டிடவசதி இன்மையால் தற்காலிக கூடாரத்திலே தங்களது பிள்ளைகள் கல்வி கற்றுவருவதாகவும் கட்டிடவசதிகளையும் ஏற்படுத்தி வழங்க வேண்டும் எனவும் பெற்றோர் கூறுகின்றனர். 

கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாத நிலையிலும் க.பொ.த(சா.த) பரீட்சையில் சித்திபெறுகின்றனர். ஆனாலும் இவர்களது பெறுபேற்று அதிகரிப்புக்கு ஆசிரியர் இன்மை பெரிதும் பிரச்சினையாகவே இருந்து  கொண்டிருக்கின்றது. இதனால் பாதிக்கப்படுவது மாணவர்களும், அவர்களது குடும்பங்களுமே. இவர்களுக்கும் சகல வாய்ப்புக்களும் வழங்கப்படும் பட்சத்தில் இம்மாணவர்களும் நாளை சிறந்த கல்விமான்களாக உருவாகி எதிர்காலத்தில் அவர்களது கிராமத்தினை முன்னேற்றுவர்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

போக்குவரத்து வசதி இன்மை குறித்து……………..

பாடசாலைகள், வயல்நிலங்கள், ஆலயங்கள், கிளினிக் நிலையம் என பல திணைக்களங்களின் அலுவலகங்களும் இக்கிராமத்தில் அமையப்பெற்றாலும் போக்குவரத்து வசதி ஏற்படுத்தபடவில்லை என்பது இம்மக்களின் பெரும் குறையாகவிருக்கின்றது. பொதுச்சந்தை, வைத்தியசாலை, தபால்நிலையம், வங்கிகள், பிரதேச செயலகம், பிரதேசசபை, கமநலசேவை நிலையம் என பிரதேசத்திற்கான அனைத்து வசதிகளையும் பெறுவதற்கு கொக்கட்டிச்சோலைக்கே செல்ல வேண்டியுள்ளதாகவும் செல்வதற்கு எவ்விதமான பேரூந்து போக்குவரத்தும் இல்லாமையால் 8கிலோமீற்றர் தூரம் நடந்துதான் செல்லுவதாகவும், சில நேரங்களில் வீதியால் செல்லுகின்ற உழவு இயந்திரங்களில் ஏறிச்செல்வதாகவும் குறிப்பிடுகின்றனர். வைத்தியசாலைக்கு நோயாளி ஒருவரை கொண்டு செல்வதற்கும் மிகுந்த துயரங்களை அனுபவிப்பதாகவும் மாணவர்களும் அதிக தூரத்திற்கு கால்நடையாக காட்டுப்பிரதேசத்திற்குள்ளால் நடந்து செல்லுகின்ற

தாகவும் கூறுகின்றனர். இதனால் மாணவர்கள் அச்சத்துடனும், களைப்புடனும் பாடசாலை சென்று கல்வியை கற்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

நவீன உலமயமாக்கத்தின் பயனாக எல்லாவற்றையும் மிகவேகமாக மேற்கொள்ளவேண்டிய நிலையில் இக்கிராமத்து மக்களுக்கு இன்னும் போக்குவரத்து வசதி ஏற்படுத்தபடாமையினால் நேரவியங்களும், உரியநேரத்தில் தேவைகளை நிறைவேற்றமுடியாமல் இருப்பதும் வேதனையே. 

குடிநீர் நீருக்காய் ஏங்கும் மக்கள் …………

மனிதனது உயிர் இருப்புக்கு குடிநீர் என்பது மிக மிக முக்கியமாதொன்றாக இருக்கின்றது. இக்கிராமத்து மக்கள் வாழுகின்ற சூழல் மேட்டுப்பகுதியாகவும், மலைப்பகுதியாகவும் இருக்கின்றமையினால் கோடை காலங்களில் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வற்றுகின்ற நிலையிருக்கின்றது. இதனால் குடிப்பதற்கு, குளிப்பதற்கு பெரும் சிரமங்களை வருடாந்தம் இம்மக்கள் எதிர்நோக்கி வருகின்றதாக கூறுகின்றனர். கடந்த காலங்களில் 6ம் மாதத்திலிருந்து 10ம்மாதம் வரை நீர் பிரச்சினை ஏற்படுவதாகவும் இவ்வருடம் அதிக வெப்பம் ஏற்பட்டதினால் 4ம் மாதம் இறுதிப்பதியில் இருந்தே கிணறுகள், குளங்கள் என்பவற்றின் நீர் வற்றியுள்ளதனால் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் அதிக தூரம் காட்டுப்பகுதியினூடாக சென்று நீரை பெற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்
கின்றனர். இக்கிராமத்தின் சில பகுதிகளுக்கு குழாய்கள் ஊடாக குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் பல இடங்களுக்கு அவை ஏற்படுத்தப்படவில்லை அவ்வாறு வழங்கப்படாதவர்களுக்கே இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.


வீதிகள் நேர்த்தியில்லை………

இக்கிராமத்தில் அமைந்துள்ள வீதிகளில் பல கிறவல் வீதியாகவே அமைந்துள்ளதாகவும் ஒரு சில கொங்கிறீட் வீதிகளும் அமையப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கும் கிராமவாசிகள் மாரி காலத்தில் ஏற்படும் அதிக வெள்ளத்தின் காரணமாக வீதிகள் நீரினால் அடித்துச்செல்லப்பட்டு பெரிய குழிகளாக மாறுயுள்ளதாகவும் இதனால் போக்குவரத்து செய்ய முடியாமல் அவதியுறுவதாகவும் இவ்வீதியினூடாக
நெல்பயிர்ச்செய்கை மேற்கொண்டு நெல்மூடைகள் ஏற்றிச்செல்லும் போது கஸ்டமுறுவதாகவும் கூறினர்.

பல திட்டங்களின் ஊடாக பல்வேறு வீதிகள் நாட்டில் அமைக்கப்படுகின்ற நிலையில் அதிக நீர் செல்லுகின்ற இக்கிராமத்தின் வீதியை ஒவ்வொரு வருடமும் மண், கிறவல் இட்டு நிரப்பாமல் நிரந்தமாக நீடித்து இருக்க கூடிய வீதியை அமைந்து தருமாறும் இம்மக்கள் குறிப்பிட்டனர்.

யானையின் தொல்லை ………..

யானையின் தாக்குதலினால் அடிக்கடி பாதிப்படையும் கிராமங்களில் ஒன்றாக குழுவினமடு கிராமமும் அமைந்துவிடுகின்றது. இதனால் பயிர்ச்செய்கைகளும், உயிரிழப்புக்களும் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடும் இக்கிராம மக்கள் மிகுந்த அச்சத்தின் மத்தியில் தமது வாழ்க்கை கொண்டு செல்வதாகவும் இரவு நேரங்களில் கண்விழிந்திருந்தே தமது குடும்பத்தை காப்பற்றுகின்ற நிலையும் இருந்து கொண்டிருப்பதாக கூறுகின்றனர். தமது கிராமத்து இளைஞர் ஒருவர் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு வீடுவந்து சில நாட்களில் யானையின் தாக்குதலினால் உயிரிழந்த சம்பவமும் நடைபெற்றதாக இப்பிரதேசத்து மக்கள் தெரிவித்தனர்.

இவ்வாறான பல்வேறு குறைபாடுகளுடன் தமது கிராமம் இருந்து கொண்டிருப்பதாகவும் இவற்றினை தங்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசியல் வாதிகளும் தம்மிடங்களுக்கு வருகைதந்து பார்வையிடவில்லை எனவும் அங்கலாய்க்கும் மக்கள் இவற்றிற்கான தீர்வுகளை பெற்றுத்தருமாறும் கோருகின்றனர்.

நகர்புறங்களும், பணம்படைத்தவர்களும்  நாளுக்கு நாள் அதிகரித்து செல்லுகின்ற சூழலில் கிராமப்புறங்கள் பற்றியும், அங்குள்ள மக்கள், பாடசாலை, வீதிகள், போக்குவரத்து போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அவற்றிற்கான தீர்வுகளை ஏற்படுத்த வேண்டியதும் மாவட்ட அரசியல் வாதிகளினதும், அதிகாரிகளினதும் பொறுப்புமே ஆகும். கிராமப்புறங்களுக்கான தேவைகள் நிறைவேற்றுப்படும் போது அக்கிராமமும், அச்சூழலும் அபிவிருத்தி அடைவதும் உறுதியுமாகும்.