(படுவான் பாலகன்) இருள் அகன்று முழுநாடும் ஒளிமயம் தேசிய மின் செயற்றிட்டத்தின் கீழ் நாடு பூராகவும் வழங்கப்பட்டு வருகின்ற மின்ணிணைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசத்தின் குளுவினமடு கிராமத்திற்கு இதுவரை வழங்கப்படவில்லை என அப்பிரதேசத்து மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இக்கிராமத்தில் உள்ள 126குடும்பங்கள் இத்திட்டத்தின் ஊடாக மின்ணிணைப்பு பெறுவதற்கு கடந்த பெப்ரவரி மாதம் விண்ணப்பித்திருந்தும் குறைந்த அளவிலான குடும்பங்களுக்கே மின்சாரம் வழங்குவதற்குரிய ஏற்பாடாக மின்ணிணைப்பு வழங்குவதற்குரிய தூரத்தினை இலங்கை மின்சார சபை அளவு செய்துள்ளதாகவும் இன்னும் பல வீடுகள் அளவு செய்யப்படாமல் இருப்பதாகவும் இதுவரை எந்ததொரு வீடுகளுக்கும் மின்ணிணைப்பு வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கும் மக்கள் இதனை வெகுவிரைவில் பெற்றுத்தருமாறும் கூறுகின்றனர்.
வனங்கள் பரந்த பிரதேசமாக குளுவினமடு காணப்படுவதினால் இங்கு உள்ள மக்கள் இரவு நேரங்களில் ஒளியில்லாமல் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும், யானைப் போன்ற மிருகங்களின் தாக்குதலும் இப்பிரதேசத்தில் இடம்பெறுவதாலும் மிகுந்த வேதனையுறுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
மின்சாரம் இல்லாமையினால் பாடசாலை கற்கும் மாணவர்களும் இரவு நேரத்தில் தங்களது கல்வியை கற்பதிலும் இடையூறாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.
குறித்த திட்டத்தின் ஊடாக மின்ணிணைப்பு வழங்குவது தொடர்பாக நடாத்தப்பட்ட ஒன்றுகூடலில் சித்திரை வருடப்பிறப்பின் போது அனைவரது வீடுகளிலும் மின்விளக்குகள் ஒளிரும் என குறிப்பிட்டிருந்தும் இதுவரை புதுவருடம் கழிந்தும் இன்னும் இருளாகவே மனைகள் இருந்து கொண்டிருப்பதாகவும் கவலை கூறுகின்றனர்.













