நாட்டில்
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் குறிப்பாக மேல் மாகாணத்திலும் மலையகப் பகுதிகளிலும்
ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவுகளினால் பாதிக்கப்பட்டுத் தமது வாழ்விடங்களிலிருந்து
இடம்பெயர்ந்து அத்தியாவசிய உதவிகளின்றி நிர்க்கதியாகியுள்ள மக்களுக்காக நிவாரணப்
பொருட்கள் சேகரிக்கும் பணிகள் அம்பாறை மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர்
பிரிவுகளிலும் பணியாற்றுகின்ற அரச உத்தியோகத்தர்களால் இன்று (20) காலை முதல் பரவலாக
முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இப்
பணிகளின் ஓரங்கமாக அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள
22 கிராமசேவகர் பிரிவுகளிலும் இன்று காலை 7.00 மணி முதல் முன்னெடுக்கப்பட்ட சேகரிப்புப்
பணிகளில் பால் மா, பருப்பு, சீனி, டின் மீன், பிஸ்கட் உள்ளிட்ட உலர் உணவுப்பொருட்கள்,
ஆடைகள், குழந்தைகளுக்கான அத்தியாவசியப் பொருட்கள், கர்ப்பிணிகள், பெண்களுக்கான அத்தியாவசியப்
பொருட்கள் என சுமார் ஆறு இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு
மாலை 5.00 மணியளவில் அவையனைத்தும் பார ஊர்திகளில் ஏற்றப்பட்டு அம்பாறை மாவட்ட செயலகத்துக்கு
அனுப்பிவைக்கப்பட்டன.
இம்மனிதாபிமான
வேலைத்திட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச பொதுமக்கள் அனைவரும் தமது குடும்பங்களின்
சார்பில் நிவாரணப் பொருட்களை வீடுகளுக்கு வருகைதந்த அரச உத்தியோகத்தர்களிடம் ஒப்படைத்ததுடன்,
தாமாக முன்வந்து ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் பொருட்களை கையளித்தனர்.
ஆலையடிவேம்பு
பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் குறித்த நிவாரணப் பொருட்களனைத்தையும் பொதுமக்களிடமிருந்து
பொறுப்பேற்றுக்கொண்டதுடன், உதவிப் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையிலான
பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் குழாம் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களைத் தரம்
பிரித்து குழந்தைகளுக்கான, பெண்களுக்கான, கர்ப்பிணித் தாய்மார்களுக்கான பொருட்கள்
ஒவ்வொன்றையும் வெவ்வேறாகப் பொதி செய்து, அவற்றைப் பார ஊர்திகளிலேற்றி அம்பாறை
மாவட்ட செயலகத்துக்கு அனுப்பிவைத்தனர்.

















