(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய, வறுமையாக வாழ்கின்ற மக்களின் வாசல்படிகளை நுண்கடன் நிறுவனங்கள் தேடி அலைகின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது. நுண்கடன்கள் ஒவ்வொரு மனிதனது வாழ்வாதார மேம்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டிருந்தாலும் இன்று வாழ்வாதாரத்தை சீரழிக்கும், உயிரைகாவு கொள்ளுவையாக நுண்கடன்கள் மாறியிருக்கின்றது. மட்டக்களப்பின் பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் மக்களின் வாசல்படிகளேறி நுண்கடன் நிறுவனங்கள் நுண்கடனை இலகுவாக வழங்கும் நோக்கில் பல்வேறு தந்தோராபாயங்களை பயன்படுத்தி வழங்கி விடுகின்றனர். நுண்கடன் நிறுவனங்களின் வார்த்தையிலும் இலகு நடைமுறைகளிலும் மயங்கும் மக்கள் தாங்கள்பெறும் பணத்திற்கு எவ்வளவு வட்டி அறவிடப்படுகின்றது என்று தெரியாமலே கடனை பெற்றுவிடுகின்றனர்.
உயிருக்காக போராடும் ஒருவருக்கு நீர் கொடுத்தால் உயிர் பிழைத்துவிடுவார் என்ற நேரத்தில் தண்ணீர் கிடைத்தால் போதும் அது எந்நீர் என்பது பற்றி சிந்திக்க அவ்விடத்தில் தோன்றாதது போன்று மக்களும் தங்களது குடும்பத்தை கொண்டு செல்ல பணம் இருந்தால் போதும் அதை வைத்துக்கொண்டு அந்நேரம் குடும்பத்தை கொண்டு சென்று விடலாம் என்றநோக்கில் பணத்தை மட்டுமேசிந்திக்கின்றனர். அதனால் ஏற்படப்போகும் சிக்கல்களையும் மக்கள் சிந்திப்பதில்லை நுண்கடன் நிறுவனங்களும் கடனை வழங்கினால் போதும் என்ற நிலையில் இருந்து கொண்டிருக்கின்றனர். இதனால் வாராந்தம், மாதாந்தம் பணத்தினை செலுத்துகின்றேன் என்று கூறி கடனைபெறும் மக்கள் அவற்றை வாராந்தம், மாதாந்தம் செலுத்தமுடியாமல் இன்னோர் நிதி நிறுவனத்தினை நாடி நுண் கடனை பெற்று பல்வேறு இன்னல்களை எதிர்நோக்குகின்றனர். இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட நுண்கடனைப் பெற்றுக்கொள்ளும் மக்கள் அவற்றை நிதி நிறுவனங்களுக்கு வழங்க முடியாமல் தங்களது உயிர்களையும் காவுகொடுக்கின்ற நிலை அரங்கேறியிருக்கின்றது.
நுண்கடனைபெற்றுஅவற்றைமீளளிப்பதற்குசென்றுதிரும்பியபலபெண்கள் நுண்கடன் பெற்றமை தொடர்பிலும் அவற்றில் ஏற்பட்ட அனுபவங்களையும் குறிப்பிட்டனர். குறிப்பாக நுண்கடனை பெறுகின்றவர்களில் அதிகமானவர்கள்; பெண்களாகவே இருக்கின்றனர்;. ஒருசில ஆண்களே நுண்கடன்களை பெற்றுக்கொள்ளுகின்ற
னர். நுண்கடன் நிறுவனங்களும் பெண்களையே குறியும் வைப்பது போன்றான தோற்றமும் வெளிப்படுகின்றது. கடன் நிறுவனங்கள் தங்களை நாடி வருகை தந்து சில ஆவணங்களை கொண்டு வந்தால் மறுநாள் கடன் வழங்க முடியும் எனக்கூற மக்களும் உடனடியாக தமது இடத்திலே பணம் கிடைக்கவிருக்கின்றது. என்ற சந்தோசத்தில் சென்று பெற்றுக் கொண்டதாகவும் பின்பு கடனை வாராந்தம் செலுத்துவதற்கு காலையில் சென்றால் மாலையில் வீடு திரும்புகின்ற நிலையும் தங்களுக்கு ஏற்பட்டிருப்பதாக குறிப்பிடுகின்றனர். இவை பற்றி விரிவாக குறிப்பிடுகையில் நிதி நிறுவனங்களில் கடனை பெறுவதற்கு பிணைகளாக ஒப்பம் இடுபவர்கள் எல்லோருமே ஒருவருக்கொருவர் மாறிமாறி ஒப்பமிட்டு எல்லோரும் நுண்கடனை பெற்றால் ஒருவர் கடனை மீளளிக்காவிட்டால் அந்தகுழுவில் உள்ளவர்களிடம் பணத்தினை பெற்றுக்கொள்ளாமல் பணம் செலுத்தாவர் வரும் வரை இவர்களையும் அவ்விடத்திலே வைத்துக் கொள்ளுவதாகவும் இதனால் அவர் பணத்தினை வழங்கும் வரை உணவின்றி காத்திருந்த அனுபவங்களும் ஏற்பட்டிருப்பதாகவும் கூறினர்.
நுண்கடன் பலவாராந்தம் பணம் செலுத்தும் வகையிலே வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. பணம் செலுத்துவதற்குரிய குறித்தநாள் வரும் வரை நுண்கடன் பெற்றவர்கள் பணத்திற்காக அவதியுற்று அலைகின்ற நிலையும் சொல்லொண்ணாத்துயராகவே இருந்து கொண்டிருக்கின்றது. பணம் சம்பாதிக்க ஆண்களே பல குடும்பத்தில் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். இதனால் பெண்களுக்கு இது தொடர்பிலான துன்பங்கள் புரிவதில்லை என குடும்பத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் பிரச்சினைகள் எழுந்து பல குடும்பங்கள் பிரிகின்ற நிலையும் ஏற்பட்டிருக்கின்றது. குடும்பத்தில் தாய் கடனை வழங்கவேண்டும் நுண்கடன் பெறுவதற்காக வந்துவிடுவார்கள் எனக்கூறிக் கொண்டு வீட்டிலே மெது மெதுவாக சத்துமிட்டு இதனை பேச்சுவழக்கில் கூறும் போது புறுபுறு என வீட்டிலே நடந்து கொள்ளுகின்ற போது பிள்ளைகளும் கல்விகற்க முடியாமல் வீட்டின் நிலைகளையும் சிந்தித்துக் கொண்டு கல்வியை தொலைக்கின்ற நிலையும் அரங்கேறிருக்கின்றது.
நுண்கடன் நிறுவனங்கள் கடன்களை வழங்குவது அவர்களது தொழிலாக இருந்தாலும் அவற்றை பெற்றுக்கொள்ளும் மக்கள் நுண்கடனால் ஏற்படப்போகும் பிரச்சினைகளையும், அவற்றை தீர்ப்பதற்கான வழிகளையும், வட்டிவீதங்களையும் ஏனைய நிதிநிறுவனங்களிடமும் இருந்தும் வங்கிகளில் இருந்து அறிந்து ஒப்பிட்டு தமக்கு அனுகூலம் அளிக்கத்தக்க இடங்களிலே கடனை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். இதற்கு மக்களுக்கு போதிய அறிவுகளையும் ஏற்படுத்த வேண்டியது. சமூகசார் சிந்தனைகளை கொண்டவர்களதும் அரசியல் வாதிகளதும் தலையாய கடமைகளாக அமைந்திருக்கின்றது. தற்போதைய சூழலில் பின்தங்கிய பிரதேசத்தில் வாழுகின்ற மக்களில் கடனாளிகள் இல்லாதவர்கள் இல்லை என்ற நிலை உருவாகிக் கொண்டு வருகின்றது.
கடந்த 5வருடங்களுக்கு முந்தியகாலத்தை எண்ணி ஆராய்ந்து பார்க்கின்றவேளை கடனாளிகளாக அன்றி ஒவ்வொரு நாளும் உழைக்கும் பணத்தைக் கொண்டு உணவு சமைத்து உண்டு மகிழ்ச்சி கொண்டு உறங்கிய மக்களாக இருந்தவர்கள் இன்று கடனாளிகளாக மாறி உறக்கமின்றி இன்பத்தை தொலைத்து இன்முகம் வாடியவர்களாக மாறியிருக்கின்றனர். இந்நிலை தொடர்ந்தும் இடம்பெறும் தருணத்தில் பலபின்தங்கிய பிரதேசத்து மக்கள் தங்களது இல்லிடத்தினை தொலைத்து வீதியிலும், பொது இடங்களிலும் அமரவேண்டிய நிலை ஏற்படும். நுண்கடனில் அகப்பட்டுள்ளவர்கள் அனேகமானவர்கள் தமிழ் மக்களாக இருக்கின்றனர். உயிரை, உடமைகளை, சொத்துக்களை முப்பதுவருட காலயுத்தத்திலே இழந்த இம்மக்கள் அகதிமுகாம் வாழ்க்கையிலும் துன்பங்களை எதிர்நோக்கி ஓரளவு நிம்மதியாய் வாழும் மக்களை துரத்திமீண்டும் நுண்கடன் ஆயுதம் ஆட்கொண்டுள்ளது. இவற்றில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது.














