மட்டக்களப்பு வாழைச்சேனை கறுவாக்கேணி விக்னேஸ்வரா கல்லூரியில் நாடமும் அரங்கியலும் பாடத்தினைக் கற்கும் மாணவர்கள் பங்குபற்றிய 'கலிங்கப் போர்' எனும் வடமோடிக் கூத்து 19.06.2016 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு கறுவாக்கேணி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் திருவிழாவின் நிறைவு நாளைச் சிறப்பிக்கும் கலை நிகழ்ச்சிகளுள் ஒன்றாக அரங்கேற்றப்பட்டது.
பாடசாலையில் நாடகமும் அரங்கியலும் பாடத்தைச் செயல்முறையில் கற்பிக்கும் செயற்றிட்டமாக இக்கூத்தரங்க முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டதுடன் இதற்கான ஆதரவினை கறுவாக்கேணி வாழ் மக்கள் வழங்கியிருந்தனர்.
குறிப்பாக கூத்து அரங்கேற்றத்திற்கான களரி அமைத்தலில் மூத்த தலைமுறையினரின் வழிப்படுத்தலில் இளைஞர்கள் ஆர்வமாக ஈடுபட்டு அழகான களரியினை உருவாக்கி அதில் ஊரின் புதிய தலைமுறையினர் தமது ஆற்றல்களைக் காட்ட களம் அமைத்துக் கொடுத்திருந்தார்கள்.
மிக நீண்ட இடைவெளியின் பின்னர் கறுவாக்கேணியில் கூத்து ஆடப்பட்டமையால் தாம் மிகவும் மகிழ்வதாக அங்கு வாழும் மூத்த தலைமுறையினர் மிகவும் மகிழ்வுடன் கருத்துக் கூறினார்கள்.
இக்கூத்தினை அண்ணாவியார் சி.ஞானசேகரம் அவர்களும் பாடசாலையின் நாடகமும் அரங்கியலும் பாடத்திற்கான ஆசிரியர் து.கௌரீஸ்வரன் அவர்களும் இணைந்து பயிற்றுவித்து உருவாக்கியிருந்தார்கள்.
பாடசாலையில் நாடகமும் அரங்கியலும் பாடத்தைக் கற்கும் 25 மாணவர்கள் இதில் பலரும் பாராட்டும் வகையில் தமது ஆற்றல்களைச் சிறப்பாக வெளிக்காட்டியிருந்தார்கள்.
பாடசாலைக்கும் அதனைச் சூழவுள்ள சமூகத்திற்கும் இடையிலான நல்லுறவையும் பங்குபற்றுதலையும் கட்டியெழுப்பும் நல்ல நோக்கத்துடன் இக்கூத்தரங்கச் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கலைகளை வளர்க்கும் இத்தகைய நடைமுறைகளூடாக பாடசாலையையும் சமூகத்தையும் இணைக்க முடியும் என பாடசாலையின் அதிபர் க.பரமானந்தராஜா அவர்கள் கருத்துத் தெரிவித்தார்.


















