மட்டக்களப்பு ஏறாவூர்பற்று ஏர்முனை மாற்றுத் திறனாளிகளின் அமைப்பின் ஏற்பாட்டில் 'நிமிர்ந்து நில்' எனும் தொனிப்பொருளில் விளையாட்டு நிகழ்வு சித்தாண்டி மாவடிவேம்பு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் ரி.குகதாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜாசிங்கம், செங்கலடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதார், ஏறாவூர்பற்று செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ.சிறிநாத் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள், நன்கொடையாளர்கள், அணுசரனையாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
விளையாட்டு நிகழ்வில் முற்றுமுழுதாக மாற்றுத் திறனாளிகளைக் கொண்டு நடைபெற்றிருந்தது. அனைத்து நிகழ்வுகளையும் மாற்றுத் திறனாளிகள் முன்னின்று நடாத்தி முடித்தனர்.
அந்த வகையில் முச்சக்கர வண்டி செலுத்துதல், பலூண் ஊதி உடைத்தல், தண்ணீர் நிரப்புதல், குண்டு எரிதல், ஈட்டி எரிதல், நிற முட்டி உடைத்தல், 100 மீற்றர் ஓட்டம், தேங்காய் துருவுதல், ஓலை இலைத்தல், வினோத உடை நிகழ்வு, சங்கீத கதிரை போன்ற பல்வேறு விளையாட்டுக்கள் நடைபெற்றது.
குறித்த நிகழ்வு முற்றுமுழுதாக மாற்றுத் திறனாளிகளுக்கு நடைபெற்றமையினால் முன் ஆயத்தமாக செங்கலடி வைத்தியசாலையூடாக அம்பியுலன்ஸ் சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய அனைவருக்குமாக பெறுமதியான பரிசுப் பொருட்களை வருகைதந்த அதிதிகள் வழங்கி வைத்ததுடன், மாற்றுத் திறனாளிகளுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவுக்குப்பட்ட மாற்றுத் திறனாளிகளைக் கொண்ட குறித்த ஏர்முனை அமைப்பானது சுமார் 500 மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளைக் கொண்டு பல்வேறுபட்ட தேவைகளுடனும் குறைபாடுகளுடன் காணப்படுகின்றது.
குறித்த அமைப்பில் இருப்பவர்கள் அன்றாட வாழ்வாதரத்துக்கு கூட மிகவும் கஸ்டமான நிலையில் வாழ்ந்து கொண்டு இன்றும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இவர்களின் எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டு உதவிக்கரங்கள் முன்வரவேண்டுமென இந்நிகழ்வில் மிகவும் உருக்கமாக கேட்டுக் கொண்டனர்.
























