ஆலையடிவேம்பில் தும்பு உற்பத்திகளை விருத்தி செய்யும் நோக்கில் உற்பத்தியாளர்களுக்கு மூலப்பொருட்களும் உபகரணங்களும் பெற்றுக்கொடுப்பு

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் அனுசரணையோடு 2016 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தினத்தின் தொடர்ச்சியாக ‘நிலையான எதிர்காலத்திற்கு வலுவான பெண்கள்' என்ற தொனிப்பொருளில் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள பெண்களின் திறன்களை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு கண்ணகிகிராமத்தில் தும்பு உற்பத்திகளுக்கான பயிற்சிகளைப் பெற்ற பெண்களை வலுப்படுத்தும் நோக்கில் குறித்த உற்பத்தியிகளை மேற்கொள்ளத் தேவையான மூலப்பொருட்கள் மற்றும் உபகரணங்களைப் பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு இன்று (23) காலை இடம்பெற்றது.

அக்கரைப்பற்று, கண்ணகிகிராமத்திலுள்ள தும்புத் தொழிற்சாலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தும்பு உற்பத்திப் பயிற்சிகளை நிறைவு செய்த 5 பேரைக் கொண்ட பெண்கள் குழுவுக்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் அனுசரணையோடு ஆலையடிவேம்பு பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவினால் மூலப்பொருளான ஒரு தொகுதி தும்பும், கயிறு நூற்கும் ராட்டினங்களும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனால் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. சிபாயா றமீஸ் மற்றும் கண்ணகிகிராமத்துக்கான கிராம உத்தியோகத்தர்களும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது பயிற்சி பெற்ற பெண்களோடு பேசிய  பிரதேச செயலாளர், இத்தொழிற்சாலையில் தும்பு உற்பத்திகளைத் தொடர்ந்து மேற்கொள்ளவுள்ள உங்களிடமுள்ள திறமை மற்றும் அதன்மூலம் பெறப்படவுள்ள உற்பத்தி என்பன ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும் எனவும் அதனைத் தாங்கள் அர்ப்பணிப்புடனும் உற்சாகத்துடனும் மேற்கொள்ளவேண்டும் எனவும் கூறினார். அத்துடன் மகளிர் விவகார அமைச்சானது பெண்களின் திறமையினையும் உற்பத்தியினையும் மேம்படுத்துவதனூடாக அவர்களைப் பொருளாதார அடிப்படையில் வலுவூட்டுவதற்கான முயற்சிகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றது. அதன் ஒருவடிவமாகவே இன்று உங்களுக்கு இவ்வாறானதொரு வாய்ப்பு அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இதனை நீங்கள் திறன்பட செயற்படுத்தவேண்டும் எனவும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து உற்பத்தியின் முன்னோட்டமாக அங்கு வழங்கப்பட்ட தும்பினைக் கொண்டு கயிறு திரிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது பிரதேச செயலாளரின் முன்னிலையில் குறித்த பெண் பயிற்சியாளர்கள் மிகவும் சிறப்பாகவும் வேகமாகவும் மூன்று நிமிடத்திற்குள் இரண்டு முடிச்சுக் கயிற்றினை திரித்துமுடித்திருந்தனர்.