கடந்த ஒரு வாரகாலத்திற்குள் வெருகல் பிரதேசத்திலுள்ள பல கிராமக்களில் வயிற்றோட்டம், தாடைவீக்கம் போன்ற நோய்கள் ஏற்பட்டு மாடுகள் இறந்துள்ளன.
ஆடுகளும் மாடுகளும் இந் நோயின் தாக்கத்திற்குள்ளாகி வருவதாக கூறப்படுகின்ற போதிலும் கூடுதலாக மாடுகளே இறந்துள்ளன.
வெருகல் பிரதேச செயலக தகவல்களின்படி இதுவரையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளதாக அறியமுடிகின்றது.
உணவு உண்ணாமை, நீர் அருந்தாமை, வாயிலிருந்து நுரை வெளிவருதல் மற்றும் தாடை வீக்கம் போன்ற அறிகுறிகளுடன் தான் மாடுகளும் ஆடுகளும் இறப்பதாக வெருகல் பிரதேச விவசாயம் மற்றும் கால் நடை வளர்ப்போர் சங்கத்தின் செயலாளர் செல்வரெத்தினம் டிஷாந் வியாழனன்று (ஜுலை 21 ) கூறினார்.
விவசாயமும் கால் நடை வளர்ப்பும் தமது பிரதேச மக்களின் பிரதானமான வாழ்வாதாரம் என சுட்டிக் காட்டும் அவர் வழமைக்கு மாறாக இம்முறை கால் நடைகளுக்கு ஏற்பட்டுள்ள இந் நோயின் தாக்கம் காரணமாக கால் நடை வளர்ப்போருக்கு பல இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது ஒரு வைரஸ் தாக்கம் என்றும் இந்த வைரஸ் ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் காலிலும் வாயிலும் ஏற்படக் கூடியது என்றும் மாவட்ட கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார உதவிப் பணிப்பாளரான கால்நடை வைத்தியர் எஸ். நிஸாம்தீன் தெரிவித்தார்.
இந்நோய் கால நிலை மாற்றத்தின் காரணமாக உணவு மற்றும் காற்று மூலமும் கால்நடைகளை ஒரு இடத்திலிருந்து வேறிடத்திற்கு கொண்டு செல்லுதல் மூலமும் பரவக் கூடிய தொற்று நோய் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கால்நடை பண்ணையாளர்கள் வருடாந்தம் இந் நோய்க்குரிய தடுப்பு ஊசிகளை ஏற்றுவதன் மூலம் இந்நோயிலிருந்து தமது கால் நடைகளை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.
இந்நோயின் தீவிரத் தன்மை காரணமாக வெருகல் பிரதேசத்திருந்து வேறு இடங்களுக்கு கால்நடைகளைக் கொண்டு செல்வதற்கு தற்போது தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கால் நடைகளுக்கு தடுப்பு ஊசி ஏற்றுதல் உட்பட இந்நோயை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கால்நடை வைத்தியர் எஸ். நிஸாம்தீன் கூறினார்.














