(கோபி) விவசாய திணைக்களத்தின் அனுசரனையுடன் சேதன வீட்டுத்தோட்ட விழிப்பூட்டல் நிகழ்வானது 05.07.2016 அன்று விவசாயப் போதனாசிரியர் M.B.N.ரஃமான் தலைமையில் M.பிரமநாதன் என்பவரது வீட்டுத்தோட்டத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக விவசாயத் திணைக்கள உதவி விவசாயப் பணிப்பாளர் V.லிங்கேஸ்வரராஜா மற்றும் பிரதம விருந்தினராக வாகரை பிரதேச செயலாளர் செல்வி.S.R.ராகுலநாயகி, வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், பால்சேனை வீட்டுத்தோட்ட செய்கையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இந்நிகழ்வில் சிறப்பித்திருந்தனர்.
இதில் கலந்து கொண்ட பிரதேச செயலளர் தனது உரையில் "இதுபோன்ற விழிப்புணர்வூட்டல் நிகழ்வுகள் விவசாய திணைக்களத்தின் மூலம் வாகரை பிரதேசத்தில் பல முறைகள் இடம்பெற்றிருப்பதால் மக்கள் தற்போது விழ்ப்படைந்திருப்பதாகவும், நஞ்சற்ற மரக்கறி உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபட்டுவருவதாகவும், மேலும் வர்த்தக ரீதியிலான இயற்கை உரம், இயற்கை பீடைநாசினி விற்பனை நிலையம் ஒன்றை வாகரை பிரதேசத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள விவசாய திணைக்களம் உதவவேண்டும்" எனவும் கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து உதவி விவசாயப் பணிப்பாளர் தனது உரையில்"இயற்கை, நஞ்சற்ற பழ, மரக்கறி உற்பத்தியில் வாகரை பிரதேசமானது மட்டக்களப்பு மாவட்டத்திலே பெயர் பெற்று விளங்குவதாகவும்" கூறியிருந்தார். இதனை தொடர்ந்து விவசாயப் போதனாசிரியர்களால் மூடுபடை, கூட்டுப்பசளை தயாரிப்பு, இயற்கை பீடைநாசினி தயாரிப்பு, பழக்கன்றுகளின் பராமரிப்பு, கத்தரித்தல் தொடர்பான செய்முறை விளக்கங்களும் அளிக்கப்பட்டது.























