தவறான வழிகாட்டலினால் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ரூ 4000 மில்லியன் பெறுமதியான கருத்திட்டத்தை மீன்பிடி அமைச்சு மீளப்பெறுகின்றது


கிழக்கு மாகாண அரசியல் தலைமைகளினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எதிர்ப்புக்கள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மீன்பிடி மற்றும் நீரியல்வளங்கள் அமைச்சினால் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்ட ரூபா4000 மில்லியன் பெறுமதியான கருத்திட்டம் மீளப்பெறப்படுகின்றது.


மீன்பிடி அமைச்சர் மகிந்த அமரவீர 'தி ஐலன்ட்'பத்திரிகைக்கு இது விடயமாக நேற்றுத் தெரிவிக்கும் போது தமது அமைச்சு மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப்பிரதேசத்தில் தேசிய நீரியல் வள பண்ணை ஒன்று அமைக்க திட்டமிட்டிருந்தது. இதன் மூலம் சுமார் 10,000வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்டது.இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சுமார் 1200 ஏக்கர் காணி பயன்படுததப்படும்.


கிழக்கு மாகாணத்தின் பல்வேறுபட்ட அரசியல் தலைமைகளும் அரசசார்பற்ற நிறுவனங்களும் ஒரு சில வலுவற்ற காரணங்களைக் கூறி தொடர்ச்சியாக இத் திட்டத்தை எதிர்த்து வருகின்றன. பிரதேசத்திலுள்ள இத்தகைய எதிரணியினரின் தவறான புரளிகள் காரணமாக பொதுமக்களும் இதனை எதிர்க்கின்றனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு இக்கருத்திட்டம் தேவையற்றவிடத்து அதனை வடமாகாணத்தில் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன் மூலம் மட்டக்களப்பு மக்களின் வருமானம் ஈட்டும் சந்தர்ப்பங்களும் இல்லாமல் போகும் என மேலும் அமைச்சர் கூறினார்.