மட்டக்களப்பு புனித சிசிலியாவுக்கு 80 மில்லியன் ஒதுக்கீடு பரிசளிப்பு விழாவில் கல்வி இராஜாங்க அமைச்சர் உறுதிமொழி

(வாழைச்சேனை)

மட்டக்களப்பு, புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லுரியின் வருடாந்த பரிசளிப்பு வைபவம் மிகப் பிரமாண்டமான முறையில், கடந்த 30ஆம் திகதி, கல்லூரி அன்னை வெரோணிக்கா கலையரங்கில் நடைபெற்றது.


இவ்விழாவின் பிரதம விருந்தினராக கல்வி இராஜாங்க அமைச்சர், வீ.இராதாகிருஷ்ணனும்;, கௌரவ விருந்தினர்களாக கல்வி அமைச்சின் தமிழ்ப்பிரிவுக்கான கல்விப் பணிப்பாளர் எஸ்.முரளிதரன், மட்டக்களப்பு கல்வி வலயப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் ஆகியோரும், விசேட விருந்தினர்களாக கல்லூரியின் பழைய மாணவியும், வைத்திய அதிகாரியுமான டாக்டர் திருமதி அகிலா சிவபிரம்யன், கல்வி அமைச்சின் வேலைத்திட்டங்களுக்கான பணிப்பாளர் டாக்டர் அபேசிங்க, கல்வி இராஜாங்க அமைச்சரின் செயலாளர் ரவீந்திரன், மற்றும் கல்வி அமைச்சின் சிரேஷ்ட கணக்காளர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

மட்டக்களப்பு, கோவிந்தன் வீதி வழியாக கல்லூரியின் மேற்கத்தேய பாண்ட் வாத்தியக் குழுவினர் அதிதிகளை வரவேற்று, பிரதான மண்டபத்தை அடைந்ததும் நிகழ்வுகள் ஆரம்பித்தன.

கல்லூரிக் காப்பாளர் மட்டக்களப்பு-அம்பாறை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜோசப் பொன்னையா அவர்களின் பிரதிநிதியாக அருட்தந்தை தேவதாசன் கலந்துகொண்டு, ஆயரின் வாழ்த்துதலை வாசித்தளித்தார்.
கல்லூரி அதிபர் அருட்சகோதரி அருள்மரியாவின் ஆண்டறிக்கை, கல்லூரியின் சாதனைகளைப் பறைசாற்றி நின்றது. கல்லூரி மாணவிகளின் திறமைகளை முழுமையாகக் கொண்டுவரும்விதமாக ஆங்கிலத்திலும், தமிழிலும் நிகழ்த்தப்பட்ட பாடல் நடன நிகழ்வுகள் அத்தனையும்; பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தன. அரங்க அமைப்புக்கள் சிறப்பாயமைந்திருந்தன

கல்லூரி அதிபர் அருட்சகோதரி அருள் மரியாவும் பாடசாலை அபிவிருத்திக் குழுச் செயலாளர் தீசன் ஜெயராஜும் இணைந்து, கல்வி இராஜாங்க அமைச்சருக்கு வாழ்த்து நினைவுச் சின்னம் வழங்கிவைக்க அமைச்சர் தனதுரையினைத் தொடர்ந்தார். கல்வி அமைச்சர் தனதுரையில், இவ்வருடம் இலங்கையின் சகல பாடசாலைகளுக்கும் என்றுமில்லாதவாறு பெருந்தொகையான பணம் அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பாக கிழக்கு மாகாண தேசிய பாடசாலைகளுக்கும் இது வழங்கப்படவிருப்பதாகவும் தெரிவித்தார். 

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரிக்கென 80 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். கல்லூரியின் சாதனைகளையும், அன்றைய நிகழ்வுகளின் சிறப்புத்தன்மையையும் அமைச்சர் வெகுவாகச் சிலாகித்துப் பேசினார்.

2015ஆம் வருடத்தில் சாதனை படைத்த மாணவிகளனைவரும் சான்றிதழ்களுடன், சாதனைக் கிண்ணங்களையும் அதிதிகளிடமிருந்து பெற்றனர்.  கடந்த வருடத்தின் கல்லூரி நாயகிக்கான விருதை செல்வி மாதங்கி உதயகுமார் பெற்றுக்கொண்டார்.