இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு பலியான இரண்டு பிள்ளைகளின் தந்தை;


(செங்கலடி நிருபர் சுபஜன்)  மட்டக்களப்பு, கல்குடாப் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான தம்பிப்பிள்ளை பாக்கியராசா (வயது 51) என்பவர் நேற்று வியாழக்கிழமை இரவு இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் பலியாகியுள்ளார்.    
தனது வீட்டுக்கு அருகில் வாடகைக்கு குடியிருக்கும்; 02 பேரும் இவருமாகச் சேர்ந்து சிகரெட் வாங்குவதற்கு கடைக்குச் சென்றுகொண்டிருந்தனர். இதன்போது, இம்மூவரையும் கும்பல் ஒன்று வழிமறித்துத் தாக்கியுள்ளது. இம்மூவரில் ஒருவர் தப்பியோடியதுடன், ஏனைய இருவரும் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் தம்பிப்பிள்ளை பாக்கியராசா என்பவர் உயிரிழந்துள்ளார். 

இத்தாக்குதலில் காயமடைந்த மற்றைய நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து 05 பேரை இன்று வெள்ளிக்கிழமை காலை கைதுசெய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், இந்தச் சம்பவத்துடன் வேறு எவரும் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறினர்.