அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையில் புதிய நோயாளர் விடுதி அமைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் ஆரம்பம்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ரூபாய் 5 மில்லியன் செலவில் அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்படவுள்ள நோயாளர் விடுதிக்கான பூர்வாங்க வேலைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வும் அவ்வைத்தியசாலையின் பற்சிகிச்சைப் பிரிவுக்கு உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வும் இன்று (28) காலை இடம்பெற்றன.

அக்கரைப்பற்று மாவட்ட வைத்திய அதிகாரி திருமதி. எம்.ரி.ஜாரியா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்குக் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் சுகாதார அமைச்சருமான ஏ.எல்.மொஹமட் நசீர் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்ததுடன், கௌரவ அதிதியாகக் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியக் கலாநிதி கே.கருணாகரன் கலந்துகொண்டார். இவர்களுடன் சிறப்பு அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் மற்றும் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஏ.எல்.அலாவுதீன் ஆகியோருடன் அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் பாண்ட் வாத்தியத்துடன் மாலை அணிவித்து அதிதிகள் அம்பாறை வீதியிலிருந்து வைத்தியசாலை வரை மலர் தூவி வரவேற்று அழைத்துச் செல்லப்பட்டனர். முதலில் பற்சிகிச்சைப் பிரிவுக்குச் சென்ற அதிதிகள் அங்கு இடம்பெறும் வைத்திய முறைகளைப் பார்வையிட்டதுடன் சுகாதார அமைச்சர் மாவட்ட வைத்திய அதிகாரியிடம் குறித்த பிரிவுக்கான உபகரணத் தொகுதிகளை வழங்கிவைத்தார்.

தொடர்ந்து தலைமைப் பொறியியலாளர் மற்றும் ஏனைய அரச பிரமுகர்களுடன் இணைந்து புதிய நோயாளர் விடுதிக்கான அமைவிடத்தைப் பார்வையிட்ட அமைச்சர் அங்கு நிறுவப்பட்டிருந்த விபரக் குறிப்படங்கிய பலகையைத் திறந்துவைத்து குறித்த நோயாளர் விடுதியை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.

அதனைத் தொடர்ந்து குறித்த நிகழ்வுகளில் கலந்துகொண்ட அதிதிகளைக் கௌரவிக்கும்வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமொன்று அக்கரைப்பற்று மாவட்ட வைத்திய அதிகாரியின் தலைமையில் அங்கு இடம்பெற்றதுடன் அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றிருந்தன.