பாதுகாப்புக்கு மத்தியில் பேத்தாழை விபுலானந்த வித்தியாலய தொழில் நுட்ப ஆய்வு கூடம் திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட பேத்தாழை விபுலானந்த வித்தியாலய தொழில் நுட்ப ஆய்வு கூடமானது வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

வித்தியாலய அதிபர் நா.சந்திரலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா, பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமார், கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.போல், பிரதேச பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


இவ் வித்தியாலயத்தில் நிர்மானிக்கப்பட்ட தொழில் நுட்ப ஆய்வு கூடத்தை திறக்கவிடாமல் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சி.சந்திரகாந்தனின் ஆதரவாளர்கள் தடுத்த வேளை பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் ஆய்வு கூடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் பிரதிநிதிகளால் திறந்து வைக்கப்பட்டது.