(கோபி) தும்பங்கேணி இளைஞர் விவசாயத் திட்டத்தில் ஏற்று நீர்ப்பாசனம் மீள் புனரமைப்பது சம்பந்தமான கலந்துரையாடலானது 18.07.2016ம் திகதி பழுகாமம் விவசாயப் போதனாசிரியர் செல்வி கீர்த்திகா பாக்கியராஜா தலைமையில் இன்று நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.சிவநாதன், உதவி மாகாண விவசாய பணிப்பாளர் இரா.ஹரிகரன், மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் திரு.இரா.கோகுலநாதன், மட்டக்களப்பு வலயம் தெற்கிற்கான உதவி விவசாயப் பணிப்பாளர் ம.சிவஞானம், தும்பங்கேணி இளைஞர் விவசாயத்திட்ட கிராம சேவகர் திரு.தியதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தினை புனரமைப்பது, விவசாயிகளின் தேவைகள், எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது. இந் நிகழ்வில் அதகளவான மேட்டுநில செய்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த தும்பங்கேணி இளைஞர் விவசாயத் திட்டமானது 1968ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, ஏற்று நீர்ப்பாசனத்தின் மூலம் 150 ஏக்கர் மிளகாய் செய்கை மேற்கொள்ளப்பட்டு அக்காலத்தில் இங்கிருந்து மிளகாய் ஏற்றுமதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். கடந்தகால வன்செயலின் போது நீர் இறைக்கும் பம்பிகள், கான்கள் என்பன முற்றாக அழிக்கப்பட்டு தற்போது சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.
இத்திட்டத்தினை மீள புனரமைப்பதன் மூலம் மிளகாய், சோளம், நிலக்கடலை, கௌபி போன்ற மறுவயற் பயிர்களை செய்கைபண்ணி, எமது மாவட்டத்தினை ஓர் வளம்மிக்க மாவட்டமாக உருவாக்கலாம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.


















