அன்றைய தினம் ஆலய பிரதமகுரு சாதக சிரோன்மணி சத்தியோசாத சிவாச்சாரியார், சிவஸ்ரீ தெ.கு. ஜனேந்திரராசா குருக்கள் தலைமையில் மேலும் பல குருமார்கள் கலந்து கொண்டு கிரியைகள், பூசைகள் என்பவற்றை மேற்க்கொள்வார்கள்.
கிழக்கிலங்கையில் தனிச்சைவ சூழலில் எழுந்தருளிக் காட்சி கொடுக்கும் ஸ்ரீ மாவேற்குடா பிள்ளையார் ஆலயத்தின் வெளிவீதியில் தெற்குப் புறமாக வடக்கு நோக்கி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயமும், சுற்றுப் பிரகாரத்தின் உள்வீதியில் நாகதம்பிரான் ஆலயம், ஆதிவிநாயகர் ஆலயம், வள்ளி தெய்வானை சமேத முருகன் ஆலயம், நவக்கிரக ஆலயம், வைரவர் ஆலயம், சண்டேஷ்வரர் ஆலயம் என்பனவும் அமைந்துள்ளன.
எல்லாம் வல்ல எம்பெருமான் எண்ணிலடங்காத பற்பல அற்புதச் செயல்களை ஆற்றியுள்ள போதிலும் அவற்றுள் குறிப்பிடத்தகுந்தது சில ஆண்டுகளுக்கு முன்னர் உற்சவ காலத்தில் அடியார்கள் அனைவரும் எம்பெருமானின் பூசைகளைக் கண்டு மனமுருகிக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென்று ஒரு காட்டுப்பன்றி ஆலயத்தில் பூசை நிகழ்வுகளைத் தரிசித்துக் கொண்டிருந்த அடியவர்கள் எவருக்கும் எந்தவிதமான தொந்தரவும் கொடுக்காமல் ஆலயத்தினுள் நுழைந்து தம்பத்தடி பிள்ளையாரை வணங்கி பின்னர் நேராக கர்ப்பக் கிரகத்துக்குள் சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் ஸ்ரீ மாவேற்குடா பிள்ளையாரை வணங்கி பின்னர் தெற்குப்புற வாசலினூடாக வெளியேறிச் சென்ற காட்சியானது அங்கிருந்த அனைவருக்கும் பேராச்சரியம் மிக்கதாய் விளங்கியது. (ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.) இதனைக் கேள்வியுற்ற ஏனைய மக்கள் யாவரும் பேரானந்தத்திலும், பேரதிர்ச்சியிலும் ஆழ்ந்து போனார்கள்.
இவ்வாறான பற்பல அற்புதங்களை செய்த எம்பெருமானைத் தேரினில் இருத்தி அவர் ஆடி அசைந்து பவனி வருகின்ற அந்த அற்புதக் காட்சியினைக் காணவேண்டும் என்கின்ற பேரவாவானது எமது ஆலய சாகிய மக்களின் மனதில் தோன்றியது. இதன் பிரகாரம் எமது ஆலய சாகிய மக்களின் பெரும் நிதி உதவியுடன் பல இலட்சம் ரூபாய்களை செலவு செய்து 29அடி உயரத்தில் திராவிட முகப்பத்திர வடிவில் அழகிய சித்திரத் தேரானது கடந்த 2009ம் ஆண்டு செய்து முடிக்கப்பட்டது. இத்தேரானது ஈழமணித்திருநாட்டில் மூன்றாம் வீதியில் தேரோடுகின்ற விரல்விட்டு எண்ணக்கூடிய ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் பெருமை பெற்ற எமது ஆலயத்தில்; ஆடி அசைந்து பவனி வருகின்றமை கண்கொள்ளாக் காட்சியாகும்.
அத்துடன் கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாலயத்தைத் தவிர வேறு எந்தவொரு ஆலயத்திலும் மூன்றாம் வீதியில் தேர் ஓடியது கிடையாது.
எமது ஸ்ரீ மாவேற்குடா பிள்ளையார் ஆலயமானது சுற்றிவர அன்னதான மண்டபம், ஆலயகுரு தங்குமிடம் என்பவற்றுடன் அறுங்கோடையிலும் நீர் வற்றாத ஆழம் மிகுந்த கிணறுகளையும் கொண்டுள்ளது.
மேலும் உற்சவகாலமான பத்து நாட்களும் எமது ஆலயத்தில் அன்னதானம் இடம் பெறுவதுடன் மாதாந்தம் நடைபெறும் விசேட பூசை நிகழ்வுகளின் போதும் அன்னதானம் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன் சித்திரை வருடப்பிறப்பு, சித்திரை குப்தர்கதை, வைகாசி விசாகம், ஆனி உத்தரம், ஆடி பூரம், ஆவணி சதுர்த்தி (உற்சவம்), ஆவணி கோணம், நவராத்திரி, கந்த சஷ்டி, கார்த்திகை விளக்கீடு, விநாயகர் காப்பு, திருவெம்பாவை, தைப்பொங்கல், தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்திரம் என்பனவும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக சித்திரகுப்தர் கதை, கந்தசஷ்டி, திருவெம்பாவை போன்ற விஷேட தினங்களில் அடியார்கள் பெருந்திரளாக திரண்டுவந்து எல்லாம் வல்ல எம்பெருமான் ஸ்ரீ மாவேற்குடாப் பிள்ளையாரைத் தரிசிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.
மேலும் எம்பெருமானின் தேரோட்ட நிகழ்வானது எதிர் வரும் 05.09.2016ம் திகதி திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெற இருப்பது குறிப்படத்தக்கதாகும்.












