ஒன்பது இலட்சம் கோடி ரூபாய் கடன் சுமையினால் எமது நாடு அவதிப்படுகிறது : ஜனாதிபதி

முன்னாள் தலைவர்கள் சரியான முறையில் அரசாட்சி செய்திருந்தால் இரு கால்களும் தேயும் வரை நடந்துசெல்லும் தேவை ஏற்பட்டிருக்காது என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நேற்று (29) முற்பகல் மாவனல்லை பிரதேச சபைக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார். அதிகார மோகம் படைத்த ஒரு சிலர் தான் செல்லும் வழி அறியாமல் பாதையில் நடந்து சென்றபோதும் அரசாங்கம் சுயநினைவுடனும் பொறுமையுடனும் நடவடிக்கை மேற்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பாடுபடுவதாக இதன்போது ஜனாதிபதி வலியுறுத்தினார்.



இன்று ஒன்பது இலட்சம் கோடி ரூபாய் கடன் சுமையினால் எமது நாடு அவதிப்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, கடந்த அரசாங்கம் பாரிய அபிவிருத்தி பற்றி மார் தட்டிக்கொண்டு தாங்க முடியாத கடன் சுமைக்கு நாட்டை இட்டுச்சென்றபோதும் இக்கடன் சுமையினை புதிய அரசாங்கத்தினால் எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக குறிப்பிட்டார். ஒருமுறை ஜனாதிபதியாக பதவி வகித்து மீண்டுமொரு ஆட்சியைக் கோரி இரு கால்களும் தேயும் வரை நடந்துசெல்வதற்கான தேவை தனக்கு ஏற்படாதெனத் தெரிவித்த ஜனாதிபதி , தனது பதவிக் காலத்தில் தனது கடமைகளையும் பொறுப்புக்களையும் உரியவாறு நிறைவேற்றுவதாக குறிப்பிட்டார்.


அபிவிருத்தி தொடர்பாக எவ்வளவுதான் மார் தட்டிக்கொண்டபோதும் இலங்கையில் உள்ள பத்தாயிரத்து நூற்றி ஐம்பது பாடசாலைகளுள் சுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் அடிப்படை வசதிகள் காணப்படவில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இலவச சுகாதாரம் மற்றும் இலவச கல்விக்காக நியாயமான வளங்கள் பங்கீடு செய்தல் மற்றும் சிறந்த முகாமைத்துவம் தேவைப்படுவதாகவும் நாட்டின் அனைத்து மாணவர்களுக்காகவும் இவ் உரிமைகளை வழங்குவதற்கு தற்போதைய அரசு பாடுபடுவதாகவும் குறிப்பிட்டார்.