மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தின் அனுமதியுடன் மட்டிக்களி கதிரொளி விளையாட்டுக் கழகம் நேற்றும் இன்றும் (20,21.08.2016) மட்டிக்களி கதிரொளி மைதானத்தில் நடத்திய மட்டக்களப்பு கால்பந்தாட்டச் சங்கத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள கழகங்களுக்கிடையிலான அணிக்கு ஏழு பேர் பங்குபற்றும் கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் சீலாமுனை யங்ஸ்டார் விளையாட்டுக் கழகம் முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டது.
இன்று மாலை புனித இக்னேசியஸ் விளையாட்டுக் கழக அணிக்கும் சீலாமுனை யங்ஸ்டார் விளையாட்டுக் கழக அணிக்கும் இடையிலான இறுதி ஆட்டத்தில் 3:0 எனும் பேறுகளின் அடிப்படையில் சீலாமுனை யங்ஸ்டார் சம்பியனாகியது.
தொடர்ச்சியாக கதிரொளி விளையாட்டுக் கழகம் நடத்திய கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டிகளின் வரலாற்றில் ஐந்தாவது முறையாக இறுதியாட்டத்தில் பங்குபற்றிய அணியாகவும், நான்கு முறை சம்பியன் பட்டத்தை வென்ற கழகமாகவும் சீலாமுனை யங்ஸ்டார் விளையாட்டுக் கழகம் தனது சாதனையைப் பதிவாக்கிக் கொண்டது.
இந்தச் சுற்றுப் போட்டியில் இரண்டாமிடத்தை புனித இக்னேசியஸ் கழகமும், மூன்றாமிடத்தை ஏறாவூர் இளந்தாரகை கழகமும் பெற்றுக் கொண்டன.
இந்த வருடத்தில் மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தின் அனுமதியுடன் நடத்தப்பட்ட முதலாவது செவணசைட் சுற்றுப் போட்டியாக இச்சுற்றுப் போட்டி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


























