மட்டக்களப்பு டச்பார் புனித இஞ்ஞாசியார் தேவாலயத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு புனித இக்னேசியஸ் விளையாட்டுக் கழகத்தின் அனுசரையுடன் மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கம் நடத்திய ஏ பிரிவு கழகங்களுக்கிடையிலான அடிமுறி முறையிலான மாபெரும் கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் ஏறாவூர் இளந்தாரகை அணியையை வெற்றி கொண்டு நாவலடி கோல்ட்பீஸ் விளையாட்டுக்கழக அணி சம்பியனாகியது.
கடந்த 03.08.2016 ஆந் திகதியிலிருந்து மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்று வந்த இச்சுற்றுப் போட்டியில் மொத்தம் 12 கழகங்களின் அணிகள் பங்குபற்றியிருந்தன. இதில் இறுதிப் போட்டிக்கு ஏறாவூர் இளந்தாரகை அணியும் நாவலடி கோல்ட் பிஸ் கழக அணியும் தகுதி பெற்றிருந்தன.
மாபெரும் இறுதிப்போட்டி இன்று பிற்பகல் மட் வெபர் மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பெருந்திரளான பார்வையாளர்களின் பிரசன்னத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் இடைவேளை வரைக்கும் இரு அணிகளும் தலா ஒரு பேறினைப் பெற்று சமநிலையில் காணப்பட்டனர். இடைவேளையின் பின்னர் கோல்ட்பிஸ் அணியினர் மேலும் நான்கு பேறுகளைப் பெற்றார்கள். ஏறாவூர் இளந்தாரகை அணியினர் ஒரு பேறை மாத்திரமே பெற்றார்கள் இந்நிலையில் 5:2 எனும் பேறுகளின் அடிப்படையில் நாவலடி கோல்ட்பீஸ் சம்பியனாகியது.
இயேசு சபைத் துறவியர்களின் ஆசியுடன் நடைபெற்ற இன்றைய இறுதிப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தின் தலைவரும் மட்டக்களப்பு மாநகர ஆணையாளருமாகிய திரு மா.உதயகுமார் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தார்.
இன்றைய இறுதிப் போட்டியினைப் பார்வையிடும் அழைப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஏறாவூர் இளந்தாரகை விளையாட்டுக்கழக ஸ்தாபக உறுப்பினருமாகிய கௌரவ அலிஸாகிர் மௌலான அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.























