(படுவான் பாலகன்) தமிழர்களது பண்பாடு வரலாறு, கட்டாயம் எழுதப்பட, பதியப்பட, பேணப்பட வேண்டியவை. அவற்றினை எம்முன்னோர்கள் செவ்வனே செய்யாத காரணத்தினால்தான் நாங்கள் இன்றைக்கு இந்த நாட்டிலே இரண்டாம்தர பிரஞ்ஞைகளாக, வந்தேறு குடிகள் என்று மற்றவர்களால் சொல்லப்படுபவர்களாக ஆகியிருக்கின்றோம். அந்த தவறை இனிமேலும் செய்யக்கூடாது என்ற பொறுப்புணர்வோடு எழுதப்பட்ட அம்பிலாந்துறை என்ற நூல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. என தென்கிழக்கு பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி க.இரகுபரன் குறிப்பிட்டார்.
அம்பிலாந்துறையில் ஞாயிற்றுக்கிழமை(21) நடைபெற்ற அம்பிலாந்துறை கிராமத்தின் வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில் நூல் மதிப்பீட்டு உரையை நிகழ்த்துகையிலே இதனை தெரிவித்தார்.
முதுநிலை விரிவுரையாளர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்,
இலங்கை நாட்டின் பெரும்பான்மை இனத்தவர்கள் வரலாற்று உணர்ச்சி உடையவர்கள் அவர்களது வரலாற்றை உண்மையாகவோ, பொய்யாகவோ முறைப்படி பதிவு செய்திருக்கின்றார்கள். மகாவம்சம், சூழவம்சம் என்று பல்வேறு பெயர்களிலே அவர்களது வரலாற்று குறிப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுதான் அவர்களுக்கு இந்த நாட்டிலே இருக்கின்ற பூர்வீகத்திற்கு அடையாளமாக இருக்கின்றது. அவர்களை போல அவர்களைவிட தொன்மை வாய்ந்த ஒரு சமூகத்தவராக விளங்குகின்ற நாங்கள் அப்படி விளங்குவதற்கான தொல்லியல் சான்றுகள் எல்லாம் இந்த பிராந்தியங்களிலே இருந்தும், கிடந்தும் கூட அவற்றை தொகுத்து நோக்குகின்ற நிலை, எழுத்து ஆதாரபூர்வமான எந்த வரலாற்று நூலும் தொன்மை வாய்ந்த நிலையில் இல்லாமையினால்தான் நாங்கள் பின்தங்கியிருக்கின்றோம். இன முரண்பாடுகள் முடிவுற்று இன்றைக்கு எங்களது போராட்டமும் மழுங்கடிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையிலே எங்களுக்கு இருக்கின்ற ஒரே ஆயுதம் எங்களது வரலாற்றை, எங்களது உரிமையை நாங்கள் பதிவு செய்வது மாத்திரம்தான் என்றதாகிவிட்ட நிலையிலே இதுபோன்ற நூல்கள் வெளியாகுவது வரவேற்கத்தக்கதுடன் இன்னும் பல வெளிவர வேண்டும் என்றார்.













