அலுவலகத்தில் அதிகமாக கோபப்படுகிறீர்களா?

அலுவலகத்தில் உங்கள் உயர் அதிகாரியோ அல்லது உங்களிடம் பணிபுரிபவரோ  செய்யும் செயல் உங்களுக்கு அதிகமான கோபத்தை ஏற்படுத்துகிறதா? அலுவலக சூழல் நன்றாக இருந்தும் ஒரு சில கோபமான தருணங்களால் உங்கள் மனநிலை அமைதியை இழக்கும். சக ஊழியர்களுடனான நட்பும் குறையும். இந்த 5 விஷயங்கள் உங்களுக்கு கட்டாயம் கை கொடுக்கும்.



தவிர்க்க பழகுங்கள்: 

அதிக கோபம் ஏற்படுவது போல சூழல் இருந்தால் அதனை தவிர்க்க பழகுங்கள். ஒரு மீட்டிங் அதில் உங்கள் மீது விமர்சனங்கள் எழுகின்றன என்றால் ஆரோக்கியமான விமர்சனமாக இருந்தால் அதனை ஏற்றுக்கொள்ளுங்கள், அதேசமயம் தவறான விமர்சனம் என்றால் விவாதம் செய்யாமல் குறைவான வார்த்தைகளால் பதில் சொல்லி அந்த விஷயத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள். சிலர் உங்கள் கோபத்தை தூண்டினால் அந்த இடத்தில் இருப்பதை தவிருங்கள். தானாகவே உங்கள் கோபம் பாதி குறைந்துவிடும். எந்த ஒரு சூழலிலும் நீங்கள் கோபத்தை வெளிப்படுத்தி விடாதீர்கள். பிறகு எப்போது நீங்கள் செய்யும் சிறு தவறு கூட நீங்கள் கோபப்படுபவர் உங்கள் கோபத்தால் தான் இந்த தவறு நடந்தது என்று அடையாளப்படுத்தப்படுவீர்கள்.

பகிருங்கள்:

உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும் விஷயங்களை நெருங்கிய நண்பரிடம் பகிருங்கள். அந்த நண்பர் உங்கள் கருத்துக்களை பொறுமையாக கேட்பவராகவும், உங்கள் கருத்துக்களை ரகசியமாக வைத்திருப்பவராகவும் இருப்பது அவசியம்.  உங்கள் கோபத்துக்கான பிரச்னை குறைகிறதோ, இல்லையோ, நீங்கள் மற்றவரிடம் பகிர்வதால் உங்கள் கோபத்தின் வலிமை குறையும், உங்களால் உங்களது  பழைய நிலைக்கு எளிதாக திரும்ப முடியும். உங்களுக்கான சரியான ஸ்ட்ரெஸ் பஸ்டரை தேர்ந்தெடுங்கள். அவர்களை நேரில் சந்தித்தோ அல்லது ஒரு போன் கால் மூலமாகவோ தொடர்பு கொண்டு உங்கள் கோபம் குறித்து பகிருங்கள். அதேசமயம்  அவருக்கும் நீங்கள் ஒரு சிறந்த ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருங்கள்.

ஒருமுகப்படுத்துதல்:

இது ஏதோ யோகா, தியானம் போன்ற விஷயங்கள் அல்ல, நீங்கள் செய்யும் வேலையில் முழுகவனத்தோடு ஈடுபடுவதே முழுமையான ஒருமுகப்படுத்துதலை தரும். ஆனால் அந்த வேலைக்குள் உங்கள் கோபத்தை திணிக்காமல் உங்கள் கோபத்தால் உண்டான வேகத்தை மட்டும் அனுமதியுங்கள். எப்போதுமே கோபத்தை தவிர்த்து வேலையில் அதே வேகத்தை செலுத்தினால் செயற்திறன் இரண்டு மடங்கு அதிகரிக்கும். உங்கள் கோபத்தை தூண்டும் செயல்களில் நீங்கள் வெற்றியடைந்தால் உங்கள் கோபம் வெளியில் தெரியாது.

8 மணி நேரம் உறங்குங்கள்:

ஏதோ ஒரு நாள் மிக அதிகமான கோபத்துக்கு ஆளாகிறீர்கள் என்றால் அன்று மட்டும் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு வேறு எந்த வேலைகளுக்கும் நேரம் ஒதுக்காமல் விரைவாக இரவு உணவை முடித்துவிட்டு உறங்க செல்லுங்கள் சாதாரணமாக 6-7 மணி நேரம் உறங்குபவர்கள் இன்னும் ஒரு மணி நேரம் கூடுதலாக 8 மணி நேரம் உறங்குங்கள் காலையில் நீங்கள் கோபப்பட்டதற்கான நினைவே இல்லாத மனநிலையில் புதிய விஷயங்களை துவங்குவீர்கள்.