உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரி செலுத்துநர்களுக்கான சிறப்புரிமை அட்டை வழங்கும் நிகழ்வு


(சிவம், ஆர்.சயனொளிபவன்);

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மட்டக்களப்பு பிராந்திய பணிமனையினால் வரிகள் செலுத்துவோருக்கான தங்கம் மற்றும் சில்வர் சிறப்புரிமை அட்டைகள் வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (13) மட்டக்களப்பு ஈஸ்ட் லகூண் ஹோட்டலில் நடைபெற்றது.


உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின்  பிராந்திய ஆணையாளர் சட்டத்தரணி எம். கணேசராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்

வரி மதிப்பீட்டு ஆண்டிற்கு ரூபா 500,000 இற்கு மேற்பட்ட வருமான வரி செலுத்தியும், விபரத்திரட்டினை உரிய திகதியோ அல்லது அதற்கு முன்போ சமர்ப்பித்த தனிப்பட்ட நபர்கள் 21 பேருக்கு சில்வர் அட்டையும், ரூபாய் 1,000,000 மேல் செலுத்தி விபரத்திரட்டினை உரிய திகதியோ அல்லது அதற்கு முன்போ சமர்ப்பித்த தனிப்பட்ட நபர்கள் 16 பேருக்கு தங்க அட்டையும் வழங்கி வைக்கப்பட்டன.

சிறப்புரிமை அட்டைகளைக் கொண்டவர்களுக்கு கழிவுடனான வாகனக் கொள்வனவு, விமான நிலையங்களில் முக்கிய பிரமுவருக்கான சேவைகள், வைத்தியசாலைகள் மற்றும் அரச திணைக்களங்களில் இலகுவாக சேவைகளை அணுகும் வசதிகள்  அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த ஆணையாளர் நாயகம் கல்யாணி தஹநாயக்க, சிறப்புரிமை அட்டைகளை வழங்கி வைத்ததோடு  பிரதேச செயவாளர்கள் சான்றிதழ்களையும் மற்றும் திணைக்கள உத்தியோகத்தரால் மாலையணிவிக்கப்பட்டு கௌரவமும் செலுத்தப்பட்டன.