அமைதியான ஆட்கொல்லி (Silent Killer)

யார் இந்த அமைதியான ஆட்கொல்லி?
ஒரு நோய்க்குரிய அறிகுறிகள் வெளிக்காட்டப்படும் போது அதனை சிகிச்சை முறை அல்லது முறைகளின் மூலம் குணப்படுத்த அல்லது அதன் வீரியத்தன்மையினை கட்டுப்படுத்த முடியும்.

ஆனால் உயிர் குருதி அழுத்தமானது பெரும்பாலானவர்களில் எதுவித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமல் இருப்பதோடு, அவர்களின் ஏனைய அங்கங்களின் குறிப்பாக இதயம், மூளை, மற்றும் சிறுநீரகம் போன்றவற்றின் தொழிற்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்துவதன் மூலம் மரணத்தை விரைவாக்குகின்றது.

இவ்வாறு ஆரவாரமின்றி மரணத்தை ஏற்படுத்துவதனாலேயே இதனை அமைதியான ஆட்கொல்லி (Silent Killer)  என்கின்றார்கள்.





தற்கால நிலையின் தரவுகள்  
  • தற்காலத்தில் தொற்று நோய்களினால் ஏற்படுகின்ற மரணத்தை விட தொற்றா நோய்களினால் (Non-Communicable disease) ஏற்படுகின்ற மரணங்களே அதிகம 
  • உலக சுகாதார அமைப்பின் தகவல்களின்படி தொற்றா நோய்களினால் ஏற்படும் மரணமானது  2012ம் ஆண்டில்  38 மில்லியனாக காணப்பட்டதோடு, 2030ம் ஆண்டளவில் 58 மில்லியனாக உயரும் எனக் சுட்டிகாட்டப்பட்டுள்ளது. 
  • தொற்றா நோய்களினால் ஏற்படும்ம ரணத்தில் 82% ஆனது பிரதானமாக நான்கு நோய்களினால் ஏற்படுத்தப்படுகின்றது. ஏற்படும் சதவிகிதத்தின் அடிப்படையில் அவை முறையே, இதயம் மற்றும் இரத்தக் குழாய்களில்  ஏற்படும் நோய்கள் (Cardio Vascular disorders - 37%), புற்று நோய்கள் (Cancers - 27%)  நீண்ட கால சுவாச நோய்கள் (Chronic Respiratory Diseases - 8%)  மற்றும் நீரிழிவு (Diabetes mellitus - 4%)
  • தொற்றா நோய்களுள் இதயம் மற்றும் இரத்தக் குழாய்களில் ஏற்படும் நோய்களானது மரணத்தை ஏற்படுத்துவதில் பாரிய பங்கை வகிக்கின்றது. வருடந்தோரும் 17   மில்லியன் மக்கள் இதன் மூலம் மரணமடைகின்றனர். 
  • இதயம் மற்றும் இரத்தக்குழாய்களில் ஏற்படும் நோய்களுக்குரிய  பிரதான காரணியாக உயர் குருதி அழுத்தம் (Hypertension) அமைகின்றது. 
  • இதய மற்றும் இரத்தக்குழாய்களில் ஏற்படும் நோய்களினால் ஏற்படுத்தப்படுகின்ற மரணத்தில் அண்ணளவாக 45% ஆனவை உயர் குருதி அழுத்தத்தினால் ஏற்படுகின்றது. 
  • இலங்கையில் இதயம் மற்றும் இரத்தக் குழாய்களிள் ஏற்படும் நோய்களானது தொற்றா நோய்களுள் பிரதான இடத்தை வகிக்கின்றது. 
  • இலங்கையில் 2013 ம் ஆண்டில் அண்ணளவாக ஒரு இலட்சம் பேர் உயர் குருதி அழுத்தம் காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களுள் 578 பேர் மரணம் அடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
உயர் இரத்த அழுத்தத்தின் அளவீடுகளும் படிநிலைகளும் யாவை? 
  • இதயம் சுருங்கி விரிவதன் மூலம் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான குருதியை பாய்ச்சுகிறது. இதன் மூலம் உயிர்க்கலங்களுக்கு தேவையான ஒக்சிசனையும், போசணையும் வழங்கி உயிரின் நிலைத்திருப்பை உறுதி செய்கின்றது. 
  • இதய துடிப்புக்களுக்கிடையே இதயதசை சுருங்குவது (Systole) அல்லது தளர்வுறுவது (Diastole) என்பதை பொறுத்து இரத்த அழுத்தம் இதய சுருங்கியக்க அழுத்தம் (Systolic Pressure) இதய விரிவியக்க அழுத்தம் (Diastolic Pressure)  என்ற அளவுகளை உடையது. 
  • ஓய்வுநிலையில் ஒரு சுகதேகி மனிதனின் சுருங்கியக்க அழுத்தம் 120mmHg ஐ விட குறைவாகவும் விரிவியக்க அழுத்தம் 80mmHg  ஐ விட குறைவாகவும் காணப்படும் போது இது சாதாரண இரத்த அழுத்தமாக கருதப்படும். 
  • எனினும் சுருங்கியக்க அழுத்தம் 140mmHg ஐ விட அதிகமாகவும் விரிவியக்கஅழுத்தம் 90mmHg  ஐ விட அதிகமாகவும் தொடாந்து காணப்படும் போது அந்நிலை உயர் குருதி அழுத்த நிலை (Hypertension) என கருதப்படுகின்றது. 

உயர் இரத்த அழுத்தத்தின் வகைகள் யாவை? 
இது இரண்டு வகைகளைக் கொண்டுள்ளது. 
1. முதன்மை / அடிப்படை உயர் இரத்த அழுத்தம் (Primary Hypertension)
2. இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தம் (Secondary Hypertension)
முதன்மை / அடிப்படை உயர் இரத்த அழுத்தம் (Primary Hypertension)
  • இது மொத்த உயர் அழுத்த நிகழ்வுகளில் 90-95%  இனை உள்ளடக்கியது 
  • இது வெளிப்படையான மருத்துவ காரணங்கள் ஏதுமின்றி ஏற்படுகின்றது.
இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தம் (Secondary Hypertension)
  • இது மீதமுள்ள 5-10% ஆன உயர் இரத்த அழுத்த நிகழ்வுகளை உள்ளடக்குகின்றது. 
  • இது சிறுநீரகம், தமணிகள், இதயம் போன்ற உறுப்புக்களின் செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்படுவதனால் உண்டாகுகின்றது.
உயர் இரத்த அழுத்தத்தினை தூண்டும் அபாய காரணிகள் யாவை? 
  • குடும்பப் பிண்ணணி, மன அழுத்தம், சுகாதாரமற்ற உணவுப்பழக்க வழக்கங்கள், அதிகரித்த உடற்பருமன், சுறுசுறுப்பற்ற வாழக்;கை முறை, புகைத்தல் மற்றும் மதுப்பாவனை போன்றன உயர் இரத்த அழுத்தத்தினை தூண்டும் காரணிகளாக அமைகின்றன.




உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் யாவை? 
  • உயர் இரத்த அழுத்தமானது பெரும்பாலான நோயாளர்;களில் எதுவித அறிகுறிகளையும் வெளிக்காட்டுவதில்லை. 
  • இதன் காரணமாக இதை சாதாரணமாக குணங்குறிகளை வைத்து இலகுவாக கண்டறிய முடியாது. 
  • இவற்றின் அறிகுறிகள் மருத்துவ பரிசோதனைகளின் (Screening)  மூலம் அல்லது ஏதாவது உடல் நலப்பிரச்சினைக்காக மருத்துவ பராமரிப்பை நாடும் போது தெரிய வருகிறது 
  • எனினும் சில நோயாளர்களில் தலைச்சுற்றல், தலைவலி, மூச்சு விடுவதில் கடினம், நெஞ்சுவலி, நெஞ்சுப்படபடப்பு, கண்பார்வை குறைபாடு மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்படலாம்.


உயர் இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் உடல் நலச் சிக்கல்கள் யாவை? 
  • உயர் இரத்த அழுத்தமானது நீண்டகாலத்திற்கு கட்டுப்பாடின்றி காணப்படும் போது உடலில் பல்வேறுபட்ட சிக்கல்களை ஏற்படுத்தி மரணத்தையும் துரிதப்படுத்து கின்றது. 
  • குறிப்பாக மூளை, இதயம், கண் மற்றும் சிறுநீரகம் போன்றவை பாதிக்கப்பட்டு மாரடைப்பு, பாரிசவாதம், நினைவிழத்தல், சிறுநீரகச் செயலிழப்பு, கண்பார்வை பாதிப்பு மற்றும் கை, கால்களி;ல், வீக்கம் போன்றவை ஏற்படும்.
இதனை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்? 
  • உயர் இரத்த அழுத்த நோயாளர்களில் பெரும்பாலானவர்கள் தாம் இந் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதை அறியாமல் இருப்பதானது இந்நோயை கட்டுப்படுத்துவதில் பாரிய சவாலாக அமைகின்றது 
  • பொதுவாக உணவு மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் இதனை கட்டுப்படுத்துவதோடு, இதனால் ஏற்படுத்தப்படும் உடல் நலச்சிக்கல்களின் அபாயத்தையும் குறைக்க முடியும். 
  • எனினும் வாழ்கை முறை மாற்றங்கள் சுகாதாரமானதாக அல்லது திறனற்றதாக இல்லாதவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அவசியமானதாக இருக்கின்றது.
 உயர் இரத்த அழுத்தத்தினை தடுப்பதற்கான வழிமுறைகளாவன: 
  • சாதாரண உடல் எடையை பேணல் (உடல் திணிவு சுட்டியை 18.5-22.9 கிலோ/மீற்றர்2 என்ற வரையறைக்குள் பேணல்) 
  • உணவில் உள்ளடக்கப்படும் சோடியத்தின் அளவை நாளொன்றிக்கு 5g ஜ விட குறைவாக உள்ளெடுத்தல். 
  • சுறுசுறுப்பான நடைப்பயிற்சியில் ஈடுபடல் (வாரத்தில் பெரும்பாலான நாட்களில் ஈடுபடல், நாளொன்றுக்கு குறைந்தது 30 நிமிடங்கள் நடைபயிற்சியில் ஈடுபடல்). 
  • புகைத்தலை முற்றாக தவிர்ப்பதோடு மது அருந்துவதையும் கட்டுப்படுத்தல். 
  • நாளொன்றில் உள்ளெடுக்கப்படும் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளின் அளவைக் கூட்டல். 
  • உடலிற்கு தீங்கு விளைவிக்ககூடிய கொழுப்புணவுகள் உள்ளெடுக்கப்படும் அளவை குறைத்தல். 
  • மன அழுத்தத்தை குறைக்கும் வழிமுறைகளில் ஈடுபடல் ;(தியானம் மற்றும் போதிய ஓய்வெடுப்பு)





கா.கார்த்திஜெகன்
விரிவுரையாளர்,
சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம்,
கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை.