(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேசசபையினால் குறித்தொதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடை வேலைத்திட்டத்தின் கீழ் 4மில்லியன் நிதியில் கொக்கட்டிச்சோலை கிராமசேவகர் பிரிவிற்கு 350மீற்றர் நீளத்திலும், பண்டாரியாவெளி கிராமசேவையாளர் பிரிவிற்கு 325மீற்றர் நீளத்திலும் நீர்குழாய்கள் பதிக்கும் வேலை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதேசசபை செயலாளர் குமுதா ஜோன்பிள்ளை தெரிவித்தார்.
மேலும் அம்பாறை phase – iii வேலைத்திட்டத்தின் 2ம் கட்டத்தில் பிரதேச சபையினால் முன்மொழியப்பட்டுள்ள கிராமங்களுக்கு குடிநீர் குழாய்களை பதிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் மாவட்ட நீர்வழங்கல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பிரதேசங்கள் பலவற்றிற்கு குடிநீர் வழங்கும் முகமாக பொலி எதலின் நீர்குழாய் பதிக்கப்பட்டு வருகின்றது.
இவ்வேலைத்திட்டத்தின் கீழ் பண்டாரியாவெளி, படையாண்டவெளி கிராமங்கள் உள்வாங்கப்படவில்லை. இது தொடர்பில் அக்கிராம மக்கள் முறையிட்டதனை தொடர்ந்து மண்முனை தென்மேற்கு பிரதேசசபையினால் நீர்வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.













