(சித்தா)
பட்டிருப்பு கல்வி வலயத்தில் மன்முனை தென் எருவில் பற்று, போரதீவுப் பற்று என இரண்டு கோட்டக் கல்விப் பிரதேசங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் போரதீவுப் பற்றுப் பிரதேசம் பின்தங்கிய பிரதேசமாகக் காணப்படுகின்ற பிரதேசமாக காணப்பட்ட போதிலும் இப் பிரதேசத்தில் கடமைபுரியும் அனைத்து ஊழியர்களினதும் அர்ப்பணிப்பான சேவையின் நிமித்தம் மெதுமெதுவாக வளர்ச்சிகண்டு வருகின்ற பிரதேசமாக காணப்படுகின்றது.
இந்த வகையில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் அவர்களின் முயற்சி காரணமாகவும், போரதீவுப் பற்று பிரதேச கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.பூ.பாலச்சந்திரன் அவர்களின் தீவிர செயற்பாட்டுடன் இப் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவையின் நிமிர்த்தம் கல்வியில் வளர்ச்சி கண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இவ் வளர்ச்சிக்கு அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்பும் ஒரு காரணமாக அமைந்துவிடுகின்றமையும் குறிப்பிடமுடியும். போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் உலக தரிசன நிறுவனம் கல்விக்காக காத்திரமான பங்களிப்பினை வழங்கிவருகின்றது. மாணவர்களின் கல்வித் தரத்தினை உயர்த்தும் நடவடிக்கைகளுக்கு பாதகமாக அமையும் காரணிகளை இனங் கண்டு அதனை நிவர்த்தி செய்வது உலக தரிசன நிறுவனத்தின் பணிகளில் ஒன்றாகும். இதன் காரணமாக மாணவர்களின் தொடர் கல்வி நடவடிக்கைக்கு சீரான போக்குவரத்து இன்மையை இனங்கண்ட உலக தரிசன நிறுவனமும் போரதீவுப் பற்றுக் கோட்டக் கல்விப் பணிப்பாளரும் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி சீரான போக்குவரத்தினை ஏற்படுத்த முன் வந்திருந்தனர்.
இந்த வகையில் இன்று உலக தரிசன நிறுவன அனுசரனையுடன் மட்/வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இனங்காணப்பட்ட மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பட்டிருப்பு கல்வி வலய நிருவாகத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.மா.உலககேஸ்பரம், அவர்களுடன், கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.பூ.பாலச்சந்திரன், உலக தரிசன திட்ட முகாமையாளர் திரு.பா.றோகாஸ் அவர்களும் பட்டிருப்பு கல்வி வலய ஆரம்பப்பிரிவிற்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.பா.வரதராஜன் அவர்களும், போரதீவுப் பற்று பிரதேச பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். அத்துடன் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.மா உலககேஸ்பரம், கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.பூ.பாலச்சந்திரன், உலக தரிசன திட்ட முகாமையாளர் திரு.பா.றோகாஸ் ஆகியோருக்கு அவர்களின் சேவையினைப் பாராட்டி போரதீவுப்பற்று பிரதேச பாடசாலை அதிபர்களினால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கபட்டமை விசேட அம்சமாகும். அத்துடன் அதிபர்களுக்கு அலுவலக பைகளும் உலக தரிசன திட்ட முகாமையாளர் திரு.பா.றோகாஸ் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்;



























