எமது மாகாணம் தொடர்பில் திட்டங்களை சரியான முறையில் இந்த மாகாண நிர்வாகம் எடுக்கின்ற அதே மூச்சில் செய்து கொண்டு போக முடியாத வகையில் நிர்வாகத் தடங்கல்கள் இருந்து வருகின்றன. இந்த நிர்வாகத் தடங்கல்களை நீக்குவதற்கு சில நடவடிக்கைகளைக் கையாண்டால் அதனை அரசியல் பலிவாங்கள் என்கின்ற பொருள்கோடலிலேயே கொள்கின்றார்கள். என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.
இந்த 21ம் நூற்றாண்டில் நாம் எவ்வாறு எங்களுடைய மனப்பாங்குகளை மாற்றிக் கொள்ள வேண்டும் எமது மனப்பாங்குகளை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற ரீதியில் பல விடயங்களை சிந்திக்க வேண்டும். சிலர் சொல்லுகின்றார்கள் அறம் என்பது நிர்வாகத்தில் ஒரு விதமாகவும் அரசியலில் ஒரு விதமாகவும் ஆலயங்களில் ஒரு விதமாகவும் இருக்கின்றது என்று. ஆலயங்களில் காட்டுவதனைப் போன்று பரோபகாரத்தினை நிர்வாகத்தில் காட்ட முடியாது. அது போல் அரசியலில் மற்றவரை வீழ்த்த வேண்டும் என்கின்ற சூழ்ச்சி இருந்தால் தான் அரசிலில் நின்று பிடிக்கலாம் என்கின்ற தத்துவங்கள் எல்லாம் பலரிடத்தில் உண்டு. என்னைப் பொருத்த மட்டில் நான் அவற்றை ஏற்றுக் கொள்வதற்கும் தயாரக இல்லை, அதனைப் பின்பற்றுவதற்கும் தயாராக இல்லை. ஏனெனில் அறம், தர்மம் என்று சொன்னால் எல்லாவற்றிற்கும் ஒரே வழிதான். அந்தவகையான மனப்பாங்கு இன்று எங்களுடைய நாட்டிற்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது.
தெரிந்தோ தெரியாமலோ நாங்கள் சில சூழ்நிலைகளுக்குக் கட்டுப்பட்டு சில விடயங்களை செய்ய வேண்டி ஏற்படுகின்றது என்கின்ற ஒரு யதார்த்தம் இருக்கின்றது. அந்த யதார்த்தத்தில் இந்த நாட்டில் பின்பற்றப்படுகின்ற ஒரு விடயம் என்னவென்றால் எங்களுடைய வெளி விடயங்களையெல்லாம் நாங்கள் எமது தொழில் விடயங்களுக்குள் கொண்டு வருவதுதான் இதற்கான காரணமாக இருக்கின்றது.
அமெரிக்க போன்ற நாடுகளில் அரசாங்கம் மாறும் போது அங்குள்ள நிர்வாகங்களும் மாற்றப்படும், மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று வருகின்ற அரசாங்கமானது மக்களுக்கான விடயங்களை மேற்கொள்ளும் போது அதன் கீழுள்ள நிர்வாகங்கள் மூலமே மேற்கொள்ள வேண்டும். திட்டத்தை வரைகின்ற அரசியற் துறை ஏதோ ஒரு நோக்கத்தில் செய்து கொண்டிருக்க நிர்வாகத்துறை இன்னுமொரு விதத்தில் செய்து கொண்டிருந்தால் அது அந்த அரசாங்கத்தைப் புறக்கணிப்பது என்பதை விட மக்களின் ஆணையைப் புறக்கணிப்பது என்கின்ற ஒரு நிலைமையைத் தான் உருவாக்கும். எனவே மக்களுடைய ஆணையை அந்த மக்களினால் ஆணை பெற்ற அந்த ஆட்சியினரும், ஆட்சியினரின் கொள்கைகளைச் செயற்படுத்துகின்ற நிர்வாகத்தினரும் நூற்றுக்கு நூறு வீதம் கடைப்பிடிப்பவர்களாக இருக்க வேண்டும். எனவே தான் அமெரிக்க அவ்வாறானதொரு நடைமுறையைக் கையாளுகின்றது ஆனால் எமது ஆசிய நாடுகளில் அவ்வாறான நடைமுறைகள் கையாழுவதுமில்லை, கையாள முடியாமலும் இருக்கின்றது.
அவ்வாறு வருகின்ற போது தான் திட்டங்களை அரசியலாளர்கள் ஆக்குகின்ற போது எந்த விடயத்தையும் நியாயப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்ட நிர்வாகத்தினர் அதனை உரிய முறையில் அமுல்ப்படுத்த வேண்டும். உண்மையில் போடப்படுகின்ற திட்டங்களுக்கு மாறாக அதிகாரிகள் செயற்படுகின்ற நிலைமை ஒன்று இலங்கையில் இருக்கின்றது. இவ்வாறான விடயங்களுக்கு அரசியலாளர்கள் எடுக்கின்ற நடவடிக்கைகளை அரசியற் பலிவாங்கல் என்று சொல்லிக் கொள்வதும் வேலைகளைத் தடைபோடுவதுமான விடயங்கள் நடைபெறுகின்றன. இவை மாற்றப்பட வேண்டும்.
2015ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு மாற்றத்தின் பின்னர் கிழக்கு மாகாண சபை ஆட்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லீம் காங்கிரசும் இணைந்த மாகாண நிர்வாகம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இருந்த பொழுதிலும் எமது மாகாணம் தொடர்பான திட்டங்களை சரியான முறையில் இந்த மாகாண சபை எடுக்கின்ற அதே மூச்சில் செய்து கொண்டு போக முடியாத வகையில் நிர்வாகத் தடங்கல்கள் இருந்து வருகின்றன. இந்த நிர்வாகத் தடங்கல்களை நீக்குவதற்கு சில நடவடிக்கைகளைக் கையாண்டால் அதனை அரசியல் பலிவாங்கள் என்கின்ற பொருள்கோடலிலேயே கொள்கின்றார்கள். எனினும் அவ்வாறான ஒரு விடயத்தைச் செய்வதற்கு நாங்கள் விரும்பவில்லை. இதனை நிர்வாகத்தினர் அதிகாரிகள் நிச்சயமாக தங்கள் மனம் கொள்ள வேண்டும்.
அதிகாரிகள் தங்களின் அறிவுபூர்வமான நடத்தைகளின் மூலம் வேறு வெளிக்காட்டல்களைச் செய்தாலும் கூட செயற்பாடுகளுக்கு பல்வேறு விதமான தடங்கள்களை ஏற்படுத்தக் கூடிய விதத்தில் நிலைமைகள் இருக்கக் கூடாது என்பதுதான் எனது கருத்து இந்த விடத்தை விளங்கிக் கொள்ள வேண்டியவர்கள் விளங்கிக் கொண்டு இதனைக் கையாள வேண்டும்.
எமது மாகாணத்திற்குரிய விடயத்தை மாகாண நிர்வாகம் கையாள்வதில் இங்கு சிங்கல்கள் பல இருக்கின்றன. அந்த மாகாணத்திற்குரிய விடயத்தை அந்த மாகாண நிர்வாகமே கையாழ வேண்டும் அதில் மத்திய அரசியலாளர்களையும் சேர்த்து மேற்கொள்ள வேண்டும் அதுவும் முக்கிய விடயம் ஒரு சாரார் மற்றைய சாராரைப் புறக்கணிப்பது என்பது ஒரு நல்ல அரசியல் நாகரீகத்தை உருவாக்க மாட்டாது.
இதற்கு முன்னுள்ள ஆட்சியின் போது ஆட்சியில் இருந்த அரசியல்வாதிகளுக்கு அவர்களுக்குரிய கௌரவம் அளவிற்கு அதிகமாகவே கொடுக்கப்பட்டிருந்ததது. அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் முற்றாகப் புறக்கணிக்கப்ட்டிருந்தோம். ஆனால் அந்த நிலைமை மாறிவிட்டது.
கிழக்கு மாகாணத்தைப் பொருத்தமட்டில் அதுவும் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொருத்த மட்டில் மக்களின் ஆணை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தான் இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சாராத தமிழர் என்ற ஒருவரும் எவ்வாறு வந்தார் என்பது பற்றி அனைவரும் அறிந்ததே. எனவே மக்களின் ஆணையைப் பெற்ற அந்த அரசியலாளர்களைப் புறக்கணித்து விட்டு அதிகாரிகளின் செயற்பாடுகள் தெரிந்தோ தெரியாமலோ இடம்பெறக் கூடாது.
இப்பாடசாலைக்கு இது இரண்டாவது முறை கல் வைக்கப்படுகின்றது என்கின்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழலாம் அதற்கு நான் மேல் கூறப்பட்டவையே காரணங்களாகும். அதனால் தான் இந்த கல் வைக்கும் விடயங்களை நாம் மாணவர்களிடமே ஒப்படைத்தோம். முன்னர் இடம்பெற்ற விடயத்தை நாம் சீர்செய்துள்ளோமே தவிர நாங்கள்தான் இதற்கு உரியவர்கள் என்று அடையாளம் காட்டுவதற்காக அல்ல என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். மிகவும் நாகரீகமாக இந்த விடயத்தை நாங்கள் திருத்தியுள்ளோம் அவ்வளவுதான். என்று தெரிவித்தார்.














