குருக்கள்மடத்தில் குருக்கேத்திரன்போர் வடமோடிக்கூத்து அரங்கேற்றம் 03.09.2016 சனிக்கிழமை கிருஷ்ணன் கோயிலுக்கு முன்னால் அமைக்கப்பட்ட களரியில் இடம்பெற்றது. குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தினரால் நடாத்தப்பட்ட இந்நிகழ்வு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத் தலைவர் வீ.மகேஸ்வரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு அதிதிகளாக கலாநிதி க.இராஜேந்திரம், பீடாதிபதி, கலை கலாசாரப்பீடம், கிழக்குப்பல்கலைக்கழகம், கலாநிதி சி.ஜெயசங்கர், பணிப்பாளர், சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம், திரு எம்.உதயகுமார், ஆணையாளர், மாநகரசபை, மட்டக்களப்பு ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
கலாநிதி வடிவேல் இன்பமோகன் அவர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இக்கூத்து அண்ணாவியார் திரு வே.தம்பிமுத்து அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டதாகும். இவருக்கு உதவி அண்ணாவியாராக திரு சீ.அலெக்ஸ்சாண்டர் செயற்பட்டார். கொப்பியாசிரியராக திரு வி.கோடீஸ்வரன் விளங்கினார். கூத்தர்களாக குருக்கள்மடம் கிராமத்தைச் சேர்ந்தவர்களும் அயல் கிராமங்களைந் சேர்ந்த சிலரும் பங்குகொண்டனர்.
நீண்ட கால இடைவெளிக்குப்பின்னர் இடம்பெற்ற ஒரு நிகழ்வாக இது இடம்பெற்றதால் கிராமமே விழாக்கோலம் கொண்டிருந்தது.
குருக்கள்மடத்தில் கடந்த நான்கு தசாப்தங்களாக கூத்துச் செயற்பாடுகள் இடம்பெறவில்லை. இந்நிலையில் குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க கலாநிதி வடிவேல் இன்பமோகன் அவர்களால் இச்செயற்பாடு ஆரம்பக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டது. கூத்துச் செயற்பாடுகளை மீண்டும் குருக்கள்மடம் கிராமத்தில் ஆரம்பித்து தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்பது இச்செயற்பாட்டின் நோக்கமாக அமைந்திருந்தது.
நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் தொடங்கிய முயற்சியாக இது அமைந்திருந்ததால் இச்செயற்பாட்டை ஆரம்பிப்பதிலும் பயிற்சிகளை தொடர்வதிலும் பல சிரமங்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது.
இச்சிரமங்களுக்கு அடிப்படையான காரணியாக இருந்தது குருக்கள்மடம் கிராமத்தில்கூத்தர்கள், கூத்தினை பயிற்றுவிப்பதற்கான திறன் உள்ள கலைஞர்களின் பற்றாக்குறையே அமைந்திருந்தது. இருந்தும் அச்செயற்பாட்டை ஆரம்பித்து ஓரிரு மாதங்களில் கூத்துடன் தொடர்புடைய பலரின் ஒத்துழைப்பும் இச்செயற்பாடு வெற்றிகரமாக அமைவதற்கு உதவியது. இச்செயற்பாட்டில் இணைந்து கொண்ட பலரினதும் அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பானது இக்கூத்தினை அரங்கேற்ற விழா வரை நகர்த்தியுள்ளது.
கூத்துக்கலை ஒரு மக்கள் கலை. மக்களின் பல்வேறு வாழ்வியல் அம்சங்களுடனும் பின்னிப்பிணைந்த கலைவடிவம். கூத்து பழகுவது, அரங்கேற்றுவது, பல்வேறு பிரதேச்களிலும் மீள் களரியேற்றம் செய்வது என்பது யாவும் அதன் சமூகத் தொடர்பாடலுடன் தொடர்புடையது.
ஒரு கிராமத்தில் கூத்துச் செயற்பாடுஇடம்பெறுகிறது என்றால் அதன் பயிற்சிக்காலத்தில் இருந்து குறித்த ஊர்மக்கள், அயல்கிராமத்தவர், கூத்துடன் தொடர்புடைய குதித்த பிராந்தியத்தைச் சேர்ந்த மக்கள் யாவரும் இணைந்து கொள்வதுடன் அவர்களின் முழுப் பங்களிப்பையும் வழங்குவார்கள். ஏனைய கலைகளுக்கு இல்லாத கூத்தில் காணப்படும் இத்தன்மையிலேயே கூத்தின் அழகியல் அடிப்படைகள் தங்கியுள்ளன.
கூத்துச் செயற்பாடுகளில் இணைந்து கொள்பவர்கள் எவரும் அவர்களின் வாழ்வியல் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஒரு வருமான ஈட்ட மூலமாகக் கூத்தை பயில்வதும் இல்லை, ஆடுவதும் இல்லை. கூத்து செயற்பாட்டில் ஈடுபடுவது என்பது அவர்களின் வாழ்வியல் செயற்பாடுகளில் ஒரு பகுதியாகவே கருதுகின்றனர். மக்களின் அழகில் தேவை கூத்தின் மூலம் பெறப்படுகிறது. கூத்து செயற்பாட்டிற்கான பல கிராமத்தவர்களும் இணைவதும் அவர்களின் பங்களிப்பை வழங்குவதும் இணைந்து செயற்படுவதும் இங்கு அடிப்படையாகின்றது.
சமூகங்களின் ஒற்றுமை, கூட்டிணைவு, ஒருமைப்பாடு என்பனவற்றை சாத்தியமாக்குவதில் கூத்தின் வகிபாகம் முக்கியமானது. கூத்தின் தொடர் உயிர்ப்புக்கான பின்புலத்தை வழங்குவதே கூத்துடன் தொடர்புடையவர்களின் கூத்து தொடர்பாக சிந்திப்பவர்களின் பணியாக இருக்கவேண்டும். ஏனெனின் கூத்து ஒரு சமூக ஒருமைப்பாட்டிற்கான கலை.












