குருக்கள்மடத்தில் குருக்கேத்திரன்போர் வடமோடிக்கூத்தின் அரங்கேற்றம் எதிர்வரும் 03.09.2016 சனிக்கிழமை மாலை இடம்பெறவுள்ளது. குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தினரால் நடாத்தப்படும் இந்நிகழ்வு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத் தலைவர் வீ.மகேஸ்வரன் அவர்கள் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்விற்கு அதிதிகளாக கலாநிதி க.இராஜேந்திரம், பீடாதிபதி, கலை கலாசார பீடம், கிழக்குப்பல்கலைக்கழகம், கலாநிதி சி.ஜெயசங்கர், பணிப்பாளர், சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம், திரு எம்.உதயகுமார், ஆணையாளர், மாநகரசபை, மட்டக்களப்பு, கலாநிதி மூ.கோபாலரெட்னம், பிரதேச செயலாளர், மன்முனை தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
கலாநிதி வடிவேல் இன்பமோகன் அவர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இக்கூத்து அண்ணாவியார் திரு வே.தம்பிமுத்து அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டதாகும். இவருக்கு உதவி அண்ணாவியாராக திரு சீ.அலெக்ஸ்சாண்டர் செயற்பட்டார். கொப்பியாசிரியராக திரு வி.கோடீஸ்வரன் விளங்கினார். கூத்தர்களாக குருக்கள்மடம் கிராமத்தைச் சேர்ந்தவர்களும் அயல் கிராமங்களைந் சேர்ந்த சிலரும் விளங்குகின்றனர்.
இக்கூத்தில் கூத்தர்களாக பின்வருவோர் கலந்து சிறப்பிக்கின்றனர்.
கட்டியங்காரன் : செல்வன் ர.கேசியன்,
குருக்கேத்திரன் : திரு எஸ்.சந்திரகுமார்,
சித்திரரேகை : செல்வன் நி.கேமக்சன்,
கிருஸ்ணர் : திரு.இ.வேல்சிவம்,
பரமசிவன் : திரு இ.மதன்,
தருமர் : திரு.ம.புவி,
அருச்சுனன் : திரு.த.ரவி,
வீமன் : செல்வன் யோ.ரோகிலன்,
நகுலன் : திரு.செ.சுகிலன்,
சகாதேவன் : திரு சா.இரவீந்திரராஜா,
திரௌபதி : திரு.ப.சந்திரசிவம்,
இந்திரன், நாரதர் : செல்வன் அ.ரேனுஜன்,
துரியோதனன் : திரு கா.அற்புதன்,
கன்னன்,யமன் : செல்வன் வே.லோகிதன்,
சகுனிஃமந்திரி : திரு.ப.இராஜதிலகன்,
பெருந்திருவாள் : திரு.இ.முத்துலிங்கம்,
நாடனப் பெண்கள், தோழிமார் : திரு.ஜெ.பிரவீன் மற்றும் செல்;வன்.ர.கேசியன்.
குருக்கேத்திரன்போர் மகாபாரதத்தில் வரும் ஒரு கிளைக் கதையை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்ட ஒரு கூத்தாகும். குருக்கேத்திரன் என்னும் மன்னன் பகவான் கிருஸ்ணருக்கு குற்றம் இணைப்பதும், குற்றமிளைத்த குருக்கேத்திரனை கிருஸ்ணர் கொலை செய்வதற்காகத் துரத்துவதும் அவன் தன்னுயிரை பாதுகாப்பதற்காக சிவன், யமன், இந்திரன் ஆகியோரை தஞ்சமடைவதும் அவர்கள் காக்க மறுக்க குருக்கேத்திரனுக்கு இறுத்தியாக அருச்சுனன் தஞ்சம் கொடுப்பதும் அருச்சுனன் தஞ்சம் கொடுத்ததற்காக கிருஸ்ணர் பஞ்சபாண்டவர்களுடன் துரியோதனனுடைய படைகளின் உதவியுடன் போர் தொடுப்பதும், இறுதியில் கிருஸ்ணரும் அருச்சுனனும் சமாதானமாவதும், பஞ்சபாண்டவர்களுடனான யுத்தத்திற்கு கிருஸ்ணருக்கு உதவியாக இருந்த துரியோதனன் கிருஸ்ணரால் விரட்டப்படுவதும் இக்கூத்தின் கதைப் பொருளாகும்.
இக்கதைச் சித்திரிப்பு பஞ்சபாண்டவர்களுக்கு எப்போதும் பக்கபலமாக இருக்கும் கிருஸ்ணர் மகாபாரத யுத்தம் தொடங்குவதற்கு முன்னர் துரியோதனனின் படைபலத்தை பலவீனப்படுத்துவதற்காக உருவாக்கிக்கொண்ட யுத்தமாகவே கற்பிதம் செய்யப்படுகின்றது.
இன்னொரு விதத்தில் கூறுவதாயின் பாண்டவர்களின் வெற்றியை நோக்கிய கிருஸ்ணரின் தந்திரோபாயத் திட்ட நகர்வாக இது அமைந்திருந்தது. பாண்டவர்களின் காவலனாக எப்போதும் சித்திரிக்கப்படும் கிருஸ்ணர் குருக்கேத்திரன் செய்த சிறு குற்றத்தை பயன்படுத்தி பாண்டவர்களை பகைவர்களாகப் பாவனைபண்ணி கபடநாடகமாடி துரியோதனனை சட்டைக்கு இழுக்கும் செயற்பாடும், அவன் அவமானப்படுத்தப்படுவதும், ஏமாற்றப்படுவதும் எமது சமகால சமூக, அரசியல் நிலவரங்களுடன் பொருத்திப் பார்க்கப்படக்கூடியதாகவே உள்ளது. பலம் பொருந்திய ஒருவன் சிறந்த அரசியல் சாணக்கியம் இல்லாததால் எதிர்நோக்கிய வீழ்சியின் ஒரு பகுதியை குருக்கேத்திரன் போர் படிப்பிiனாக எமக்கு உணர்த்தி நிற்கின்றது.
இக்கூத்தில் முன் அரைப்பகுதியில் குருக்கேத்திரன் தஞ்சங்கோரி சிவன், யமன், இந்திரன் என்போரை நாடியலையும் சம்பவம் சித்திரிக்கப்பட பின் அரைப்பகுதியில் பஞ்சபாண்டவர்கள் துரியோதனன், சகுனி, கன்னன், கிருஸ்ணர் ஆகியோருக்கிடையேயான யுத்தம் சித்திரிக்கப்படுகிறது. கூத்தில் இறுதியாக இடம்பெறும் கிருஸ்ணருக்கும் அருச்சுனனுக்கும் இடையேயான யுத்தம், குருக்கேத்திரன் திரௌபதிக்கிடையோயான சம்பாசனை என்பன குறிப்பாகச் சுட்டிக்காட்டத்தக்க பகுதிகளாக இடம்பெறுகின்றன. இப்பகுதியில் இடம்பெறும் பாடல்களும் அவற்றின் அர்த்தப் பொலிவும் குறிப்பிடத்தக்கவை.
நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் குருக்கள்மடத்தில் இக்கூத்துச் செயற்பாடு இடம்பெற்றாலும் இக்கூத்துச் செயற்பாட்;டில் இணைந்துகொண்ட அத்தனை கலைஞர்களும் இக்கூத்தின் படைப்பாக்க அழகியல் வெற்றிக்காக உழைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












