பட்டிருப்பு கல்வி வலய கணிதபாட ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கும், செயலமர்வும்


கணிதபாட ஆசிரியர்களிடையே கற்றல் கற்பித்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்தரங்கும், செயலமர்வும் இன்று வெள்ளிக்கிழமை (2) பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

வளவாளராக இங்கிலாந்திலிருந்து வருகைதந்து கலந்து கொண்ட கணிதத்துறைத் தலைவர் ப. நடேசன் உரையாற்றும் போது, கற்றல் கற்பித்தலில் நுட்பமான முறைகளை கையாழ்வதன் மூலம் மீத்திறன் குறைந்த மாணவர்களின் கணிதபாட அடைவு மட்டத்தினையும் அதிகரிக்க முடியுமென தெரிவித்தார்.

மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் தேசபந்து மு. செல்வராஜாவின் ஏற்பாட்டிலும், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. ந.புள்ளநாயகத்தின் ஒழுங்கமைப்பிலும் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பட்டிருப்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த சுமார் 50 கணிதபாட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இச் செயலமர்வின் போது மீத்திறன் கூடிய, மீத்திறன் குறைந்த 50 மாணவர்களைக் கொண்டு ஒரு மாதிரி  வகுப்பறை உருவாக்கப்பட்டு அவ்விருதரப்பு மாணவர்களுக்கும் ஒரே பாடவேளையில் எவ்வாறு கற்பிப்பதென்பதை வளவாளரால் செய்து காட்டப்பட்டது.

இதில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கும்போது, கற்பித்தல் தொடர்பான பல பயனுள்ள நுட்ப முறைகளை தம்மால் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்ததாகவும், இவ்வாறான வளவாளர்களைக் கொண்ட செயலமர்வுகள் எதிர்வரும் காலங்களிலும் நடத்தப்படல் வேண்டுமெனவும் குறிப்பிட்டனர். இதே போன்று கலந்து கொண்ட அனைத்துத் தரப்பு மாணவர்களும், தமக்கு இலகுவாக விளங்கக்கூடிய வகையில் கற்பிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டனர்.

மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் தேசபந்து மு. செல்வராஜாவின் ஏற்பாட்டில் இவ்வாறான கருத்தரங்குகளும், செயலமர்வுகளும் மட்டக்களப்பு கல்வி வலயம், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம், கல்குடா கல்வி வலயம் ஆகியவற்றைச் சேர்ந்த கணிதபாட ஆசிரியர்களுக்கும் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.