(தாசன்)வாகரை பனிச்சங்கேணி திருமகள் வித்தியாலயமும், கிராம அபிவிருத்திச் சங்கமும் இணைந்து கி.பி.16ம் நூற்றாண்டு வாழ்ந்த பனிச்சங்கேணி அரசி வன்னிச்சி நாச்சியாரின் திருவுருவச் சிலை திறப்பு விழா பனிச்சங்கேணி திருமகள் வித்தியாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் த.மோகனராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், அதிதிகளாக ஜேர்மன் தமிழ் கல்விச் சேவை தலைவர் மேழிக்குமரன் கே.அருந்தவராசா, எழுத்தாளர் வாகரை வாணன், மின்சார சபையின் பிரதேச தலைமைப் பொறியியலாளர் திருமதி.ப.அனித்தா, கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், பிரதேச பிரமுகர்கள், பிரதேச பாடசாலை அதிபர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலயம், மாங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, காயான்கேணி சரஸ்வதி வித்தியாலயம், பனிச்சங்கேணி திருமகள் வித்தியாலயம், பால்ச்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, வாகரை மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களின் கிராம கலை நிகழ்வுகள் இடம்பெற்றது.
வாகரை வாணனினால் பனிச்சங்கேணி அரசி வன்னிச்சி நாச்சியாரின் ஒரு வரலாற்றுப் பார்வை நூல் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், இவரது சேவையை பாராட்டி கிராம அபிவிருத்திச் சங்கத்தினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
ஜேர்மன் தமிழ் கல்விச் சேவை தலைவர் மேழிக்குமரன் கே.அருந்தவராசாவின் நிதி வழங்குதலின் மூலம் திருவுருவச் சிலை தாபிக்கப்பட்டதுடன், அதற்கான பீடம் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனின் வரவு செலவுத் திட்ட நிதியின் மூலம் அமைக்கப்பட்டுள்ளது.
கி.பி. 16ம் நூற்றாண்டு காலப் பகுதியில் அரசி வன்னிச்சி நாச்சியார் வாகரைப் பிரதேசத்தின் பனிச்சங்கேணி பகுதியில் வாழ்ந்துள்ளதாக சான்றுகள் குறிப்பிடுகின்றது.
























