(ஜெ.ஜெய்ஷிகன்)
பிரதேச சபையின் செயலாளர் சிவலிங்கம் இந்திரகுமாரின் வழிகாட்டலுக்கமைவாக செயற்படுத்தப்பட்டு வருகின்ற வேலைத்திட்டங்களின் ஓரம்சமாக உத்தியோகத்தர்களிடையே விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் 'உள்ளூராட்சிவார சவால் கிண்ணம்-2016' எனும் தொனிப்பொருளில் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி ஒன்றினை 20.10.2016 அன்று ஒழுங்கமைத்திருந்தது.
இப்போட்டித் தொடரின் போது, கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை, கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை, கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகம் மற்றும் நிகழ்வினை ஒழுங்கமைத்திருந்த கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேசசபை ஆகியற்றின் விளையாட்டு அணிகள் பங்கு பற்றின. சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிக்காக வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபைகள் தெரிவாகி, இறுதியில் ஓட்டமாவடி பிரதேச சபை அணியினை ஆறு (06) விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்ட வாழைச்சேனை பிரதேச சபை அணியானது வாகரை பிரதேச சபையின் 2016 ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி வார சவால் கிண்ணத்தின் சம்பியனானது.
வாகரை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இவ்விளையாட்டு நிகழ்வின் போது. பிரதேச சபையின் செயலாளர், வாகரை பொலிஸ் நிலையத்தின் இரண்டாம் பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன், நடுவர்களாக வாகரை பிரதேச 233ஆம் படைப்பிரிவின் இராணுவ வீரர்களும், ஓட்டப்பதிவாளர்களாக வாகரை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்களும் கடமையாற்றியிருந்தனர்.
வெற்றி பெற்ற அணிக்கான சம்பியன் கிண்ணமும், இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்ட அணிக்கான கிண்ணமும் வழங்கப்பட்டதுடன், அனைத்து போட்டிகளிலிருந்தும் சிறந்த வீரருக்கான விருதும் வழங்கப்பட்டன. மேலும் போட்டிகளின் போத கடமையாற்றிய பொலிஸ் மற்றும் இராணுவ வீரர்களும் கௌரவிக்கப்பட்டனர்.












