மட்டக்களப்பு மாநகர பிரதேசத்தில 200 மில்லியன் செலவில் 19150 மீற்றர் வீதிகளுக்கு காபெற்

நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட 19150மீட்டர் வீதிகள் 200 மில்லியன் ரூபா செலவில் காபட் வீதிகளாக்கப்படவுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரான திருமதி பி.எஸ்.எம.சார்ள்ஸால் நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய இதற்கான நிதிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன் இன்று புதன்கிழமை (19) தெரிவித்தார்.

தேசிய திட்டமிடல் திணைககளத்துடன் மேற்கொள்ளப்படவுள்ள சுமார் 20 கிலோமீட்டர் வீதிகளை காபட் வீதிகளாக்கும் சேலைத்திட்டம் கேள்வி கோரல் நடைமுறைகள் பூர்த்தி செய்யப்பட்டு இந்த வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட அதிகளவில் பொதுமக்கள் பாவனைக்குட்பட்ட, பழுதடைந்த வீதிகள் மாநகர ஆணையாளர் எம்.உதயகுமாரின் சிபார்சின் கீழ் இந்த முதல் கட்ட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த வீதிகள் அமைக்கப்படுவதன் மூலம் மாநகரப்பிரதேசம் புதுப் பொலிவு பெறுவதுடன், பொதுமக்களின் போக்குவரத்து இலகுபடுத்தப்படுவதுடன், விபத்துக்களும் தவிர்க்கப்படும்.
இத்திட்டத்தில் புதிய டச் பார் வீதி, அரசாங்க விடுதி வீதி, படுகாட்டார் வீதி, திசவீரசிங்கம் வீதி,எல்லை வீதி, கூழாவடி வீதி, புதிய எல்லை வீதி, அம்போஸ் வீதி, முனிச் வீதி, கோல்ட் சிமித் வீதி, சந்தை வீதி, லயன்ஸ் கிளப் வீதி, ஞானசூரியம் சதுக்க வீதி,மாமாங்கம் வீதி, பயனியர் வீதி, சூரியா லேன், நாகையா வீதி, ஆனைப்பந்தி வீதி, அம்மன் கோர்ணர் வீதி, நேச ஒழுங்கை , 2ஆம் குறுக்கு வீதி, மத்தியூ வீதி,மேல்மாடி வீதி, மைக்கல் அந்தனி வீதி, புனித மேரி மற்றும் சிசிலியா வீதி, முதலியார் வீதி, ஆகிய வீதிகளே காபட் வீதிகளாக்கப்படவுள்ளன.
முதல் கட்டத்தில் இந்த 19 150 மீற்றர் வீதிகள் காபற் இடப்படுகின்ற அதே நேரத்தில் அடுத்த கட்டத்தில் ஏனைய வீதிகளும் புனரமைக்கப்படவுள்ளதாகவும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன் தெரிவித்தார்.