(படுவான் பாலகன்) இலங்கையில் புதிய அரசு ஆட்சிப்பொறுப்பேற்று நல்லாட்சியை நாட்டில் நிலைநிறுத்த வேண்டும் என்றநோக்கில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற நிலையிலும், மனிதாபிமானமற்ற, நல்லாட்சிக்குப்புறப்பான செயற்பாடுகளும் நாட்டில் காவல்புரிகின்ற காவல்துறையினால் மேற்கொள்ளப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் கொலைச்சம்பவம் இன்று எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளதுடன், துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.
யாழ். கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் 20ம் திகதி அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற விபத்தில் யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (23), சுன்னாகத்தைச் சேர்ந்த பவுண்ராஜ் சுலக்ஸன் (24) ஆகிய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த மதிலொன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் இதன் மூலமாகவே இறந்திருக்கின்றனர் என்ற செய்தியே ஆரம்பத்தில் வெளியாகியது. இதனால் விபத்து என்று நிலையிலேயே ஆரம்பத்தில் பார்க்கப்பட்டாலும் பின்பு வெளியாகிய, நள்ளிரவு வேளையில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டது. துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தையடுத்து பாரிய சத்தம் ஒன்றும் கேட்டது. உடனடியாக வெளியில் ஓடிவந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மதிலில் மோதி இரத்த வெள்ளத்தில் கிடந்ததை காணமுடிந்தது. விபத்து நடந்து சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு பொலிசாரும் வந்திருந்தனர். இதன்போது பொலிஸார் இருவரையும் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இவ்வாறாக அங்கு சம்பவம் நடைபெற்ற இடத்தினை சுற்றிய பிரதேசவாசிகளின் வார்த்தைகளும் முணுமுணுக்க தொடங்க இது விபத்து அல்ல கொலை என்ற செய்தி வெளியாகத்தொடங்கியது. மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள கடை ஒன்றில் பொருத்தப் பட்டிருந்த சி.சி.ரி.வி. கமராவில் இரவு 11.45 மணியளவில் மாணவர்களின் மோட்டார் சைக்கிள் அந்த கடையை தாண்டி செல்கின்றது. அதன் பின்னர் இரு நிமிடத்தில் 11.47 மணியளவில் மழையங்கி அணிந்தவாறு பொலிஸ் குழு ஒன்று அந்த கடையை கடந்து நடந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் இச்சம்பவம் குறித்து மிகவும் ஆராய முற்பட்டனர். இதன்பயனாக வாகனத்தினை செலுத்திச்சென்ற மாணவன் மீது துப்பாக்கி சூடு நடப்பட்டுள்ளமை உறுதியாகிது.
யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்தில் ஏற்பட்ட சர்ச்சைகளையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்குமான விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது பக்கச்சார்பற்ற விசாரணை உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டுமென எதிர்கட்சித்தலைவர் ஜனாதிபதியிடத்தில் வலியுறுத்தியதையடுத்து விசேட பொலிஸ் குழுவொன்று யாழ்ப்பாணம் விரைந்து உடனடியாக இச்சம்பவத்தில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 05 பொலிஸார் கைது செய்யப்பட்டனர். இச் சம்பவம் தொடர்பில் பக்கச் சார்பற்ற விசாரணைகளை மேற்கொண்டு துரித நடவடிக்கை எடுக்குமாறு இரா.சம்பந்தன் பொலிஸ் மா அதிபரைக் கோரியதோடு தனது கண்டனத்தையும் கவலையையும் தெரிவித்திருந்தார்.
இச்சம்பவம் நாடுபூராகவும் அதிர்வலையை ஏற்படுத்த மரணித்த மாணவர்களின் குடும்பமும் நாட்டின் பல பாகங்களில் உள்ள மக்களையும் துயரத்தினால் ஆழ்த்தியது. 'மேசன் தொழில் செய்து படித்து பல்கலைகழகம் சென்றான் என் தம்பி. எங்கள் குடும்பத்தின் தந்தையாய் இருந்தவரை சிதைத்து கொன்று விட்டார்களே. கால் இயலாத என் மகனை இவ்வாறு கொலை செய்தவர்கள் யார் என்று தெரியவில்லையே, இவன் தானாய் மோதி சாகவில்லையே. இனி இவ்வாறு எந்த பிள்ளைக்கும் நடக்க கூடாது என்று உயிரிழந்த கிளிநொச்சியினை சேர்ந்த மாணவனின் அக்கா கதறி அழுதாள். இதைபோன்று பலரும் அழது ஓலமிட்டனர்.
இரு மாணவர்களும் கொலையாகிய சம்பவம் குறித்து அரசியல்வாதிகளும், மாணவர்களும்; நீதி வழங்கப்பட வேண்டும் என்று பேசவும், ஆர்பாட்டங்களில் ஈடுபடவும் ஆரம்பித்தனர். அவ்வகையிலேயே பொலிஸ் காவலரணில் நிறுத்தாமல் செல்வோரை துரத்தி பிடிக்கவே, பொலிஸாருக்கு அதி நவீன 1000சீசீ மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. காவலரணில் நிற்காமல் வேகமாக போனவர்கள் துப்பாக்கி பிரயோகம் செய்துக்கொண்டு போனதாக தகவல் இல்லை. இந்நிலையில் ஏன் சுட வேண்டும் என தெரியவில்லை. ஆகவே அவர்களை துரத்தி சென்று வழிமறித்து பிடிக்க வேண்டும். அப்படியே சுட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் முதலில் ஆகாயத்தை நோக்கியும், பின்னர் முழந்தாளுக்கு கீழேயும் சுட வேண்டும் என்ற விதிகள் மூன்றாம் வகுப்பு குழந்தைக்கும் தெரியும். இவை பயிற்சி பெற்ற இந்த போலிசாருக்கு தெரியவில்லை என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அதேபோன்று பல்வேறான கண்டனங்களையும், கருத்துக்களும் பல அமைப்புக்களை சேர்ந்தவர்களும், அரசியல்வாதிகளும் ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டனர். மாணவர்களும் ஆர்பாட்டங்களிலும் ஈடுபட ஆரம்பத்தினர் வடக்கு, கிழக்கு, தென்னிலங்கை, கொழும்பு என பல பகுதிகளிலும் இனம், மதம், மொழி கடந்து மனிதாபிமானம், பல்கலைக்கழக மாணவர்கள், நீதி கிடைக்கவேண்டும் என வலியுறுத்தி ஆர்பாட்டங்களில் ஈடுபட்டதுடன், மகஜரும் கையளிக்கப்பட்டது. குறிப்பாக யாழ்பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம், பேராதனைப்பல்கலைகழகம், கொழும்பு கோட்டை முன்பாக ஆர்பாட்டங்கள் இடம்பெற்றன.
கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக இடம்பெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் கருத்துதெரிவித்த நவ சம சமாஜக்கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன, மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவர்களை பொலிஸார் இடைநிறுத்தக்கோரிய போது மாணவர்கள் தடுப்புக்காவலில் நிறுத்தாமல் சென்றுள்ளனர். இதனையடுத்து பொலிஸார் வாள் வெட்டுடன் சம்பந்தப்பட்டவர்கள் என கருதி மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவத்தின் போது கடமையில் இருந்த ஐந்து பொலிஸாரும் சிங்களவர்களே. இவர்களின் மொழி தெரியாமல் மாணவர்கள் குறித்த இடத்தில் நிறுத்தாமல் சென்றிருக்கலாம். தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் ஏன் சிங்களவர்களை அதிகமாக கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டும். இது மாணவர்களின் தவறல்ல. ஆட்சியாளர்களின் தவறாகும். இவ்வாறான சம்பவங்களினால் எவ்வாறு இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். வட மாகாணத்தில் பொலிஸாரின் அடாவடித்தனம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. எனவும் தெரிவித்தார்.
வடபகுதியெங்கும் செவ்வாய்க்கிழமை ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது. இதனால் அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிதமடைந்தன. பாடசாலைகள், வங்கிகள், எரிபொருள் நிரப்புநிலையங்கள் என்பன மூடப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்திருந்தது.
அதேவேளை கிளிநொச்சி ஏ9 வீதி வைத்தியசாலைப் பகுதியில் பொலிசார் மற்றும் இளைஞர் களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதையடுத்து, பொலிஸ் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதி மற்றும் அறிவியல் நகர் பகுதியில் அதிகளவு பொலிஸார் குவிக்கப்பட்டு இருந்தமையால் அங்கு பதற்ற நிலை உருவாகி இருந்தது.
இரு கொலைகள் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவிக்கையில், இச்சம்பவத்தில் பொலிஸாரின் தவறும் அடங்கியிருக்கிறது, அம்மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளுமளவுக்கு நிலைமை காணப்பட்டதா என்பது பிரச்சினைக்குரிய விடயம் என்றும் அவ்விடத்தில், கொள்ளையோ, திட்டமிடப்பட்ட ரீதியிலான தாக்குதலோ அல்லது மரண அச்சுறுத்தலோ காணப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
விசேடமாக, அச்சம்பவம் தொடர்பில் உடனடியாக அறிவிக்காமை, அங்கிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் செய்த தவறாகும் என்றும், இதுவோர் ஒழுக்கமீறல் சம்பவம் என்பது தெளிவாகப் புலப்படுகிறது என்றும், “இச்சம்பவம், மிகவும் வருத்தத்துக்குரிய சம்பவமாகவே பார்க்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் கேள்வியுற்றவுடனேயே, நான் நடவடிக்கை எடுத்தேன்” என்றார்.
“பொலிஸார், தமக்கான குறைந்தபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தலாம். அல்லது, அவ்விடத்துக்கு அவசியமான அதிகாரத்தைப் பயன்படுத்தியிருக்கலாம். பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 53ஆவது உறுப்புரையின் கீழ், பொலிஸார், சந்தர்ப்பத்துக்கேற்ப குறைந்தபட்ச அல்லது அவசியமான அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு அதிகாரம் உள்ளதென்பதை வலியுறுத்தியுள்ளது” என்றார்.
செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், மாணவர்கள் கொலைசெய்தமைக்கு கண்டணத்தினை தெரிவித்து, மாணவர்கள் இருவரும் உண்மையில் பொலிஸாரிடம் இருந்து தப்பிச்செல்ல முயற்சித்திருக்கும் பட்சத்தில், துப்பாக்கி பிரயோகமானது பின்னிருக்கையில் இருந்தவரை தாக்காமல், மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவரை தாக்கியது எப்படி என்றும் கேள்வி எழுப்பினார். அதேவேளை உண்மை கண்டறியப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் சம்பவம் தொடர்பிலான முழுமையான உண்மையை முழு நாடும் தெரிந்துக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும் எனவும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க, சந்தேகத்துக்கு இடமான மோட்டார் சைக்கிள் நிறுத்தாமல் செல்ல முற்பட்டபோது அதைத் தடுக்க முற்பட்டார்கள். ஏதும் குற்றச் செயலைச் செய்வதற்குச் செல்கிறார்கள் அல்லது செய்துவிட்டுச் செல்கிறார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே, பொலிஸார் அவர்களைத் தடுத்துள்ளனர்” கடந்த 20ஆம் திகதி இரவு 11.55 மணியளவில் இந்த சம்பவம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு அருகில், ஐந்து பொலிஸார் இரவுநேர ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். இது தவிர இரு பொலிஸார், வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்தார்கள். அதிக வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு, பொலிஸார் சைகை காட்டியுள்ளனர். அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாது பயணித்துள்ளதோடு, வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரும் அதனை நிறுத்துமாறு சத்தமெழுப்பியுள்ளனர்.
மாணவர்கள், பொலிஸாரை பயமுறுத்தும் வகையில் அவர்களை நோக்கி மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளனர். இதன்போது பொலிஸார் வானத்தை நோக்கிச் சுட முயன்றபோது, அதிலிருந்து வெளியான துப்பாக்கிச் சன்னம், ஒரு மாணவர் மீது பாய்ந்துள்ளது. மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.என முதல்கட்ட விசாரணையில் வெளிவந்துள்ளதாகவும் அங்கிருந்த பொலிஸார், இருவரையும் வைத்தியசாலையில் அனுமதித்தபோதும், அவர்கள் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற மாணவர் மீது துப்பாக்கிச் சூடு பட்டுள்ளதோடு, பின்னால் அமர்ந்து சென்ற மாணவர், விபத்தினால் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவர்கள் இருவரும் போதையில் இருந்துள்ளனர். பொலிஸ்மா அதிபரின் பணிப்பின் பெயரில் கொக்குவில் சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நியாயமானதும், வெளிப்படையானதுமான விசாரணை நடத்தப்படும். சம்பவ நேரம், இரு பொலிஸ் அதிகாரிகளிடம் ரி56 ரக துப்பாக்கிகள் இருந்துள்ளன. சப் இன்ஸ்பெக்டரிடம் சிறிய ரக துப்பாக்கியொன்று இருந்துள்ளது. சிவில் செயற்பாடுகளின்போது, சிறிய ரக ஆயுதங்களை பொலிஸாருக்கு வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என்றார். இது இவ்வாறு இருக்க வடபகுதியில் பதற்ற நிலைகள் எழுந்துள்ளது. குறிப்பாக, யாழ். ஆனைக்கோட்டை ஆலடி வைரவர் கோயிலுக்கு அருகாமையில், செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் யாழ்ப்பாணத்தில், இலக்கத் தகடற்ற ஜீப்பில் வந்த குழுவினர் வாள் வெட்டினை மேற்கொண்டதில் மூன்று இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.
அதே நாளில், உயிரிழந்த மாணவனான விஜயகுமார் சுலக்ஸனின் வீட்டுக்கு அருகில் நின்ற யாழ். பல்கலைகழக மாணவர்கள் மற்றும் ஊரார் மீதும் இலக்க தகடற்ற ஜீப் ரக வாகனத்தில் வந்தவர்கள் தாக்குதல்களை மேற்கொண்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றது.
செவ்வாய்க்கிழமை அதிகாலை கிளிநொச்சி டிப்போ சந்தி காவலரண் மீது தீ வைக்கப்பட்டுள்ளதாகவும், காவலரணின் சிறிய பகுதி தீயில் எரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கிச் சென்ற பஸ் மீது, கிளிநொச்சி பகுதியில் வைத்து செவ்வாய்க்கிழமை கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகள் வடபகுதியில் அச்சத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது. நாடு நல்லாட்சி பெறுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும், வடபகுதியில் இடம்பெறுகின்ற வாள்வெட்டு, துப்பாக்கிச்சூடு மீண்டும் ஒரு ஆயுத கலாசாரம் உருவாக்கப்பட்டுள்ளதா? இவை திட்டமிட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றதா? போன்ற சந்தேகங்களும் எழுத்தொடங்கியிருக்கின்ற நிலையில், இடம்பெற்றுள்ள கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதுவே எல்லோரது போராட்டமாகவும் அமைந்திருக்கின்றது. அரசியல் வாதிகளுக்கு மரணமடைந்த மாணவர்களின் மரணக்கிரியையின் போதானா இரங்கலுக்கு அனுமதியளிக்கப்படாமையும், பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்பாட்டங்களின் போதும் அவர்களை அனுமதிக்காமையும், குறித்த விடயத்தினை அரசியலாக்க வேண்டாம், எம் சகமாணவர்களுக்கான நீதியையும், இழப்பீட்டையும் பெற்றுத்தாருங்கள், மேலும் மீள்நிகழாமையை உறுதிப்படுத்துக்கள் என்றதான நிலையையும் காட்டுவதாகவும் பலரும் குறிப்பிடுகின்றனர். தற்போதைய சூழலில் முறையான பக்கச்சார்ப்பற்ற விசாரணைகள் இடம்பெற்று இறந்த மாணவர்களுக்கு நீதி கிடைக்க அனைவரும் ஒன்றித்து செயற்படுவதே நாட்டினை நல்லப்பாதைக்கு கொண்டு செல்ல வித்திடும்.













