(படுவான் பாலகன்) நாட்டில் நடைபெற்ற கடந்த முப்பது வருடகால யுத்தத்தின் காரணமாக வடகிழக்கிலே இருக்கின்ற தமிழ் மக்கள் உயிர், உடமை, உறவுகள் போன்றவற்றை இழந்து அநாதைகளாக்கப்பட்டு பொருளாதாரத்தில் ஏற்பட்ட சிக்கலால் பட்டினியாகவும், உணவின்றியும், மிகுந்த அச்சத்தின் நிலையிலும் வாழவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு மனதைரியமற்று உளவியல் தாக்கம், து~;பிரயோகங்கள் போன்றவற்றிற்கு ஆளாக்கப்பட்டு அகதிமுகாம்களிலும், பொது இடங்களிலும் தஞ்சங்கோரி வாழவேண்டிய நிலைக்கும் உள்ளாக்கப்பட்டிருந்தனர். குறித்த காலத்தின் பின்னர் அகதி முகாம்களில் இருந்து கட்டம் கட்டமாகத் தங்களது இருப்பிடங்களுக்கு சிறிது காலங்களின் பின்பு குடியமர்த்தப்பட்டும் போதியவசதிகளன்றியும் இன்னும் சிலர் மீள்குடியமர்த்தப்படாமலேயே அகதிமுகாம்களிலிலும் உறவுகளின் வீடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
யுத்தத்தின் சூழலால் பல ஆயிரக்கணக்கான மக்கள் காணமால் போயிருக்கின்றனர். இவர்கள் எங்கு இருக்கின்றனர் என்றுதெரியாமல் தமது உறவுகள் எங்கேயோ இருக்கின்றனர் என்ற நம்பிக்கையிலும், மனதைரியத்திலும் இன்றும் தமது சொந்தங்களை தொலைத்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நெற்றியிலே வைத்த குங்குமப்பொட்டு அழியவிடாமலும், அப்பா, அம்மா மீண்டு வருவார் என்ற நம்பிக்கையிலும் பல மனைவிமார்களும், பிள்ளைகளும் ஏக்கங்களுடனும் வாழ்வை கழித்துவருக்கின்றனர். இவ்வாறான நிலைகளிலே தமக்கான நீதி, நியாயம், காணாமல் போனவர்கள் தமக்கு கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையில் வாழ்ந்த கடந்தகால அரசியலில் தமக்கான சரியான தீர்வுகள் கிடைக்கப்பெறாத நிலையில் அவ்வரசின் மீது வெறுப்புக் கொண்டு புதிய அரசினை அமைப்பதில் தமிழ் மக்கள் பெரும்பங்கு வகித்து அவ்வரசினை நாட்டிலே அமைத்துக் கொண்டனர். அரசு மட்டுமல்லாது எதிர்கட்சி தலைமையையும் பெற்றுக்கொண்டனர்.
நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிகாலத்தில் தமக்கான தீர்வுகள் கிடைக்கும் என தமிழ் மக்கள் நம்பினர், இன்றளவும் நம்பிக்கை வைத்துள்ளனர். இதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களின் கூற்றும்; மக்கள் மத்தியில் நம்பிக்கையை உண்டு பண்ணியது. குறிப்பாக 2016ம் ஆண்டு இறுதிக்குள் தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைத்துவிடும் என அவர் கூறிய கருத்தே நம்பிக்கையை தோற்றுவித்தது. ஆனாலும் இன்னும் இவ்வருடம் நிறைவுபெறுவதற்கு இரண்டு மாதங்களே உள்ள நிலையில் 2016ம் ஆண்டிற்குள் தமிழர்களுக்கான தீர்வு கிடைத்துவிடும் என்பதில் எவ்விதமான நம்பிக்கையும் இல்லை என்பது தமிழர்களுக்கு தெளிவாக புரிந்துள்ளது. இவ்வாறான நிலையிலும் இச்செயற்பாடுகளை விரைவுபடுத்தவேண்டும் என்பதற்காக வடக்கிலே எழுகதமிழ் போன்ற நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில் இவ்வாறான விடயங்கள் நல்லாட்சிக்கு விரோதமானது போன்ற கோ~ங்களும், இதில் ஈடுபட்ட வடக்கு முதலமைச்சர் சி.விக்கினேஸ்வரன் அவர்களை கைதுசெய்யவேண்டும் போன்றதான கருத்துக்களும் தென்னிலங்கையில் இருந்து எழுந்துகொண்டிருக்கின்றன.
நாட்டின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தற்போதைய ஆட்சியில் நல்லாட்சிக்கான அடிப்படையான சில விடயங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் பல்வேறான செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றதாக கூறுகின்ற நிலையிலும் தமிழ்மக்கள் கோருகின்ற அரசியல் கைதிகளின் விடுதலை, மீள்குடியேற்றம், காணாமல் செய்யப்பட்டவர்கள் கண்டுபிடித்து அவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி அறிதல், இதற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டணை வழங்கப்பட வேண்டும், இது போன்ற குற்றங்கள் மீள நடக்காமையை உறுதிப்படுத்த வேண்டும் , பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் முதலிய தமிழர்களுக்கான தீர்வு விடயங்களில் விரைவுத் தன்மை மிகக் குறைவாகவே இருக்கின்றது என்பதை வலியுறுத்தி தமிழ் பிரதேசங்களில் உறவுகள் பலர் அழுகுரலில் ஆர்பாட்டங்களையும், உண்ணா விரதங்களையும் நடத்திய வண்ணமே இருக்கின்றனர். இன்னோர் பக்கம் அரசாங்கமும் மெதுமெதுவாக சில முன்னெடுப்புக்களையும் முன்னெடுத்து வருகின்றமையும் அவதானிக்கத்தக்கதாகவே இருக்கின்றது.
இவ்வாறான செயற்பாடுகளில் நாட்டில் உண்மையை நிலை நிறுத்தி இலங்கையில் ஏற்பட்ட இன முரண்பாடுகளால் உருவான வன்முறை, தீங்கு ஆகியவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்து சமாதான சகவாழ்வை ஏற்படுத்தும் நோக்கிலே நல்லிணக்கத்திற்கான பொறிமுறைகளை ஏற்படுத்தி அது தொடர்பில் மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு அவற்றில் ஒருசில பொறிமுறைகளுக்கான சட்டங்களும் உருவாக்கப்பட்டு பாராளுமன்றத்தில் தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
இச்சட்டமுறைமையானது நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பொறிமுறைகளில் விசேடவழக்கு தொடுப்பவரை உள்ளடக்கிய நீதிப்பொறிமுறை, உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் மீள் நிகழாமை தொடர்பான ஆணைக்குழு, காணாமல் போனோர் தொடர்பான விடயங்களைக் கையாள்வதற்கான அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம். போன்ற செயற்பாடுகளை உள்ளடக்கிய பொறிமுறைகளை கொண்டிருக்கின்றது. இப்பொறிமுறைகளிலே காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளைநிறைவேற்றுதலும்) சட்டம் உருவாக்கப்பட்டு 2016ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 23ம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வலுவலகம் அமைக்கப்பட்டால் நாட்டின் தேசியபாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும். ஒரேநாட்டினுள் இரு வேறு சட்டங்களின் கீழ் ஆட்சி நடத்துவது நாட்டின் இறைமையை பாதிக்கும். வடக்குகிழக்கில் காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் வகையில் சட்டமூலம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டால் அதன் பின்னர் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு என்ற தனிசட்டம் ஒன்றும் நாட்டில் ஏனைய பகுதிகளுக்கு என வேறுவிதமான சட்டமும் நடைமுறைப்படுத்தப்படும் நிலைமை ஏற்படும் என மஹிந்த ஆதரவு அணியின் சிரேஸ்ட உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜி.எல். பீரிஸ் அண்மையில் தெரிவித்திருந்தார். இதுபோன்ற பல்வேறான கருத்துகளும் அலுவலகத்திற்கான சட்டம் அமைக்கப்பட்டு அவை அத்தாட்சிப்படுத்தும் வரை எழுந்தது. இவ்வாறான சூழலின்போது காணாமல் போனோர் தொடர்பாக செயல்படும் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டால், அதன் மூலம் பாதுகாப்புப் படையினர் பழிவாங்கப்படுவார்களென்று சிலர் குற்றச்சாட்டினர். அதனை நிராகரித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறுதிகட்டபோரின் போது, காணாமல் போயுள்ள நபர்கள் சம்பந்தமாக ஆராய்வதற்கு மாத்திரம் இந்த அலுவலகம் அமைக்கப்படவில்லை என்றும், யுத்தத்தின் போது, 5000-க்கும் மேற்பட்ட அரசு பாதுகாப்புப் படையினர் காணாமல் போயுள்ளதாகவும் அவை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளதாக ஊடகவாயிலாக கூறப்பட்டது. மேலும் கடந்த ஆட்சிக் காலத்தில் ஊடகத்துறையினர் பலர் கடத்தப்பட்டதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே, இவ்வாறு காணாமல் போனோர் தொடர்பாக ஆராய்ந்து, தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நிரந்தர அலுவலகமொன்று அவசியம். காணாமல் போனோரின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளுக்கு தடைகளை ஏற்படுத்திவரும் நபர்கள், இவ்வாறான அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்திவருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்திருந்தார். இவ்வாறான பலவித வாக்கு வாதங்கள் வெளியிலே இடம்பெற்று பின் பாராளுமன்றத்திலும் இது சமர்பிக்கப்படும் போதும் வாக்குவாதங்கள் எழுந்தும் அச்சட்டம் நிறைவேற்றப்பட்டு சபாநாயகரினால் கையெழுத்து இடப்பட்டது. இவ்வாறான செயற்பாடுகள் நிறைவுற்றிருக்கின்ற தற்போதைய நிலையில் மீண்டும் இவை பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்படவேண்டும். அவை தொடர்பில் விவாதிக்க, மாற்றங்களை செய்யவேண்டும் என்றும் ஒருசில அரசியல்வாதிகள் குறிப்பிடுகின்றனர். எது எவ்வாறு இருப்பினும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இச்சட்டத்திலே பல்வேறான விடயங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
காணாமற்போன ஆட்களை தேடிக்கண்டு பிடிப்பதற்காகத் தேவையான வழிமுறைகளை ஏற்பாடுசெய்வதற்கும், அத்தகைய ஆட்கள் எச் சூழ்நிலைகளில் காணாமல்போனார்கள் என்பதையும், அவர்களின் நிலையை தெளிவுபடுத்துவதற்கும், காணாமற்போனஆட்கள் பற்றிய சம்பவங்களைக் குறைக்கும் முகமாக இயைபான அதிகாரிகளுக்கு விதப்புரைகளைச் செய்வதற்கும், காணமாற்போனவர்களினதும் அவர்களின் உறவினர்களினதும் உரிமைகளையும் அக்கறைகளையும் பாதுகாப்பதற்கும், அத்தகைய காணாமற்போன ஆட்கள் அல்லது அவர்களின் உறவினர்கள் முறையான எந்த நிவர்த்திக்கான வழிகளை நாடக்கூடுமோ முறையான அந்த நிவர்த்திக்கான வழிகளை அடையாளம் காண்பதற்குமான எல்லா வழிமுறைகளும் எடுக்கப்படுவதனை உறுதிப்படுத்துவதாக இச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
காணமாற்போனவர்கள் அலுவலத்தின் தலைமையலுவலகம் கொழும்பில் அமைந்திருக்கவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதுடன் காலத்துக்காலம் அதன் பணிப்பானையை எய்துவதற்கு அவசியமாக இருக்ககூடியவாறான அத்தகையை எண்ணிக்கையிலான பிராந்திய அலுவலகங்களைத் தாபிக்கமுடியும் எனவும் அச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. மேலும் இவ்வலுவலகம் அரசியல் அமைப்புப் பேரவையின் விதைந்துரையின் மேல் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட வேண்டிய ஏழு உறுப்பினர்களை கொண்டிருக்கவேண்டும். அவர்களில் ஒருவர் தவிசாளராக ஜனாதிபதியினால் நியமிக்கப்படவேண்டும். அரசியலமைப்பு பேரவையின் விதைந்துரையினை பெற்றதில் இருந்து 14 நாட்களுக்குள் ஜனாதிபதி இவர்களை நியமிக்கவேண்டும். அவ்வாறு பதினான்கு நாட்காலப் பகுதியினுள் ஜனாதிபதி அவசியமான நியமனங்களைச் செய்வதற்கு தவறும் பட்சத்தில் அத்தகைய காலப்பகுதி முடிவுறும் திகதியிலிருந்து இதற்கு விதைந்துரைக்கப்பட்ட நபர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்களாக கருதப்படுதல் வேண்டும் என்றும் இச்சட்டத்தில் கூறப்படுகின்றது. அலுவலகத்திற்கு தெரிவு செய்யப்படும் ஏழு அங்கத்தவர்கள் குறித்து அரசியல் அமைப்புபேரவை, இலங்கைச் சமூகத்தின் பல்லினத்தன்மையை பிரதிபலிப்பதனை உறுதிப்படுத்துவதுடன், அவர்களின் நுண்ணாய்வு, மனித உரிமைகள் சட்டம், சர்வதேச மனிதாபிமான சட்டம், மனிதாபிமான பதிலிறுப்பு என்பவற்றின் முன்னனுபவம் கொண்டவர்களாக அல்லது காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகத்தின் பணிகளை நிறைவேற்றுவதற்கு இயைபான ஏனைய தகைமைகளை உடையவர்களாக உறுதிப்படுத்துபவர்களை இதனுள் உள்வாங்கமுடியும் எனக்கூறப்படுகின்றது. இவர்களுக்கான காலப்பகுதி மூன்று வருடங்கள் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதுடன் இரண்டாவது தடவையாகவும் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகின்றது. இவ்வாறான முறையில் சட்டம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், வட கிழக்கிலே இருக்கின்ற பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறான விடயங்களை குறிப்பிடுகின்றனர்.
வடகிழக்கிலே இடம்பெற்ற பெரும்பான்மையான காணமாற்போன ஆட்களினை மையமாக கொண்டும் மற்றும் ஏனைய இடங்களினையும், மீண்டும் நிகழாமை குறித்தும் தற்போது மிகவிரைவாக சட்டமியற்றப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் சட்டத்தில் கூறப்பட்டுள்ளவாறு விடயங்களை நிறைவேற்றுவதற்கும், நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்துவதற்கும் இவ்வாறான அலுவலகத்திற்காக நியமிக்கப்படும் உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்களாக தமிழர்கள் இருக்கவேண்டும், அவற்றுள்ளும் தெரிவு செய்யப்படும் தவிசாளரும் தமிழராக அமையவேண்டும். இவர்கள் வடகிழக்கு மக்கள் குறித்தும், அங்கிருக்கின்ற புவியியல் மற்றும் ஏற்கனவே இருந்த நிலைகள் பற்றியும் தெரிந்தவர்களாவும், பாதிக்கப்பட்ட சமூகம் சார்ந்தவர்களாகவும், மக்களுடன் அன்பாக, சிநேகமாக, முகச்சலிப்பின்றி பேசக்கூடியவர்களாக இருக்கவேண்டும், மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தக் கூடியவர்களை தெரிவு செய்யவேண்டும். காணமாற்போனவர்கள் பலர் ஆண்களாக இருக்கின்றமையால் முறையிடுகின்ற உறவினர்கள் பலர் பெண்களாக இருக்கின்றமையால் இக்குழுக்களில் பெண்களும் உள்வாங்கப்படவேண்டும் போன்றதான பல்வேறான விடயங்களை காணாமற்போனவர்களின் உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறானவர்களை நியமிக்கின்ற போதுதான் நம்பிக்கை தன்மையுடன் தமது கருத்துக்களை பதிவு செய்யமுடியும், அச்சமின்றியும் கூறமுடியும் அதேபோன்று அலுவலகமும் அக்கறையுடன் இதுசார்ந்து செயற்படக் கூடியதாகவும் இருப்பார்கள். கடந்த காலங்களில் பல்வேறு ஆணைக்குழுக்களுக்கு தங்களது கருத்துக்களை வழங்கும் போதும் மொழிப்பிரச்சினைகளால் தங்களது விடயங்கள் சரியான முறையில் சென்றடைந்ததா? என்ற திருப்தி இன்மையினாலும் மக்கள் , இருக்கின்றனர். கடந்தகால நிலைமைகளை கருத்தில் கொண்டு இவ்வாறான செயற்பாடுகளை நிவர்த்தி செய்யக்கூடிய வகையிலும் அலுவலகத்தின் குழு அமைய வேண்டும் என்பது அவர்களது அவாவாக இருக்கின்றது.
நல்லிணக்கம் என்பதை குறித்த ஒருகாலப்பகுதியிலோ, ஒருநாளிலோ அடைய முடியாதநிலை இருக்கின்றமையை பல்வேறான நாடுகள் உதாரணம் காட்டுகின்ற நிலையில் இன்னும் நான்கு வருடங்களின் பின்பு எவ்வாறான அரசியல் மாற்றம் நாட்டில் ஏற்படும் என்பது குறித்து மக்களுக்கு மேலும் அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தங்களின் கோரிக்கைகளுக்கான முடிவுகள் வெகுவிரைவில் எட்டப்படவேண்டும் என்பதிலேயே தமிழ்மக்கள் பெருவிருப்பு கொண்டுள்ளனர் என்பது அவர்களது கருத்துகள் மூலமாக தெளிவுபடுகின்றது. இதற்கேற்றால் போல் தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைமைகளும் விரைந்து செயற்பட்டு தமது மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டியதே காலத்தின் தேவையாகின்றது.
நாட்டில் உண்மையை நிலை நிறுத்தி இலங்கையில் ஏற்பட்ட இன முரண்பாடுகளால் உருவான வன்முறை, தீங்கு ஆகியவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்து சமாதான சகவாழ்வை ஏற்படுத்தும் நோக்கிலேயே நல்லிணக்கத்திற்கான பொறிமுறைகளை ஏற்படுத்தி அவற்றில் ஒருசில பொறிமுறைகளுக்கான சட்டங்களும் உருவாக்கப்பட்டு பாராளுமன்றத்தில் தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.













