அரச சிறுவர் நாடக விழாவில் தேசிய மட்டத்தில் இரண்டாமிடம் பெற்றுள்ள கறுவாக்கேணி விக்னேஸ்வரா கல்லூரியின் சிறுவர் நாடகம்

கலாசாரத் திணைக்களமும் அரச நாடக ஆலோசனைக் குழுவும் இணைந்து நடத்திய அரச சிறுவர் நாடக விழா - 2016 இல் கல்குடா கல்வி வலயத்தின் கறுவாக்கேணி விக்னேஸ்வரா கல்லூரியால் ஆற்றுகை செய்யப்பட்ட 'காக்கையாரின் கற்பித்தல்' எனும் சிறுவர் நாடகம் இரண்டாவது இடத்திற்கான தேசிய விருதினைப் பெற்றுக் கொண்டது. எனப் பாடசாலையின் அதிபர் திரு.க.பரமானந்தராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்

நேற்றைய தினம் (14.10.2016) மகரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மண்டபத்தில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் இவ்விருதுகள் வழங்கப்பட்டன.

கறுவாக்கேணி விக்னேஸ்வரா கல்லூரியின் 'காக்கையாரின் கற்பித்தல்' எனும் இந்நாடகத்தில் பங்குபற்றிய ம.பிரகாஸ் எனும் சிறுவன் ஆண்டின் சிறந்த துணை நடிகனுக்கான விருதினைப் பெற்றுக் கொண்டான்.

இத்துடன் இந்நாடகத்தின் பிரதி ஆண்டின் சிறந்த சிறுவர் நாடகப் பிரதிக்கான இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டது.

இந்நாடகத்தில் பங்குபற்றிய கு.சதுஸ்ரிகா எனும் மாணவிக்கு சிறந்த நடிகைக்கான விசேட பரிசும் வழங்கப்பட்டது. 

மேலும் சிறந்த இசையமைப்பு, சிறந்த மேடையமைப்பு என்பவற்றுக்கான விசேட பரிசுகளும் இந்நாடகத்திற்கு வழங்கப்பட்டன.

இந்நாடகத்தை பாடசாலையின் நாடகப் பாட ஆசிரியரான து.கௌரீஸ்வரன் அவர்கள் எழுதி நெறிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.