(சிவம்)
சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் கைதடி விழிப்புலனற்றோர் சங்கம் நடாத்திய வெள்ளைப் பிரம்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் இசை நிகழச்சி என்பன இன்று மாலை (16) மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றன.
மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் ஆரம்பமான ஊர்வலம் திருமலை வீதி மற்றும் பார் வீதி வழியாக மகாஜனக் கல்லூரி மண்டபத்தை சென்றடைந்தது.
கைதடி விழிப்புலனற்றோர் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ஏ.எஸ். அற்புதராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விழிப்புலனற்ற மாணவர்களின் கலை நிகழ்வுகள் மற்றும் விழிப்புலனற்ற கலைஞர்களைக் கொண்ட சாகித்தியம் இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி என்பன நடைபெற்றன.
இந்நிகழ்வில் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் தேசபந்து எம். செல்வராஜா உள்ளிட்ட வர்த்தக சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களால் விழிப்புலனற்றோருக்கான உதவிப் பணம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
வர்த்தக சங்கத்தின் தலைவர், வசந்தம் எப்.எம். சிரேஷ்ட அறிவிப்பாளர் மதன், மகாஜனக் கல்லூரியின் ஆசிரியர் ஆகியோருக்கு விழிப்புலனற்றோர் சங்கத்தினர் நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவித்தனர்.