2016ல் தீர்வு இல்லை 2017....ல்?

 (படுவான் பாலகன்)  இலங்கை நாட்டில் உள்ள தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும். இந்த நாட்டில் உள்ள பிரஜைகள் என்ற வகையில் சகல சுதந்திரங்களும் வழங்கப்பட வேண்டும். நாட்டில் உள்ள மக்கள் அவ்வாறான சுதந்திரத்தினை பெறும் பொருட்டு சாத்வீக ரீதியாக, அரசியல் ரீதியாக, ஜனநாயக ரீதியாக, ஆயுத ரீதியாகப் போராடி தற்போது, இராஜதந்திர ரீதியானப் போராட்டத்தில்; ஈடுபட்டும் இன்னும் அதற்கான தீர்வுகள் கிடைக்காத சூழலில், மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசை அமைப்பதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் என்ற நிலையில், தற்போதைய ஆட்சியில் தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு கிடைக்கப்பெறும். அதற்கான சமிக்கைகள் உள்ளதாகவும் எண்ணி 2016ம் ஆண்டு முடிவிற்குள் இதற்கான தீர்வு கிடைக்கப்பெறும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைமையால் கூறப்பட்டாலும் இவ்வருடத்திற்குள் கிடைப்பதற்கான சாத்தியங்கள் இல்லாத நிலை தற்போது தென்படுகின்றது. 


 அறியாமை எனும் இருள் நீங்கி அறிவு எனும் ஒளி பிறக்க வேண்டும் எனும் தத்துவத்தை உணர்த்துகின்ற இந்துக்களது தீபாவளி நிகழ்வுகள் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள் குடியேற்றம், இந்து மத அலுவல்கள் அமைச்சு மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில்; ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெற்ற நிகழ்விலே எதிர்கட்சி தலைவரும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வொன்று கிடைக்குமென்ற நம்பிக்கை இருப்பதாகவும், “தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான நகர்வின் வெளிப்பாடே இத்தகைய தேசிய பண்டிகையாகும். இதனை நாங்கள் நல்லுள்ளத்துடன் வரவேற்கிறோம். தற்போதைய நல்லாட்சியில் எம்மக்களுக்கான வெளிச்சம் தென்படத் தொடங்கியிருக்கிறது. அடுத்தமுறை தீபாவளிக்கிடையில் இவ்வெளிச்சம் நிரந்தரமானதாக அமையுமென்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது” என கூறியதற்கமைவாகவும். இதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “எதிர்க்கட்சித் தலைவரின் எதிர்பார்ப்பு கூடிய சீக்கிரம் நிறைவேறும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது” என்றதற்கும் இடையில் 2017ல் தீர்வு கிடைக்கும் என்பது ஓரளவு வெளிப்பட்டு நிற்கின்றது. 

இவ்வாறான கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தினாலும், காலம் காலமாக தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்ட வரலாறுகளே அதிகம் உள்ளது. உண்மையில் தீபாவளிக்கு இடையில் தமிழர்களுக்கான தீர்வு என்ற விடயம் நடந்தேறுமா? அல்லது அடுத்து வரும் பண்டிகைகளிலும் இப்படியான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு நீடித்து செல்லுமா? என்றதான சந்தேகங்கள் இருந்தாலும், வெகுவிரைவில் தீர்வுத்திட்டம் ஒன்று கிடைத்து விட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகவும், விருப்பாகவும் இருக்கின்றது.

தீர்வுத்திட்டத்தினை தமிழ் மக்கள் பெறுவதாக இருந்தாலும் தமிழ், முஸ்லிம் ஆகிய இரு சிறுபான்மை மக்களும் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டிய மிக முக்கியமான காலகட்டங்களாகவும் இக்காலப்பகுதி இருக்கின்றது. கடந்த காலங்கள் எவ்வாறு இருந்தாலும் தற்போதைய சூழலில் இரு சிறுபான்மையினரும் இணைந்தால்தான் வடகிழக்கு இணைப்பைக்கூட பெறமுடியும். அண்மையில் கூட வடக்கு மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படும் முஸ்லிம் மக்களை மீண்டும் மீள்குடியேற்றுவது தொடர்பில் சந்திப்பொன்று நடைபெற்ற போது, எதிர்கட்சி தலைவர் ஒரு விடயத்தினை முன்வைத்திருந்தார். 

அரசியல் தீர்வைக்காண, நாம் முயல்கிறோம். பிரச்சினைகளைத் தீர்க்க, நிறைவேற்று அதிகாரங்கள் எமது கைகளுக்குக் கிடைக்கவேண்டும். அதைப் பெறவே, அரசியல் தீர்வு சம்பந்தமான ஆக்கபூர்வமான பேச்சுக்களில் நாம் ஈடுபடுகிறோம். அதிகாரங்கள் இருந்தாலேயே பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் கிட்டும்”  “வடக்கு, கிழக்கில், தமிழ் பேசும் மக்கள் ஆட்சிபுரிய வேண்டும். ஒற்றுமை இல்லாவிடின், கிழக்கு மாகாணம் விரைவில் பறிபோகும்” என்றும்,  ராஜபக்சவின் ஆட்சியிலும் தற்போதைய ஆட்சியிலும், ஐந்து - ஆறு முஸ்லிம் அமைச்சர்கள் இருந்தும் ஏன், பல விடயங்களைச் செய்ய முடியாதுள்ளது. இதற்குத்தான், ஆட்சியதிகார முறை மாற்றப்பட்டு, சமஸ்டி முறை வரவேண்டும் என, தந்தை செல்வா, 70 ஆண்டுகளுக்கு முன்னரே கூறியதாகவும்,  நாம் மேற்கொண்ட போராட்டங்களில் முஸ்லிம் தலைவர்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது.  முஸ்லிம்களை நாங்கள் குறைகூறவில்லை. அவர்கள், வடக்கு, கிழக்கிலும், நாட்டின் எப்பாகத்திலும் வாழ உரித்துடையவர்கள். எனினும், முஸ்லிம் தலைவர்கள், போராட்டங்களுக்கு ஒத்துழைப்புத் தரவில்லை.  ஜெனீவாத் தீர்மானங்கள் காரணமாக, இலங்கை அரசுக்கு அழுத்தங்கள் காணப்பட்டன. 2012ஆம் ஆண்டு தீர்மானத்துக்கு நாங்கள் உழைத்துக்கொண்டிருக்க, ராஜபக்சவுக்கு ஆதரவான முஸ்லிம் தலைமைகள், எங்களுக்கு எதிராகப் பிரசாரம் செய்தனர். 

வடக்கிலும் கிழக்கிலும், தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாகச் செயற்படவேண்டும். வடக்கு, கிழக்கில் தமிழ் மொழி முக்கியமான மொழியாக இருக்கவேண்டும். இந்தத் தீவில், அங்கிகரிக்கப்பட்ட மொழியாக தமிழ் மொழி இருக்க வேண்டும். இதைச் சிங்களத் தலைவர்களும் ஏற்றுள்ளனர். முஸ்லிம்கள், தமிழர்களையோ தமிழர்கள், முஸ்லிம்களையோ ஏமாற்ற முடியாது என்பதைச் சிந்தியுங்கள், அதேநேரத்தில், எம்முடன் வாழும் சிங்களவர்களும் அநீதி செய்யாது வாழவேண்டும். என்றதான மிக வலிமையான, அவசியமான கருத்துக்களை எதிர்கட்சி தலைவர் வெளிப்படுத்தியிருந்தார். 

இவ்வாறான உடன்பாடுகள் இரு சிறுபான்மை இனங்களுக்கும் இடையில் இடம்பெற வேண்டிய தேவை இருக்கின்றது என்பது வெளிப்படுகின்றது. நாட்டின் அரசாங்கத்தினாலும் தமிழ் மக்கள் கேட்கின்ற அவர்களது காணிகள், மீள்குடியேற்றம், காணாமல் போனோரை கண்டுபிடித்து வழங்குதல் போன்ற செயற்பாடுகளில் ஒரு சிலவற்றில் சிறு சிறு முன்னெடுப்புக்களும் புதிய அரசு பொறுபேற்றதில் இருந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் வரவேற்கதக்கதாகவும் அரசின் மீது நம்பிக்கை கொள்ள வைப்பதாகவும் இருக்கின்றது. அவற்றுள் ஓரிரு வாரங்களுக்குள் அரசினால் தமிழ் பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாடுகள் பற்றி பார்க்கின்ற போது, அண்மையில் யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில், கடந்த 26 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினர் வசமிருந்த தையிட்டி, மயிலிட்டி, காங்கேசன்துறை தெற்கு, மத்தி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 450 ஏக்கர் காணிகளையும், வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து, நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த மக்களில் காணிகள் இல்லாதவர்களுக்காக, மாவிட்டபுரம் சீமெந்துத் தொழிற்சாலைக்குச் சொந்தமான காணிகளில், மீள்குடியேற்ற அமைச்சின் நிதியுதவியின் கீழ், இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட 100 வீடுகளையும், உரிய பயனாளர்களிடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையளித்தார்.   

அந்தப் பகுதியில் இருக்கும் இரண்டு இராணுவ முகாம்கள், அவ்விடத்தில் இருந்து அகற்றப்பட மாட்டாதெனவும் மக்களின் பாதுகாப்புக்காக அவை அவ்விடத்தில் இருக்கும் எனவும், இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மகேஸ் சேனநாயக்க, கூறியிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.  

மன்னார்  தலைமன்னார் பிரதான வீதி 2 ஆம் கட்டை சந்தியில் அமைக்கப்பட்ட 'இளைஞர் படையணி' பயிற்சி நிலையத்தில் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக விசேட அதிரடிப்படையினர்  பாரிய முகமாக குறித்த பயிற்சி நிலையத்தை பயன்படுத்தி வந்தனர். விசேட அதிரடிப்படையினரின் மாவட்ட தலைமை அலுவலகமாகவும் குறித்த பயிற்சி நிலையம் செயற்பட்டு வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிலிருந்து வெளியேறியுள்ளனர். இவ்வாறான விடயங்கள் தமிழ் மக்களுக்கு பச்சைக் கொடியினை காட்டுவது போன்று அமைவதாக எண்ணத்தோன்றுகின்றது.

 மேலும் இலங்கையின் சகல பொலிஸ் நிலையங்களிலும் தமிழ் மொழியில் விசாரணைசெய்வதற்கும் முறைப்பாட்டினை பதிவுசெய்வதற்குமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தமிழ் பேசும் பொலிஸாரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதன் காரணமாக 25சதவீதம் தமிழ் பேசும் பொலிஸாரை சேவையில் இணைத்துக்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கூறியதற்கமைவாக, இவ்வாறான நகர்வுகள் ஆரோக்கியத்தன்மையாக அமையப்பெற்றாலும் சர்வதேசத்திற்கு எடுத்துகாட்டுவதற்காக செயற்படுகின்றதா? உண்மையில் தமிழ் மக்கள் மீது உள்ள அக்கறையில் மேற்கொள்ளப்படுகின்றதா? நாட்டில் நல்லாட்சி வலுப்பெற்றுள்ளது. என்பதை இனங்காட்டுவதற்காக செயற்படுகின்றதா? என்ற வினாக்கள் அரசியல் விமசகர்களிடையே எழப்பட்டாலும் உண்மையில் தமிழ் மக்கள் கேட்கின்ற பல விடயங்களில் ஒரு சில துரும்புகள் மட்டுமே செய்யப்பட்டிருகின்றது. 

நாட்டின் தமிழ் மக்கள் தமக்கான நீதி வேண்டி நிற்கின்றதான காலச்சூழலில் சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழுவின் சந்திப்பு, எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 7ஆம் திகதி வரை, சித்திரவதை மற்றும் மற்றைய கொடுமைகள், மனிதாபிமானமற்ற, இழிவுபடுத்தும் விதத்தில் நடத்துதல் அல்லது தண்டனை போன்றவை தொடர்பிலேயே இந்த ஆய்வு ஜெனீவாவில் இடம்பெறவுள்ளதாகவும், இதன்போது, இலங்கை மற்றும் மற்றைய நாடுகள் தொடர்பில் ஆராயப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான விடயங்களும் தமக்கான நீதி சர்வதேசத்தில் நிலைநாட்டப்படும் என்ற எண்ணமும் மக்களிடையே இருப்பதுடன், இச்சந்திப்பு குறித்து மிக அவதானத்துடனேயே இருக்கின்றனர். 

இலங்கை அரசாங்கம் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைக்கு விண்ணப்பித்திருக்கும் நிலையில் இது தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகிறது. இந்தப் பாராளுமன்றக் குழுவின் ஆய்வு அறிக்கை தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும். இவ்வாறான நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 12ஆம் திகதிக்குப் பின்னர் குறித்த வரிச்சலுகை இலங்கைக்கு மீள வழங்கப்படுமா? இல்லையா என்பது தொடர்பில் ஆரம்ப சமிக்ஞைகள் தென்படும். மே மாதம் 12ஆம் திகதி இச்சலுகையை வழங்குவதா?இல்லையா என ஐரோப்பிய ஆணைக்குழு தீர்மானிக்கும். அதேநேரம், இலங்கையில் இடம்பெற்ற தேர்தல்களின் பின்னரான மாற்றங்களில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக சிவில் அமைப்புக்களும் அரசியல் தரப்புக்களும் கூறுகின்றன. எனினும், உண்மையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை மக்கள் உணரக்கூடியதாக இருக்கவேண்டும். பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்பட்டு சர்வதேச தரத்திலான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அடிப்படைகளை பூர்த்தி செய்ய வேண்டும். ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகையை மீளப் பெற்றுக் கொள்வதற்கு 27 சர்வதேச சமவாயங்களை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும். என்ற விடயங்களை ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் டொங் லாய் மார்க் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தமையும், சகலதரப்பினரோடும் பேசியதன் மூலமாக புலப்படக்கூடிய மாற்றங்கள் தென்படுகின்றபோதும் இன்னும் பல விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டியிருப்பதாகவும் கூறியதில் இருந்தும் தமிழ் மக்கள் கேட்கின்ற சில விடயங்களை குறித்த வரிச்சலுகையை வைத்துக்கொண்டு நிறைவேற்ற கூடியதாக இருக்கும் என்பதுடன், அரசும் குறித்த வரிச்சலுகையை பெறும் நோக்கிலாவது ஒன்றியம் கூறும் விடயங்களை அமுல்படுத்தும் என்ற நம்பிக்கை கொள்ளக்கூடியதாகவும் உள்ளது. 

அவசர அவசரமாக காணாமால் போனவர்களுக்கான அலுவலம் அமைத்தல் சட்டம் நிறைவேற்றப்பட்டும் இன்றுவரை அதற்கான ஆணைக்குழு அமைக்கப்படாமை அரசினது இழுபறி நிலையையும், இவை வேகமாக அமுல்படுத்தப்பட்டதற்கும் தற்போது ஆணைக்குழு அமைக்காமை உள்ளமை பூச்சாண்டி காண்டுகின்ற செயலாக அல்லது மற்றவருக்காக நாங்கள் இவ்வாறான சட்டத்தினை நிறைவேற்றி விட்டோம் என்று  பாராட்டு பெறுவதற்காக செய்யப்பட்டவையோ? என்றதான சந்தேகங்கள் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது.

ஒருபக்கம் குற்றச்செயல்கள், இன்னோர் பக்கம் அரசினது சிறு சிறு முன்னேற்றகரமான செயற்பாடுகள், மறுபக்கம் சர்வதேச அமைப்புக்களின் உத்தியோகத்தர்களின் சந்திப்பு, கலந்துரையாடல் இடம்பெற்றாலும் தமிழ் மக்களது ஆர்பாட்டங்களும், உண்ணாவிரதங்களும் குறைந்தபாடில்லை. சிந்தும் கண்ணீரும் ஆறாய் சென்றுவிடும், நாட்டில் தீர்வு திட்டம் எப்போது வரும். எல்லாம் துடைப்பு கண்ணீருக்காகவா? வெகுவிரைவில் இதனை தீர்க்க வேண்டியது அரசினது பொறுப்பாகும். எல்லோரும் மனிதர்கள் எல்லோருக்கும் உரிமை இருக்கின்றது. என்ற நிலைவரும் போது தீர்வு கிடைக்கும் என்பதே நிதர்சனம்.