சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டும் கடந்த காலங்களில் இவ்வைத்தியசாலையில் சேவை புரிந்து உயிர்நீத்த மருந்தாளர் திரு.கணபதிப்பிள்ளை கங்காதரன் அவர்களினதும், சிற்றூழியர் திருமதி.யோகமணி குமாரலிங்கம், தாதிய உத்தியோகத்தர் திருமதி.S.ராஜேந்திரம் அவர்களினதும் நினைவாகவும் ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையினால் இன்று 17.11.2016 மாவட்ட வைத்திய அதிகாரி Dr.S.F.அல்மேடா அவர்களது தலைமையில் வைத்தியசாலை உத்தியோகத்தர்களினதும் ஊழியர்களினதும் ஒத்துழைப்புடன் இவ்வைத்தியசாலை வளாகத்தில் மாபெரும் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப்பிரிவில் கடைமை புரியும் பொறுப்பு வைத்திய அதிகாரி Dr.K.விவேகானந்தநாதன், பொறுப்புத்தாதிய உத்தியோகத்தர் திரு.T.ஜெயராஜா, தாதிய உத்தியோகத்தர்களான திருமதி.P.ஜெயச்சந்திரன், திருமதி.P.தயானந்தன், திருமதி.R.கிரிஷாந்தினி, சிற்றூழியர்களான திரு.M.குலராசா, M.இம்தியாஸ் ஆகியோர் கொண்ட குழுவினர் இவ்வைத்தியசாலைக்கு வருகைதந்து இவ்வளப்பெரிய இரத்ததான நிகழ்வை நடாத்த ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.
இந்நிகழ்வில் ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையின் பெரும்பாலான உத்தியோகத்தர்களும் ஊழியர்களும், மண்முனைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், பொதுமக்களும் மற்றும் நலன்விரும்பிகளும் தங்களது பூரண மனவிருப்பத்துடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இவ்வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுத் தலைவர் திரு.து.லெட்சுமிகாந்தனும் அக்குழுவின் ஏனைய அங்கத்தவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன் மேற்படி குழுவின்தலைவர் இரத்ததானம் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
எமது சமுதாயத்தில் ஏற்படுகின்ற நோய் நிலைமைகளுக்கேற்ப குருதியின் அவசியத்தேவையும் தற்போது அதிகரித்துள்ளது. இதனை கருத்திற்கொண்டு இப்பிரதேச வைத்தியசாலையின் வைத்திய உத்தியோகத்தர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள், துணை மருத்துவ சேவை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், சிற்றூழியர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இம்மாபெரும் இரத்ததான நிகழ்வை வெற்றிகரமாக நிழ்த்தியமைக்கு இவ்வைத்தியசாலை நிர்வாகம் தனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறது.
"உதிரம் கொடுப்போம் உயிரைக்காப்போம்-பிறரின் உயிரைக்காப்பதில் அனைவரும் ஒண்றிணைவோம்" எனும் தொனிப்பொருளுக்கமைய 50ற்கும் மேற்பட்ட கொடையாளர்களினால் நிகழ்த்தப்பட்ட இவ் இரத்ததான நிகழ்வு இவ்வைத்தியசாலை வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்திருப்பது சுட்டிக்காட்டத்தக்க ஒன்றாகும்.
இனிவருங்காலங்களிலும் இவ்வாறான சமூக சேவை சார்ந்த இரத்ததான நிகழ்வுகள் இவ்வைத்தியசாலையினால் நிகழ்த்தப்படவிருப்பது மேலும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.



























