மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில் உள்ள வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வாலமன்கேணி கிராமத்தில் உள்ள காணியின் வேலி மற்றும் வேலிக்கம்பங்களை இனந்தெரியாத நபர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸ் நிலையித்தில் முறையிடப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை 17.11.2016 நள்ளிரவு வேளையில் இச் சம்பவம் இடம்பெற்றிறுப்பதாக காணி உரிமையாளர் எஸ்.எம். மூமினா உம்மா தெரிவித்தார்.
இச்சம்பவம்பற்றி அவர் மேலும், தெரிவிக்கையில் 1976 ஆம் ஆண்டு தொடக்கம் எனது தந்தையார் இக் காணியினை பராமரித்து வந்தார்.
1990 இடம்பெற்ற யுத்தம் காரணமாக காரணமாக நாம் இக் காணியை விட்டு வேறு இடத்திற்கு இடம்பெயர நேரிட்டது.
பின்னர் நாம் விட்டுச்சென்ற இக் காணியை படையினர் கைப்பற்றி வைத்திருந்தனர்.
கடந்த 08 வருடங்களுக்கு முன் படையினர் இவ் விடத்தைவிட்டு அகன்ற பின் நாம் எமது காணியில் மீண்டும் குடியேறினோம்.
எனது தந்தையாரின் பெயரிலிருந்த இக் காணியினை நான் வாகரை பிரதேச செயலகத்தினூடாக எனது பெயரில் மாற்றியெடுத்தேன் அதற்கான ஆதாரங்களும் என்னிடம் உள்ளது.
ஆனால், தற்போது எமது கிராமத்தின் கிராமசேவையாளர் இக் காணியினை விட்டுத்தருமாறும் அதற்காக தமக்கு மாற்றீட்டு காணியொன்றையும் வழங்குவதாகவும் கூறினார் அதை நாம் மறுத்ததையிடத்து தொடர்ந்தும் எமக்கு அக் கிராமசேவகரினால் பிரச்சினை வந்த வண்ணமே இருந்தது.
இது தொடர்பில் நாம் பொலிஸாரிடமும் காணி சம்மந்தமான அதிகாரிகளிடமும் அறிவித்திருந்தோம் அதன் பின் சற்று காலங்களுக்கு எந்தவித பிரச்சினை இல்லாமலிருந்தது.
ஆனால் தற்போது இந்த கிராம சேவகரினால் மீண்டும் தொந்தரவு ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸில் முறையிட்டுள்ளோம்.' என்றார்.






















