(படுவான் பாலகன் ) மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை ஆற்றின் மேலாக அமைக்கப்பட்டுள்ள பாலத்தில் அமையப்பெற்றுள்ள மின்குமிழ் பல மாதங்களாக ஒளிராத நிலையில் பாலமானது இருளில் சூழந்து காணப்படுகின்றது. இதனால் இப்பாலத்தின் ஊடாக பயணிக்கும் பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். இதனை கருத்தில் கொண்டு உரிய மின்குமிழ்களினை ஒளிரச்செய்வதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு 12.10.2016ம் திகதி நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலும் கூறியும் இதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக முடிவு செய்தும் நாளைய தினம்(08.11.2016) மீண்டும் இப்பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இன்றுவரை மின்குமிழ்கள் ஒளிரவில்லை என மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டும் நிறைவேற்றப்படாமையினால் குறித்த கூட்டங்கள் நடத்துவதில் என்ன பலன் உள்ளது என்பதான கேள்விகளையும் இப்பிரதேசத்து மக்கள் தொடுகின்றனர். தமக்கான சிறுமின்குமிழ் பிரச்சினைகள் கூட தீர்க்;கப்படாத நிலையில் பிரதேசத்தில் இருக்கின்ற ஏனைய பிரச்சினைகள் தீர்க்கப்படுமா? ஒருங்கிணைப்பு குழுவினை அன்றி தீர்வினை பெறுவதற்கு யாரினை நாடவேண்டும்? போன்ற வினாவினையும் மக்கள் எழுப்புகின்றனர். நாளைய கூட்டத்திலும் இதுதொடர்பில் மக்கள் பேசினாலும் மீண்டும் மண்முனைப்பாலம் இருள்சூழ்ந்த பாலமாகத்தான் இருக்கும் என மக்கள் வெறுப்புடன் கூறுகின்றனர்.
மண்முனை துறைக்கான பாலம் அமைக்கப்பட்டு 2014.04.19ம் திகதி அப்போது ஆட்சியில் இருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களினால் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டது. அன்றிலிருந்து மின்குமிழ்களும் சிறப்பாக ஒளிர்ந்தது. சிறிது காலத்தின் பின்பு மின்குமிழும் ஒளிரவில்லை. இது தொடர்பாக பலரிடம் குறிப்பிட்டும், ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டும் மீண்டும் ஒரு வருடங்களின் பின்பு 12.10.2015ம் திகதி ஒளிரச்செய்யப்பட்டது. ஒளிரச்செய்யப்பட்டு சிறிது நாட்களின் பின்பு மீண்டும் ஒளிரவில்லை. அன்றிலிருந்து இன்றுவரை மண்முனை பாலம் இருளாகவே உள்ளது.
எனவே குறித்த பாலத்தின் மின்குமிழை ஒளிரச்செய்யுமாறு மக்கள் மீண்டும், மீண்டும் கோரிக்கை விடுக்கின்றனர்.












