"மதங்கள் மதம் கொண்டால் மானுடம் அழியும்" : தேசிய நல்லிணக்கத்தில் மத ஒருமைப்பாடு

(படுவான் பாலகன்) இலங்கை ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடாக அமைந்துள்ளதுடன் இங்கு பல்வேறு மதத்தினை சேர்ந்தவர்கள் வாழ்கின்ற போதிலும்  2012ம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின் படி இலங்கையின் பிரதான மதங்களின் அடிப்படையில் 70.19வீதமான  பௌத்தர்களும், 12.61வீதமான இந்து சமயத்தவரும், 9.71வீதமான இஸ்லாம் சமயத்தவரும், 7.45வீதமான கிறிஸ்தவர்களும் வாழ்கின்றனர். இவர்களுள் சிங்களவர் பெரும்பாலாகத் தேரவாத பௌத்தத்தை பின்பற்றுபவர்களாகவும், தமிழர் பெரும்பாலாகச் சைவ சமயிகளாகவும்,  சிங்களவர்களிலும், தமிழர்களிலும் குறிப்பிட்ட ஒரு பகுதியினர் கிறிஸ்தவர்ககளாகவும்,  சோனகர் என்ற இனத்தைச் சேர்ந்த முஸ்லிங்கள் இஸ்லாத்தை பின்பற்றுவோராகவும், பெரும்பாலும் தமிழ் பேசக்கூடியவர்களாகவும் இருக்கின்றனர். 

இவ்வாறான நாட்டில் முப்பது வருடங்களுக்கு மேலாக இனரீதியாக இடம்பெற்ற பாகுபடுத்தலினால் பாரிய யுத்தமும் இடம்பெற்று அதனால் அளவிட்டு சொல்லமுடியாத உயிர்சேதங்களும், உடைமை சேதங்களும் இடம்பெற்று மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மீண்டுவராத சூழலில் 2015ம் ஆண்டில் இருந்து நல்லாட்சி என்ற எண்ணக்கரு புகுத்தப்பட்டு ஆட்சியும் நடைபெறுகின்ற நிலையில் மதரீதியான முரண்பாடுகளினால் மீண்டும் ஒரு அவலம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் பலர் மத்தியில் எழுந்திருக்கின்றது.


மதங்கள் அனைத்துமே அன்பு, கருணை, இரக்கம், சாந்தி, சமாதானம் போன்ற நல்ல உயரிய பண்புகளை வலுயுறுத்தியே நிற்கின்ததே தவிர முரண்பாடுகளை எந்த மதமும்  விரும்பவில்லை. அரசியல் தேவைகளுக்காவும், ஒருசிலரின் சுயநல போக்குக்காகவும் மதங்களை பயன்படுத்துகின்ற போதிலே முரண்பாடுகள் வளர்க்கப்படுகின்றது.

உலகம் முழுவதும் இன்று சுமார் முப்பத்தெட்டு கோடிப்பேர் பின்பற்றும் பௌத்தம், புத்தம், புத்தர் என்ற சொற்கள் அறிவு, புத்தி என்ற பதங்களையே குறித்து நிற்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்ற இந்து சமயத்திலும் பஞ்சமா பாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும். மற்றும் ஒவ்வொரு மனிதனும் பின்பற்ற வேண்டிய சிறந்த ஒழுக்கலாறுகள் போன்றபற்றியும் மிகத்தெளிவாக கூறியிருக்கின்றது. அதே போன்று 'இஸ்லாம்' என்ற சொல்லுக்கு கீழ்ப்படிதல், அடிபணிதல், ஒப்படைத்தல், இறைவனை மட்டுமே வழிபடுதல், கட்டளைகளை நிறைவேற்றுதல் என்பது பொருளாகும். இறைவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து, அவனது ஏவல்களை நிறைவேற்ற வேண்டிய கட்டளைகள் நிரம்பி இருப்பதால், நிரம்ப இருப்பதால் இதற்கு 'இஸ்லாம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இஸ்லாம் என்ற வேர்ச்சொல்லின் உள்ளார்ந்த பொருள் 'அமைதி, சாந்தி' என்றும் கூறப்படுகின்றது.

கிறிஸ்தவ சமயத்தின் முதன்மையான பத்துக்கட்டளைகளாக உண்மையான கடவுளை நம்பி ஏற்றிடுக (போலி தெய்வங்களை ஒதுக்குதல்), ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தல் ஆகாது, ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடி, உன் தந்தையையும் தாயையும் மதித்து நட, கொலை செய்யாதே, விபசாரம் செய்யாதே, களவு செய்யாதே, பொய்ச்சான்று சொல்லாதே, பிறர் மனைவியை விரும்பாதே, பிறர் உடைமையை விரும்பாதே. போன்ற விடயங்களை வலிறுத்தி நிற்கின்றது. இவ்வாறாக பார்க்கின்றபோது மதங்கள் நல்ல விடயங்களையே கூறுகின்றது. 

உலகில் பல மதங்களை பலரும் பின்பற்றுகின்ற போதும் எந்த மதத்தினையும் பின்பற்றாமலும் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.  அமெரிக்கா நாட்டின் ஆளுணராக இருந்த இங்கர்சால்  மானுட அன்பே உலகிலேயே தலைசிறந்த நெறி. இறைநம்பிக்கை, போதனை, செபம் இவற்றைவிட மனிதர்களை அன்பு செய்வதே உயர்ந்தது என வாதிட்டார். கடவுளை அன்பு செய்வதைவிட மனிதனை அன்பு செய்வதே முக்கியம் என்றார் மதத்திற்காக ஒருபக்கம் செயற்பட்டுக்கொண்டிருக்க இன்னோர் பக்கம் மானிட அன்பினை அடையாளமாக கொண்டு இங்கர்சால் போன்றவர்களை போன்றோரும் இருந்து வருகின்றனர். 

இலங்கையில் உள்ள அரசியலமைப்பின் படி பௌத்த சமயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அதைப்பேணுவதை அரச கடமையாக வரையறை செய்கிறது. இவ்வாறான சட்டத்தினை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அரசியல்வாதிகளும், மதவாதிகளும் தவறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமையால் நாட்டிலே ஏனைய மதங்களுக்கிடையில் முரண்பாடுகளும் ஏற்பட்ட வரலாறுகள் உள்ளதுடன், தற்போதும் ஏற்பட்டு வருகின்றது. இலங்கை அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் ஆளொவ்வொருவரும், தான் விரும்பும் மதத்தை அல்லது நம்பிக்கையை உடையவராயிருத்தற்கான அல்லது மேற் கொள்ளுவதற்கான சுதந்திரமுட்பட, சிந்தனை செய்யும் சுதந்திரம், மனசாட்சியை பின்பற்றும் சுதந்திரம், மதசுதந்திரம் என்பவற்றிற்கு உரித்துடையவராதல் வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கின்றது. அரசியலமைப்பிலே பௌத்தசமயம் முதன்மைபடுத்தப்பட்டதற்கான காரணம் அக்காலத்தில் இருந்த தீவிரமதவாதிகளின் செயற்பாடு என்று கூறப்படுகின்றது. நாட்டினது ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் பௌத்த சமயத்தவர்களாகவே இருக்க வேண்டும் என்று அப்போதைய நிலையில் கூறப்பட்டதுடன் அவை அரசியலமைப்பில் உள்வாங்க வேண்டும் என்ற வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. அவ்வாறு அரசியலமைப்பில் இடம்பெற்றால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படவாய்ப்புள்ளது. என்றதான நிலையில் ஒன்றும் செய்ய முடியாத காரணத்தினால் பௌத்தசமயம் முதன்மைப்படுத்த வேண்டும் என்ற நிலை உருவாகி அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டது என்றதான கருத்துக்களும் உள்ளது. 

அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட காலம் இருந்து யுத்தம் மௌனித்து புதிய ஆட்சி அமைக்கும் வரையும் பல வன்முறைகள் மதம்சார்ந்து இடம்பெற்றது. இதனால் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டிருந்ததுடன், மதத்தலங்களும் உடைக்கப்பட்டது. 2009ம் ஆண்டு நவாலி தேவாலயத்தில் 3000பேர் கூடி இருந்தபோது வானுர்திமூலம் தாக்குதல் நடாத்தப்பட்டது. இதனால் 200க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர், பலர் அங்கவீனமாக்கப்பட்டனர், தேவாலயம் அழிக்கப்பட்டது. இதுபோன்ற பல சம்பவங்கள் அரங்கேறியது. ஆனாலும் மீண்டும் ஒருமுறை மதரீதியான வன்முறைகள் இடம்பெறாது என நல்லாட்சியில் மக்கள் நம்பிக்கை கொண்டாலும், 2015ம் ஆண்டு புதிய ஜனாதிபதி பதவியேற்றதில் இருந்து இன்றுவரை மதரீதியான வன்முறைகள் பல இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. கிறிஸ்தவ சமயத்திற்கு எதிராக இதுவரை 177வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. அவற்றில் 83வன்முறைகள் அரச அதிகாரிகள், உள்ளுராட்சி அதிகாரிகள்,  உயர்மட்ட அதிகாரிகள், பிரதேச செயலாளர் போன்ற பலதரப்புக்களாலும் இவ் வன்முறைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவை சொத்து, உடல், மரண அச்சுறுத்தல், பாகுபாடு, மயாணங்களிலே இறந்தவர்களின் உடல்களை புதைக்கசெல்லும் போது தடைவிதித்தல், ஆலயங்கள் இழுத்து மூடல் போன்ற வன்முறை செயற்பாடுகளே பதிவு பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது. 

அதேபோன்று இந்துசமய கோயில்கள் பலவும் குறித்த காலப்பகுதிக்குள் தாக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக சம்மாந்துறை கோரக்கர் கோயில் கிராமத்திலுள்ள அகோரமாரியம்மன் ஆலயமும் அதேவளாகத்திலுள்ள பழம்பெரும் பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றில் ஆலயத்தில் சுற்றியிருந்த பரிவாரமூர்த்தி ஆலயங்களில் உள்ள சுவாமிகள் சுருவங்களை இனம் தெரியாதவர்கள் உடைத்து தலைகீழாக மண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றது. அதேபோன்று செட்டி வீரக்குளம் பகுதியில் அம்மன் சிலை உடைக்கப்பட்டது. 31.10.2016ம் திகதி லிந்துலை வோலட்ரீம் தோட்டம், கொணன் பிரிவிலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், உடைக்கப்பட்டு, அம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. திருகோணமலை, வெருகல்- கல்லடி கிராமத்திலுள்ள மலைநீதியம்மன் கோயிலின் மடப்பள்ளி தீயிட்டு எரிக்கப்பட்டது. வவுனியா ஓமந்தை வேலர்சின்னக்குளத்தில் அமைந்துள்ள புராதன வீரபத்திரர் கோயிலின் விக்கிரகங்கள் மற்றும் கட்டிடங்கள் இனந்தெரியாதோரால் சேதமாக்கப்பட்டன. மன்னார் மடுவிற்கு செல்லும் பகுதியில் இந்து ஆலயம் அமைக்கப்பட்டு பின் இனந்தெரியாதவர்களினால் உடைக்கப்பட்டது. 

அதேபோன்று பள்ளிவாயல் சிலவும் தாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குருநாகல் நிக்கவெரட்டிய ஜும்ஆ பள்ளிவாயல் பெற்றோல் குண்டுகள் மூலம் தாக்கப்பட்டது. குருநாகல் நகர எல்லைக்குள் அமைந்திருக்கும் தெலியாகொன்ன ஜும்ஆ பள்ளிவாசல் இனந்தெரியாத நபர்களினால்; கல்லெறிந்து தாக்கி சேதப்படுத்தப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று மாநகர எல்லைக்கு உட்பட்ட புட்டம்பை மஸ்ஜிதுல் ஜலாலீயா பள்ளிவாசல் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டது. இவ்வாறான சம்பவங்கள் நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டதற்கு பின்பு நடைபெற்றிருப்பதுடன், கேகாலைப்பிரதேசத்தில் உள்ள ஒரு இடத்தில் இருக்கின்ற பாடசாலை தரம் 11வரை கற்கின்றதாக அமைக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய உயர்தர கற்றலை தொடருவதற்கு அருகாமையில் உள்ள முஸ்லிம் இனத்தவர்கள் கற்கின்ற பாடசாலைக்கு செல்லுகின்ற போது அவர்களது மதக் கலாசாரத்தினை பின்பற்றுமாறு கூறப்படுகின்றது. இதனால் மாணவர்களிடையே விரக்தியும், சமூகங்களிடையே முரண்பாடுகள் ஏற்படுகின்றன. 

அண்மையில் அமைந்துள்ள இந்திய நாட்டு அரசியலமைப்பில் எந்த மதத்தினையும் முன்னுரிமைப்படுத்தப்படவில்லை. எல்லாமதத்திற்கும் சமமான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதனால் எந்தமதத்தவரும் ஜனாதிபதியாக வரக்கூடிய நிலை அந்த நாட்டிலே இருக்கின்றது. இலங்கை அரசியலமைப்பிலே பிரிவு ஒன்பதில் குறிப்பிடப்பட்டுள்ள புத்தசாசனத்தினை பாதுகாத்து போசிப்பது வளர்ப்பது அரசின் கடமையாக இருந்துவரும் எனும் பகுதியை புதிய அரசியலமைப்பு திருத்தம் ஏற்பட்டாலும் அதில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படாது என்றும் அரசியல்வாதிகள் கூறுக்கொண்டிருக்கின்றனர். அவற்றில் மாற்றம் கொண்டுவரப்படவேண்டும் என சிறுபான்மையானவர்கள் எதிர்;பார்க்கின்றனர். இதன்மூலமாக மத ஒருமைப்பாட்டை பேணமுடியும் என்பது சிறுபான்மையினரது எண்ணமாக இருக்கின்றது. 

வடகிழக்கு பகுதியிலே பௌத்தர்கள் வாழ்விடங்களினை கொண்டிராத  பகுதிகளிலும் விகாரைகள், புத்தர் சிலைகள் நிறுவப்படுகின்றதாகவும் இதனாலும் சமூகங்களுக்கிடையிலே முரண்பாடுகள் தோற்றியுள்ளன. அதேபோன்று மதத் தலைவர்களின் அடாவடித்தனங்களும் அம்மதத்தின் நோக்கத்தினை பிழையாகவும், எல்லாத்தலைவர்களையும் தவறாக நோக்கவேண்டிய நிலையும் இருக்கின்றது. குறிப்பாக வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை கிராமமான கெவிளியாமடுவில் வைத்து மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய சுமரத்ன தேரர் கிராமசேவை உத்தியோகத்தர் ஒருவரை பார்த்து மிகவும் கேவலமான வார்த்தைகளால் பேசினார். இவ்வாறான செயற்பாடுகள் மிகவும் பாரதூரமானது என்பதுடன் பல்வேறு விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடியது. 

தான் பிறந்த சமயத்தைத்தான் பின்பற்ற வேண்டும் என்பது மரவாக இருந்தாலும் எந்தவொரு நபருக்கும் தாம் விரும்பிய மதத்தினை பின்பற்றுவதற்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஒரு மதத்தவர் வாழ்கின்ற பிரதேசத்தில் தமது வழிபாட்டுக்காக மதத்தலங்கள் அமைக்கப்படுவதற்கும் சுதந்திரம் இருக்கின்றது. ஆனால் வாழ்விடத்தினை கொண்டிராத பகுதிகளில் மதத்தலங்களை அமைத்தல், அரசியல் ரீதியாக மதத்தலங்களை அமைத்தல் என்பன மேற்கொள்ளமுடியாது அவை சட்டத்திற்கு விரோதமானது எனக்கூறப்படுகின்றது. 

மதத்தினை பாவித்து இன்னோர் மதத்துடன் கலகங்களை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளை எந்ததொரு மதமும் விரும்பாத நிலையில், சமயசித்தாந்தங்களை விளங்கிக் கொள்ளதவர்கள் தங்களது அரசியல் நகர்வுகளுக்காக செய்யப்படும் செயற்பாடுகளால்தான் தற்போது மதரீதியான முரண்பாடுகள் ஆங்காங்கே இடம்பெற தோன்றியிருக்கின்றது. குறிப்பாக நாட்டில் இருக்கின்ற பொதுபலசேனா போன்ற குழுக்களினால்தான் அதிகமான மதரீதியான முரண்பாடுகள் இடம்பெறுகின்றதாக அறியமுடிகின்றது. மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை ஒருமைப்பாட்டினை பெறும் பொருட்டு ஜனாதிபதியின் தலைமையின் கீழ் சர்வசமய பேரவை அமைக்கப்பட்டு செயற்பட்டுக்கொண்டிருப்பது வரவேற்தக்க விடயமாக இருந்தாலும். நாட்டிலே தற்காலத்தில் தீவிரமாக, மூர்க்கத்தனமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் குழுக்களுக்கு இடமளிக்காத வகையில், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மீதும் வழக்குதொடர்ந்து தீர்ப்பதற்கும். எல்லா மதங்களும் உரிய சுதந்திரத்தினை பெற்றுக்கொடுக்கும் வகையிலும், சட்டவிரோதமான முறையில் அமைக்கப்படும் மதத்தலங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டும். கணிசமான மக்கள் நல்லாட்சி, நல்லிணக்கம், ஒருமைப்பாடு போன்றவற்றை விரும்பி நிற்கும் சூழலில் இடைஇடையே இருக்கின்ற கறுப்புக்களை நீக்கிவிடுவதற்கு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். மத நல்லிணக்கத்தினை பேணுவதில் அனைவரும் விரும்புகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் ஆலயத்திற்கு பௌத்தர்கள், இந்துக்கள் அனைவரும் சென்று வழிபடுகின்றனர். அதேவேளை அவ்வாலய உற்சவத்தின் போது இந்து சமயத்தின் ஊர்வலம் ஆலயத்தில் இருந்து அம்பாறையில் உள்ள பௌத்தவிகாரைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்த இந்துக்கள் அனைவருக்கும் சிற்றூண்டிகளும் வழங்கி வரவேற்ற சிறந்த நல்லிணக்கத்தினை அங்கு காணமுடிந்தது. எல்லோரும் அன்பையையும், ஆசிர்வாத்தினையுமே வேண்டுகின்றோம் அவற்றினை பெறுவதற்கு நாம் அழைக்கின்ற பெயர்கள் மாத்திரமே வேறுபட்டவை ஆனால் பொதுவாக எல்லோரும் மனிதர்களே. என்ற உயரிய சிந்தனையுடனும் ஆட்சியில் ஏறும் ஆட்சியாளர்களும் மதச்சுதந்திரனை பேணிணால் மத ஒருமைப்பாடும் நிலையாய் நிற்கும் என்பது நிதர்னம்.