புங்குடுதீவு சிதைவுறும் நிலம் ஆவணப்பட திரையிடலும் கலந்துரையாடலும்

புங்குடுதீவு சிதைவுறும் நிலம் ஆவணப்பட திரையிடலும் கலந்துரையாடலும் மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக இராஜதுரை அரங்கில் நாளை(23) புதன்கிழமை மாலை 03மணிதொடக்கம் 05மணி வரை நடைபெறவுள்ளது. 


கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் ஏற்பாட்டில் நிறுவக நடன, நாடகப் பீட இணைப்பாளர், கலாநிதி சர்மிளா ரஞ்சித்குமார் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் ஆவணப்பட அறிமுக உரையை கிழக்கு லண்டன் பல்கலைக்கழக மானிடவியற்துறை ஆய்வாளர் தங்கேஸ் பரம்சோதி நிகழ்த்தவுள்ளார். மேலும் கலந்துரையாடல் வழிப்படுத்துனராக நிறுவக பணிப்பாளர் கலாநிதி சி. ஜெயசங்கர் செயற்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த ஆவணப்படமானது,  இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள புங்குடுதீவில் தங்கேஸ் பரம்சோதியினால் மேற்கொள்ளப்பட்ட கலாநிதிப் பட்டப்படிப்புக்கான மானிடவியல் களஆய்வுக் கற்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. மூன்று தசாப்த்தங்களாக இடம்பெற்ற ஆயுத யுத்தத்தினாலும், புங்குடுதீவில் வாழ்ந்த மக்களின் பாரிய உள்ளுர் , வெளியூர் இடப்பெயர்வுகளினாலும் தற்பொழுது புங்குடுதீவு எதிர்கொண்டுள்ள நிலம்சார்ந்த பிரச்சினைகளை இந்த ஆவணப்படம் முன்னிறுத்துகின்றது. 

ஆயுத யுத்தம் முடிவுற்றதொரு சூழலில் தாய்நாட்டுக்கு வெளியே சிதறி வாழும் உறவுகளை மீளிணைக்கும் ஒரு யுத்தியாகத் தமது சமுதாயக் கோயில்களை மீளக்கட்டுவிக்கின்ற புலம்பெயர்ந்து வாழும் ஊர்பற்றுள்ள தமிழர்களினதும், உள்ளூரில் வாழும் அவர்களது உறவினர்களினதும் முயற்சிகள் இங்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. நாளாந்த வாழ்வில் புங்குடுதீவில் வாழும் மக்கள் எதிர்கொள்கின்ற வாழ்விடம், தண்ணீர், விவசாயம், பாதுகாப்பு, சாதியம், மதம் முதலிய பல சிக்கலான பிரச்சினைகளையும் இந்தப் படம் வெளிக்கொண்டுவருகின்றது. 

ஆவணப்பட திரையிடல், கலந்துரையாடலுக்கும் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்பு விடுக்கின்றனர்.