கல்முனை
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் தொற்றா நோய்ப் பிரிவினால்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நீரிழிவு நோய் தொடர்பான மாபெரும் விழிப்புணர்வு
ஊர்வலமும் ஒன்றுகூடலும் அக்கரைப்பற்றில் நேற்று (21) இடம்பெற்றிருந்தன.
கடந்த
நவம்பர், 14 ஆந் திகதி உலகெங்கும் அனுஸ்டிக்கப்பட்ட உலக நீரிழிவு தினம் தொடர்பில் கல்முனை
பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழுள்ள ஆலையடிவேம்பு மற்றும் அக்கரைப்பற்று
பிரதேசங்களின் அரச பணியாளர்களுக்கான விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை
முன்னெடுக்கும் நோக்கோடு நடாத்தப்பட்ட குறித்த நிகழ்வுகளின் பிரதம அதிதியாக
கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் கலந்து
சிறப்பித்ததுடன், விசேட அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல்.அலாவுதீனும்,
சிறப்பு அதிதிகளாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்
ஐ.எம்.ஜவாஹிர், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், அக்கரைப்பற்று உதவி பிரதேச
செயலாளர் எம்.எஸ்.எம்.ரஸ்ஸான் உட்பட அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசங்களின்
சுகாதார வைத்திய அதிகாரிகள், பலதரப்பட்ட வைத்தியத்துறை சார்ந்த வைத்திய அதிகாரிகள்,
ஏனைய அரச திணைக்களங்களைச் சேர்ந்த உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் எனப்
பெருமளவானோர் பங்குபற்றியிருந்த குறித்த மாபெரும் விழிப்புணர்வு நிகழ்வானது ஆலையடிவேம்பு
பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்
பணியாளர்கள் இணைந்து பங்குபற்றிய விழிப்புணர்வு சுலோகங்களை ஏந்திய ஊர்வலத்துடன்
ஆரம்பமானது.
அக்கரைப்பற்று
மணிக்கூண்டுக் கோபுரச் சந்தியிலிருந்து ஆரம்பமான ஊர்வலத்தில் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார
வைத்திய அதிகாரி, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர், அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையின்
மாவட்ட வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உள்ளடங்கலாக பெருமளவிலான
அரச உத்தியோகத்தர்கள் பங்கெடுத்திருந்தனர்.
குறித்த
ஊர்வலம் அக்கரைப்பற்று பிரதான வீதியூடாக ஆதார வைத்தியசாலையை அண்மித்ததும் அங்கு
காத்திருந்த அமைச்சர் தலைமையிலான அதிகாரிகள் குழாம் ஊர்வலத்தோடு இணைந்து
அக்கரைப்பற்று பிரதேச செயலகம் வரை சென்று பின் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உலக நீரிழிவு தின விழிப்புணர்வு ஒன்றுகூடல் நிகழ்வு அமைச்சரால்
ஆரம்பித்துவைக்கப்பட்டது.
ஆரம்பத்தில்
அதிதிகள் உரைகள் இடம்பெற்றதுடன், நீரிழிவு நோயின் தாக்கமும் அதன் சமுக அபாயங்களும்
தொடர்பான தெளிவூட்டல்களை இருவேறு பகுதிகளாக வகுத்து, அதன் முதல் பகுதியை கல்முனை
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் தொற்றா நோய்ப் பிரிவின் தலைமை
வைத்தியர் ஏ.ஆர்.எம்.ஹாரிஸ் முன்னெடுத்ததுடன், இரண்டாவது பகுதியை சம்மாந்துறை ஆதார
வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் திருமதி. ஆபிதா அப்துல் கையும்
நடாத்தியிருந்தார்.












